மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவிற்கு முதல் பலி பதிவானது.
மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 54 வயதான நபருக்கு, நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர் பாதிப்புள்ள நாடுகளுக்கோ, மாநிலங்களுக்கோ செல்லாதவர். இருப்பினும் இவருக்கு பாதிப்பு ஏற்பட்டது பீதியை கிளப்பியது. சமூகப்பரவல் ஆன பிறகு தான் பிற நாடுகளில் கொரோனா மின்னல் வேகமெடுத்தது. அதுபோன்ற ஒரு நிலையை தமிழகமும் சந்திக்கும் அபாயகர சூழல் உருவாகியது.
முதல் பலி:
பாதிக்கப்பட்டவருக்கு மதுரை அரசு மருத்துவமனை தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு சி.ஓ.பி.டி., (நாள்பட்ட நுரையீரல் நோய்), சர்க்கரை வியாதி உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பதால், நேற்று இரவு முதல் நிலைமை கவலைக்கிடமாகி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, இன்று நள்ளிரவில் அவர் உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகம் கொரோனாவுக்கு முதல் பலியை பதிவு செய்துள்ளது.
பரவியது எப்படி?
இதற்கிடையே அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பாதித்திருக்கும் வாய்ப்புள்ளதால், இது பற்றிய விசாரணையில் சுகாதார, வருவாய், போலீஸ், மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர் ஒரு கட்டட கான்டிராக்டர். அதே பகுதியில் உள்ள ஒரு மசூதியில் நிர்வாகியாக உள்ளார். அடிக்கடி மசூதிக்கு சென்று வந்துள்ளார். அந்தவகையில், அவர் சந்தித்த நபர்கள், நெருங்கி பழகிய பக்கத்து வீட்டுக்காரர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.
பக்கத்து வீட்டில் 60 பேர் பங்கேற்ற விழாவிற்கும் அவர் சென்றுள்ளார். அங்கு அவருடன் தொடர்பில் இருந்த அத்தனை பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 30 வீடுகள் சுகாதாரத்துறை கண்காணிப்பில் வந்துள்ளது. அங்கு அடையாள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் மனைவி, மகனும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரத்த, தொண்டைச்சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அவர்கள் வசிக்கும் தெருப்பகுதி, மசூதி, இதர பகுதிகளில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இந்நிலையில், யார் மூலம் இவருக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதே கண்டறியப்படாத நிலையில், இன்னும் யாருக்கெல்லாம் அந்நபர் கொரோனாவை பரப்பியுள்ளாரோ என்ற அச்சம் தொற்றியுள்ளது.

தனிமைப்படுத்திய டாக்டர்
கொரோனா தாக்கிய நபர் கடந்த வாரம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது அவருக்கு கொரோனா இருப்பது தெரியவில்லை. அம்மருத்துவமனையில் பணிபுரியும் அரசு டாக்டர் ஒருவர் சிகிச்சை அளித்துள்ளார். ஒரு வாரம் கழித்து அந்த நபர் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்கு வந்த போதும் அதே டாக்டர் பரிசோதித்துள்ளார். முடிவில் கொரோனா பாதிப்பு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்ததால், டாக்டருக்கும் இப்பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உருவானது. இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தியுள்ளார்.
தாய்லாந்து நாட்டினரால் பாதிப்பா:
சமீபத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த 8 பேர் மதுரையில் உள்ள பல்வேறு மசூதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினர். பாதிக்கப்பட்டவர் வழக்கமாக செல்லும் பள்ளிவாசலுக்கும் சென்றனர். பாதிக்கப்பட்டவர் தான் அவர்களை கவனித்ததாக கூறப்படுகிறது. எனவே 8 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்றும், அவரிடம் இருந்தே பரவியிருக்கலாம் என்றும் சுகாதாதரத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதனால் 8 பேரும் சென்ற விளாம்பட்டி, மீனாம்பாள்புரம், எஸ்.எஸ்.காலனி உள்ளிட்ட மசூதிகளில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 8 பேரும் சந்தித்த மசூதி நிர்வாகிகள் விவரத்தை மாநகராட்சி ஊழியர்கள் சேகரித்தனர். அவர்களை வீட்டுத்தனிமையில் வைக்க ஏற்பாடு நடக்கிறது.
இதற்கிடையே புறநகர் பகுதியில் தங்கி இருந்த தாய்லாந்து நாட்டினர் 8 பேரையும் சுகாதாரத்துறையினர் நேற்று தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தனிமைப்படுத்தினர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. ஒரு வேளை யாருக்காவது பாதிப்பு உறுதியானால் அவர்கள் சந்தித்த நபர்களையெல்லாம் தேட வேண்டிய நிலை வரும்.
சமூகப்பரவல் என்றால் என்ன?
சீனாவில் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அங்கிருந்து தத்தம் நாடுகளுக்கு திரும்பியவர்களால் சர்வதேச பாதிப்பானது. இப்படி நாடு திரும்பியவர்கள் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். தமிழகத்தில் 10 ஆயிரம் கண்காணிப்பில் உள்ளனர். இவர்கள் அஜாக்கிரதையாக இருக்கும் பட்சத்தில் தொடர்பில் இருப்பவர்களுக்கும் பாதிப்பு பரவும். இது தான் சமூகப்பரவல்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE