வருமான வரி கணக்கு தாக்கல் கெடு நீட்டிப்பு கட்டணமின்றி பிற வங்கி ஏ.டி.எம்,ல் பணம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

வருமான வரி கணக்கு தாக்கல் 'கெடு' நீட்டிப்பு கட்டணமின்றி பிற வங்கி 'ஏ.டி.எம்,'ல் பணம்

Added : மார் 25, 2020
Share

புதுடில்லி : கடந்த நிதியாண்டின், வருமான வரி கணக்கு தாக்கலுக்கான 'கெடு' நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறையினர், கொரோனா வைரஸ் தாக்கத்தால், ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை குறிப்பிட்டு, பல்வேறு சலுகைகளை கோரி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் பல்வேறு சலுகைகளை நேற்று அறிவித்தார். அதன் விபரம்:
கடந்த, 2018--19ம் நிதியாண்டின், வருமான வரி கணக்கு தாக்கலுக்கான இறுதி தேதி, மார்ச், 31லிருந்து, ஜூன் 30க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கணக்கு தாக்கலுக்கான காலதாமத கட்டணம், 12 சதவீதத்தில் இருந்து, 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
வருமான வரி துறையின், 'பான்' எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணை, ஆதார் உடன் இணைப்பதற்கான கெடு, வரும், 31ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இது, தற்போது, ஜூன், 30 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வருமான வரி நிலுவை தொடர்பான வழக்குகளை, சில சலுகைகளுடன் முடித்துக் கொள்ளும் திட்டம், ஜூன் 30ம் தேதி வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், கெடு காலம் முடிந்த பின் செலுத்தும் அசலுக்கு, 10 சதவீத வரி செலுத்த தேவையில்லை.
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஜூன், 30 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய்க்கும் குறைவான விற்றுமுதல் உள்ள நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., கணக்கை தாமதமாக தாக்கல் செய்தால் வசூலிக்கப்படும், தாமதக் கட்டணம், அபராதம் அல்லது வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதேசமயம், 5 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட விற்றுமுதல் உள்ள நிறுவனங்கள், 15 நாட்கள் வரை தாமதமாக கணக்கு தாக்கல் செய்யும்பட்சத்தில், காலதாமத கட்டணம், அபராதம் ஆகியவை வசூலிக்கப்பட மாட்டாது. அதன் பின், செலுத்தும் தொகைககான வட்டி, 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
வங்கி சேமிப்பு கணக்கில், குறைந்தபட்ச தொகையை பராமரிக்க தவறினால் வசூலிக்கும் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. வரும் ஜுன் வரை, பிற வங்கி ஏ.டி.எம்.,களில், பணம் எடுக்க, கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
தற்போது, குறைந்தது, ஒரு லட்சம் ரூபாய் வாராக் கடன் வைத்திருக்கும் நிறுவனம் மீது, திவால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த வரம்பு, 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பயனடையும்.
நாட்டின் பொருளாதார சூழல், ஏப்ரலுக்குப் பிறகும் இதேபோல நீடித்தால், திவால் சட்டத்தின், 7,8,9 பிரிவுகளின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள், ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படும். இதனால், வாராக் கடன் காரணமாக, நிறுவனங்கள் திவாலாகும் நிலை தவிர்க்கப்படும். விரைவில், பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X