பொது செய்தி

தமிழ்நாடு

நிலைமை கட்டுக்குள் வர மக்களிடம் விழிப்பு அவசியம்!

Updated : மார் 25, 2020 | Added : மார் 24, 2020
Share
Advertisement
 நிலைமை கட்டுக்குள் வர மக்களிடம் விழிப்பு அவசியம்!

கோயம்பேடு:தமிழகம் முழுவதும், 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் அலைமோதிய மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலைமை கட்டுக்குள் வர, மக்களிடம் போதிய விழிப்பு வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும், 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மத்திய - மாநில அரசுகள், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. முதற்கட்டமாக, மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ள இடங்களான, வணிக வளாகம், தியேட்டர்கள், மத வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டன.இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும், 'ஜனதா கர்ப்யூ' எனும், மக்கள் ஊரடங்கிற்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, அன்றைய தினம், மக்கள் வீடுகளிலேயே இருந்து கடைப்பிடித்தனர்.உலக அளவில், 160க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவும் கொரோனாவை கருத்தில் வைத்து, தமிழகம் முழுவதும், நேற்று மாலை, 6:00 மணி முதல், 31ம் தேதி வரை, தமிழகத்தில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, தமிழகம் முழுவதும், 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் அலைமோதிய மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
காய்கறி விலை, 'கிடுகிடு'
கோயம்பேடு மார்க்கெட்டில், நேற்று காலை முதல், காய்கறி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தும், போதிய கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், அனைத்து காய்கறிகளும், கிலோவிற்கு, 10 - 15 ரூபாய் அதிகரித்து.சில நாட்களுக்கு முன், கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனையான கேரட், 40 -- 45 ரூபாய்க்கும், 10 -- 15 ரூபாயக்கு விற்பனையான முள்ளங்கி, 25 -- 30 ரூபாய்க்கும் விற்பனையானது.இது குறித்து காய்கறி சில்லரை மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார் கூறியதாவது:மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் இருமடங்கானது. கோயம்பேடு மார்க்கெட் தொடர்ந்து இயங்கும். இதனால், பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி குவிக்க தேவையில்லை.
பொதுமக்கள் மார்க்கெட்டிற்கு வராமல், வியாபாரிகள் மட்டும் அனுமதித்தால், கூட்டம் குறைத்து, கொரோனா பரவலை தடுக்க முடியும். காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய மாட்டோம் என, வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
பயணியர் ஏமாற்றம்
குன்றத்துார் பேருந்து நிறுத்தத்தில், அரசு பேருந்துகளுக்கு, பேரூராட்சி ஊழியர்கள், கிருமி நாசினி தெளித்தனர். பயணியர் இடைவெளி விட்டு, பேருந்தில் ஏற வசதியாக, கோடு போடப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று, கடைசி தேர்வு என்பதால், ஏராளமான மாணவர்கள், பேருந்து நிறுத்தத்தில் குவிந்தனர். ஆனால், சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால், வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும் என்ற நம்பிக்கையில் வந்தவர்கள், ஏமாற்றம் அடைந்தனர். சிறிது நேரத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இதனால், வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் பெரும் சிரமப்பட்டனர். மாணவர்கள், பெற்றோரை வரவழைத்து, 'டூ - வீலரில்' பள்ளிக்கு சென்றனர்.
குவிந்த, 'குடி'மகன்கள்
'டாஸ்மாக்' கடைகள், நேற்று மாலை, 6:00 மணிக்கு மூடப்படும் முன், மது பாட்டில்களை வாங்கி குவிக்க திட்டமிட்டனர். இதன்படி, நேற்று மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள, பல்லக்கு மாநகரில் உள்ள, மூன்று கடைகளில், நுாற்றுக்கணக்கான 'குடி'மகன்கள், கடை திறந்த உடன், மொத்தமாக குவிந்தனர்.இவர்கள் எந்தவித பாதுகாப்புமின்றி, இடைவெளி இல்லாமல், வரிசையில் நின்று ஒவ்வொருவரும் குறைந்தது, நான்கு முதல் 5 பாட்டில்களை வாங்கி, 'பேன்ட் பாக்கெட் மற்றும் இடுப்பில் சொருகியபடி சென்றனர். கொரோனா நோய் குறித்த, எந்தவித பயமும் இன்றி, குடியே பிராதானம் என இருக்கும் 'குடி'மகன்களை கண்டு, மக்கள் தலையில் அடித்து கொண்டனர்.
ஒரு வார பொருட்கள்
ஒரு வாரத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சி வாங்க, கொத்தவால்சாவடி சந்தைகளில் மக்கள் குவிந்தனர். நேற்று காலை முதல் மாலை வரை, மக்கள் கூட்டம் அலைமோதியது.வீட்டிற்கு வேண்டிய அனைத்து மளிகை சாமான்கள், காய்கறிகள், பழங்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதேபோல், புதுவண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், அப்பகுதியே பெரும் பரபரப்பாக காட்சியளித்தது.
மீன் விலை, 'விர்ர்ர்...!'
காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் விடியற்காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன், இறைச்சி பொருட்களை வாங்கி மக்கள் பதப்படுத்தி கொண்டனர். தற்காலிகமாக மீன் விலையும், 35 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்தது.நேற்றைய தினம் இது போன்று, பல்வேறு இடங்களில் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. நிலைமை கட்டுக்குள் வர, மக்களிடம் போதிய விழிப்பு வேண்டும்.தனித்திருப்பதை விட இதை தடுக்க தற்போது வேறு வழி இல்லை. அதனால், இதுபோன்று கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என, மருத்துவர்கள் பலர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X