மாவட்டச் செயலர் பதவியை மந்திரி இழந்தது ஏன்?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

மாவட்டச் செயலர் பதவியை மந்திரி இழந்தது ஏன்?

Added : மார் 25, 2020
Share
மாவட்டச் செயலர் பதவியை மந்திரி இழந்தது ஏன்?'கொரோனா' பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பதால், பெஞ்ச் பெரியவர்கள் வெளியில் நடமாடுவதை தவிர்த்து விட்டனர். ஆயினும், ஆடிய காலும், பாடிய வாயும் சும்மாயிருக்குமா என்பது போல, தினமும் ஒரு முறை கூடி, நாட்டு நடப்புகளை அலசா விட்டால், பெரியவர்களுக்கு துாக்கம் வராதே! அதனால், தினமும் ஒருவரது வீட்டு திண்ணையில் கூடி, முகக்கவசம்
 மாவட்டச் செயலர் பதவியை மந்திரி இழந்தது ஏன்?

மாவட்டச் செயலர் பதவியை மந்திரி இழந்தது ஏன்?

'கொரோனா' பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பதால், பெஞ்ச் பெரியவர்கள் வெளியில் நடமாடுவதை தவிர்த்து விட்டனர். ஆயினும், ஆடிய காலும், பாடிய வாயும் சும்மாயிருக்குமா என்பது போல, தினமும் ஒரு முறை கூடி, நாட்டு நடப்புகளை அலசா விட்டால், பெரியவர்களுக்கு துாக்கம் வராதே! அதனால், தினமும் ஒருவரது வீட்டு திண்ணையில் கூடி, முகக்கவசம் அணிந்து, பாதுகாப்பான இடைவெளியில் அமர்ந்து, அரட்டையை தொடர்கின்றனர்.இன்று, பெரியசாமி அண்ணாச்சி வீட்டு திண்ணையில் அமர்ந்து, அவரது வீட்டு கருப்பட்டி காபியை பருகியபடியே, ''எஸ்.ஐ.,க்கள் ஆட்டம் அதிகமாயிடுத்து ஓய்...'' என, விவாதத்தை ஆரம்பித்தார், குப்பண்ணா.''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார்,
அந்தோணிசாமி.''நீலகிரி மாவட்டம், குன்னுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு, இன்ஸ்பெக்டர் இல்லை ஓய்... இதனால, எஸ்.ஐ.,க்கள் வெச்சது தான் சட்டம்கற மாதிரி ஆயிடுத்து...''புகார் தர வரவாகிட்ட, மட்டு, மரியாதையே இல்லாம நடந்துக்கறா... இதனால, ஸ்டேஷனுக்கு போகணும்னாலே, கொரோனா வார்டுக்கு போற மாதிரி, மக்கள் பயப்படறா... அதுலயும் ஒரு, எஸ்.ஐ., சாமி பட விக்ரம் மாதிரி, 'ஓவரா' அலம்பல் பண்ணிண்டு இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.தெருவில் சென்றவரை பார்த்து, ''நசீர், முகக் கவசம் போடாம வெளியில போகாதீங்க...'' என, அறிவுரை தந்த அந்தோணிசாமி, ''திருப்பூர் மாவட்டம், மாநகரம் உதயமாகி பல வருஷங்களாகியும், உளவுப்பிரிவு போலீசார், இன்னும், கோவையைச் சார்ந்தே இயங்கிட்டு இருக்காங்க...'' என, அடுத்த மேட்டரை ஆரம்பித்து, நிறுத்தினார்.''மேல சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.'
'ஒவ்வொரு உளவுப்பிரிவு போலீசாரும், நாலஞ்சு ஸ்டேஷன்களை சேர்த்து, பார்த்துட்டு இருக்காங்க... திருப்பூருக்குன்னு தனியா உளவுப்பிரிவு அலுவலகம், கூடுதல் போலீசார் நியமிக்காததால, உளவு பணிகளை திறம்பட பார்க்க முடியலைங்க... ''பல மாநிலங்கள், வெளிநாட்டினர் குடியிருக்கிற டாலர் சிட்டி பாதுகாப்புல ஓட்டை விழுந்துடக் கூடாதுன்னு, போலீசார் தரப்புல பயப்படுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''வாயைக் கொடுத்து, பதவியை இழந்துட்டாவ வே...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், அண்ணாச்சி.''பால்வளத் துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜியைச் சொல்றீங்களா பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''ஆமா... ராஜேந்திர பாலாஜியிடம் இருந்த, விருதுநகர் மாவட்ட, அ.தி.மு.க., செயலர் பதவியை, சமீபத்துல பறிச்சுட்டாவ... அமைச்சர், 21ம் தேதி, 'கொரோனா' வைரஸ் பத்தி, சமூக வலைதளங்கள்ல ஒரு கருத்தை பதிவிட்டிருந்தாவ...''அதுல, குறிப்பிட்ட மதத்தை விமர்சனம் செய்துட்டதா புகார் எழுந்தது... அதுவும் இல்லாம, தலைமையை, ஒருமையில விமர்சனம் பண்ணி, அது, அவங்க காதுக்கும் போயிடுத்து... இதெல்லாம் சேர்த்து, அவரது பதவியை காவு வாங்கிடிச்சு வே...''இப்ப, மாவட்டத்துல இருக்கற, ஏழு சட்டசபை தொகுதிகள்ல, மூணு தொகுதிகளுக்கு, ஒரு மாவட்டச் செயலரும், நாலு தொகுதிகளுக்கு, ஒரு மாவட்டச் செயலரும் நியமிக்க இருக்காவ... கொரோனா தீவிரம் தணிந்த பிற்பாடு, மாவட்டச் செயலர்களை நியமிக்க முடிவு பண்ணியிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.பெரியவர்கள் கிளம்ப, அண்ணாச்சி வீட்டுக்குள் சென்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X