பொது செய்தி

தமிழ்நாடு

தேனிலவு சரணாலயம்

Added : மார் 25, 2020
Share
Advertisement
 தேனிலவு சரணாலயம்


- சிவகங்கை - கொடைக்கானல், ஊட்டி, மூணாறு போன்ற குளிர் பிரதேசங்களுக்கு 'ஹனிமூன்' செல்லும் திருமண வாழ்வின் துவக்கம் ஒரு வசந்த காலம். மனிதன் போன்று பறவைகளும் 'தேனிலவு' கொண்டாடும் என்றால் நம்புவீர்களா. ஆம், ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாதங்கள் தேனிலவிற்காக அரிய பறவைகள் பல ஆயிரம் கி.மீ., தொலைவு வலசை செல்கின்றன. இத்தகைய பறவைகளின் தேனிலவு தேர்வில் தவறாது இடம் பிடிப்பது, சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். இது இனப்பெருக்கத்திற்கும் உகந்த இடம்.

வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு வரும் சில அரிய பறவைகள் பற்றிய தகவல்களை காண்போம்.

37 எக்டேர் பரப்பளவு

சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே இச்சரணாலயம் அமைந்துள்ளது. பெரிய கொள்ளுக்குடிப்பட்டி, சின்ன கொள்ளுக்குடிப்பட்டி, வேட்டங்குடி கண்மாய்களை இணைத்து தோற்றுவிக்கப்பட்டது. இதன் பரப்பு 37 எக்டேர். பருவ மழைக்
காலங்களில் கண்மாய் நிரம்பிவிடும்.அங்கு செழித்துள்ள நாட்டு கருவேல மரங்கள், நடுத்தர உயரம் வளரும் புதர் செடிகள், பறவைகள் தங்கி முகாமிட உகந்த சூழலை தருகின்றன. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் வலசை வருகின்றன.
பொதுவாக ஆகஸ்டில் இங்கு பறவைகள் வலசை வரத்துவங்கும். ஜனவரி வரை தங்கி இருக்கும். தண்ணீர் இருந்தால் மார்ச் மாதம் வரை சீசன் தொடரும்.

15 ஆயிரம் பறவைகள்

கடந்த சில ஆண்டுகளாக சரணாலயத்தில் போதிய தண்ணீர் இல்லை. இதனால் பெரிய அளவில் பறவைகள் வரவில்லை. வந்த பறவைகளும் சில நாட்களிலேயே புறப்பட்டுவிட்டன.ஆனால் இம்முறை ஓரளவு நல்ல மழை பெய்து கண்மாய் பெருகியது. இதனால் கூட்டம், கூட்டமாக பறவைகள் வலசை வரத்துவங்கின. வெளிநாடுகளில் இருந்தெல்லாம் கூட இங்கே வந்தன. கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரித்து இனப்பெருக்கத்திலும் ஈடுபட்டன.
இன்னும் ஆயிரக்கணக்கான பறவைகள் சரணாலயத்தில் முகாமிட்டுள்ளன. உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திரளாக பார்வையிட்டுள்ளனர். இம்முறை 15 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் வந்திருப்பதாக கணக்கெடுப்பு நடத்திய வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறியது:பொதுவாக பறவைகள் வலசை செல்லும் குணம் கொண்டவை. வேட்டங்குடிக்கு சுவிட்சர்லாந்து, நார்வே, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வருகின்றன. இச்சரணாலயம் முற்றிலும் மாறுபட்டது. முழுக்க, முழுக்க இனப்பெருக்கத்திற்காகவே இங்கு பறவைகள் வருகின்றன. இதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது.
உணவு, நீர் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. கடந்த ஆண்டுகளைவிட இம்முறை பறவைகள் வரத்து அதிகம். பிப்.,28, 29ல் நடத்திய கணக்கெடுப்பு படி சாம்பல் நிற நாரை, கருப்புத்தலை வெள்ளை அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, கரண்டி நாரை, நத்தை கொத்தி நாரை, முக்குளிப்பான் உள்ளிட்ட 12,530 நீர் பறவைகள் வலசை வந்தது தெரிந்தது. இதுதவிர 3,142 நில
பறவைகளும் கணக்கெடுப்பில் சிக்கின. 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர், என்றனர்.சீசன் காலத்தில் செல்லுங்கள்சரணாலயத்தில் இன்னும் தண்ணீர் இருப்பதால், மார்ச் வரை பறவைகள் இருக்கும். தன் குஞ்சுக்கு இரையூட்டும் தாய் பறவையின் பாசப்போராட்டம், தழுவி கொஞ்சும் தம்பதி பறவைகளின் காதல் கூத்தாட்டம், கூட்டமாக சிறகடிக்கும் பறவைகளின் ஆட்டம், பாட்டமெல்லாம் கண்டு ரசிப்பதே தனி சுகம். வாழ்விற்கு பாடம் கற்றுத்தரும் இப்பறவைகளை காண அடுத்த சீசன் காலத்தில் (ஆகஸ்ட் முதல் மார்ச் வரை) வேட்டங்குடி சரணாலயம் புறப்படுங்கள். கண்களுக்கு விருந்தும், மனதுக்கு இதமும் நிச்சயம்.

