நாடு முழுதும் தேசிய பேரிடர் சட்டம் அமல் அதிரடி! : தெலுங்கானாவில் கண்டதும் சுட உத்தரவு

Updated : மார் 27, 2020 | Added : மார் 25, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement

புதுடில்லி : நாடு முழுதும், முதல் முறையாக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம், நேற்று அமலுக்கு வந்தது. இதன் மூலம், 'கொரோனா' தடுப்பு நடவடிக்கைகள், மாநில அரசுகளிடம் இருந்து, மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டுக்கு சென்றது. அரசு அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களை, கண்டதும் சுட, உத்தரவிடப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.latest tamil news
நாடு முழுதும், 562 பேர், கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.இதையடுத்து, வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, நாடு முழுதும், 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்துவதாக, பிரதமர், நரேந்திர மோடி, நேற்று முன்தினம் அறிவித்தார்.இதையடுத்து, நாடு முழுதும், சாலைகள் வெறிச்சோடின. அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புரளி எழுந்ததை அடுத்து, ஒரு சில பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, மக்கள் அவசர அவசரமாக பொருட்களை வாங்கி குவித்தனர்.


நடவடிக்கை

இந்நிலையில், இந்த புரளி குறித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநில அரசுகளையும், மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கையிருப்பு உள்ளது குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அமைதியை நிலைநாட்டுமாறு, அனைத்து மாநில தலைமை செயலர்கள் மற்றும் டி.ஜி.பி.,க்களுக்கு, மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம், நேற்று முதல் அமலுக்கு வருவதாக, மத்திய அரசு அறிவித்தது. இயற்கை அல்லது மனிதர்களால் ஏற்படும் பேரிடர்களை கையாள்வதற்காக இயற்றப்பட்ட இச்சட்டம், முதல் முறையாக அமலுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்து நடவடிக்கைகளும், மாநில அரசுகளிடம் இருந்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு செல்கின்றன.இனி, கொரோனா தடுப்பு பணிகளில், மத்திய அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளை, மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு, நாட்டையே அச்சுறுத்தி வரும் பெரும் தொற்றாக இருப்பதால், 'இதை கட்டுப்படுத்த, மேலும் தீவிர நடவடிக்கைகள் தேவை' என, தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறிய கருத்தை ஏற்று, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.இது தொடர்பாக, கேபினட் செயலர், முதன்மை செயலர், போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன் பின், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், இனி அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என, தகவல் தெரிவிக்கப்பட்டது.


சிறை தண்டனை

இந்த, 21 நாட்கள் முழு அடைப்பு காலகட்டத்தில், அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவுகளை மீறுவோர் மீது, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப் படும்.இவற்றை, கடுமையாக நிறைவேற்ற, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில், பொய் செய்திகளை பரப்பி பதற்றத்தை ஏற்படுத்துபவர்கள், பேரிடர் நிதி மற்றும் பொருட்களில் முறைகேடு செய்பவர்களுக்கு, இரண்டாண்டு வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க, இச்சட்டத்தில் இடம் உள்ளது.

மேலும், தடை உத்தரவை மீறி, வெளியில் செல்பவர்களுக்கு, ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க இச்சட்டம் வழி செய்கிறது.கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், குடியிருக்கும் பகுதிகளில் பல பிரச்னைகளை சந்தித்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.இதையடுத்து, டாக்டர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யுமாறு, மாநில அரசுகளுக்கு, உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.


கண்காணிப்பு

தெலுங்கானாவில், 36 பேர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 19 ஆயிரம் பேர், கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், மாநிலத் தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியதாவது:அமெரிக்காவில், முழு அடைப்பை அமல்படுத்த, ராணுவம் அழைக்கப்பட்டது.மத்திய அரசு கூறியுள்ள விதிகளை பின்பற்ற மக்கள் தவறினால், இங்கும் அந்த நிலை ஏற்படலாம்.அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், 24 மணி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, விதிகளை மீறுவோரை கண்டதும் சுட உத்தரவிடப்படும். அந்த நிலைமையை கொண்டு வந்து விடாதீர்கள் என, மக்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.


ஊரடங்குவீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளவர்களின் பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்யுமாறு, கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளை அவர்கள் மீறினால், பாஸ்போர்ட் முடக்கப்படும்.தினமும், இரவு, 7:00 மணியில் இருந்து, காலை, 6:00 மணி வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.அந்த நேரத்தில் யாரும், வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. அவசரத்திற்கு 100ஐ அழைத்தால், போலீசார் உதவிக்கு வருவர்.அத்தியாவசிய தேவைகளுக்காக திறக்கப்படும் கடைகள், மாலை, 6:00 மணிக்கு மூடப்பட வேண்டும். ஒரு நிமிடம் கூடுதலாக திறந்திருந்தாலும், கடை உரிமம் ரத்து செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sai mahesh - coimbatore,இந்தியா
30-மார்-202010:15:29 IST Report Abuse
sai mahesh எடுத்தோம் கவிழ்த்தோம் அவ்வளவுதான்
Rate this:
Cancel
K V RAO - PUDUVAI,இந்தியா
27-மார்-202015:24:20 IST Report Abuse
K V RAO நம்மவர்கள் எல்லாத்துக்கும் சண்டைபோட்டு பழகியவர்கள். எப்படி அரசாங்கத்துக்கு கட்டுப்படுவார்கள். ட்ராபிக்கில் கொஞ்சம் நின்றுபார்த்தால் இது புரியும்.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
27-மார்-202005:18:55 IST Report Abuse
ocean kadappa india மூக்கருக்கு அடுத்த முறை ஆட்சி கட்டில் கிடைக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X