வெள்ளை அரிவாள் மூக்கன்

கருமை நிறத்தில் அரிவாள் போன்று வளைந்த அலகுடையது. 52 செ.மீ., நீளம் வரை வளரும். ஆண், பெண் இரண்டும் ஒரே நிறத்தில் இருக்கும். இனப்பெருக்க காலத்தில் நிறம் மாறும். தென்னிந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே அரிதாய் காணப்படுகிறது. இதுதவிர உத்தரப்பிரதேசம், குஜராத், ஒடிசா, அசாம், மேற்குவங்க மாநிலங்களில் பார்க்கலாம். கூட்டமாக வசிக்கும். வயிற்றுப் பகுதி நீரில் மூழ்கும் அளவு நடந்து சென்று வேட்டையாடும். நத்தை, புழு, பூச்சி, தலைப்பிரட்டைகள் இதன் விருப்ப உணவு.

நத்தை கொத்தி நாரை

நத்தையை விரும்பி விருந்தாக்கும். உடலின் நீளம் 81 செ.மீ., வெள்ளை, பழுப்பு நிறத்தில் இருக்கும். அலகு முழுவதும் மூடாமல் சிறிது இடைவெளி காணப்படும். இனப்பெருக்கத்தின் போது உடல் துாய வெள்ளை நிறத்தில் மாறிவிடும். பெரும்பாலும் நீண்ட துாரம் வலசை செல்வதில்லை. நீர் இல்லாத பட்சத்தில் பக்கத்து பகுதிக்கு இடம் மாறும். ஜோடியாக அல்லது கூட்டமாக சுற்றும். நத்தை தவிர நண்டு, தவளை, சிறு பிராணிகளை உணவாக்கும்.

கரண்டி வாயன்

கரண்டி வாயனின் நீளம் 60 செ.மீ., இதற்கு நீளமான கொண்டை உண்டு. பொதுவாக நேபாளம், பாகிஸ்தான் பகுதியில் காணப்படும். குளிர்காலத்தில் இடம்பெயர்ந்து இந்தியா வரும். பகலில் ஓய்வு எடுக்கும். அதிகாலை, மாலையில் சுறுசுறுப்பாக வேட்டையாடும். இது இரை தேடும் அழகே தனி. தன் கரண்டி போன்ற வாயை வலது, இடது புறங்களில் அரைவட்டமாக கொண்டு சென்று சிறிய மீன், தவளைகளை பிடிக்கும்.

சாம்பல் நிற நாரை

காண்பதற்கு அரிதான சதுப்பு நில பறவை. 98 செ.மீ., நீள உடலை கொண்டது. நிற்கும் போது இதன் உயரம் 75 செ.மீ., சாம்பல், வெள்ளை கலந்த உடல். ஆங்காங்கே புள்ளி, கோடுகள் காணப்படும். சதுப்பு நிலப்பரப்பு, நீர் குட்டை, ஆற்றுக் கழிமுகப் பகுதியில் தென்படும். இந்தியா, தாய்லாந்து, மியான்மர், சீனா, மலேசியாவில் காணலாம். எப்போதும்
தனியாக காட்சி தரும். அரிதாக கூட்டமாக பார்க்கலாம். நீரில் அசையாமல் நின்று கழுத்தை மட்டும் நீரில் விட்டு வேட்டையாடும். தவளை, மீன்களை விரும்பி உண்ணும். சிறிய பறவைகளையும் உண்ணும்.


2020 கணக்கெடுப்பு விவரம்



சாம்பல் நிற நாரை36
பெரிய கொக்கு1,051
நடுத்தர கொக்கு1,537
சிறிய கொக்கு1,078
உன்னிக்கொக்கு1,600
குருட்டுக் கொக்கு534
நத்தை கொத்தி நாரை1,947
வெள்ளை அரிவாள் மூக்கன்986
கருப்பு தலை அரிவாள் மூக்கன்652
புள்ளி வாத்து115
நீர்க்கோழி173
சாம்பல் மூக்கன்119
நாமக்கோழி164


2019 - 2020 கணக்கெடுப்பு ஒப்பீடு



வகை 20192020
நீர் பறவை 282 12,530
நில பறவை 1,142 3,142


கண்மாய்கள் பரப்பு



பெரிய கொள்ளுக்குடிப்பட்டி -14 எக்டேர்
சின்ன கொள்ளுக்குடிப்பட்டி - 6 எக்டேர்
வேட்டங்குடிப்பட்டி - 17 எக்டேர்

கிராமத்தினரின் தியாகம்
கொள்ளுக்குடிப்பட்டி கண்மாய் மூலம் ஒரு காலத்தில் இரு போகம் விளைந்தது. பறவைகள் சரணாலயம் ஆனப்பிறகு பறவைகளுக்கு நீர் தேவைப்பட்டது. இதனால், ஒரு போகம் மட்டும் சாகுபடி செய்யும்படி கிராமத்தினரை வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர். இதை ஏற்ற கிராம மக்கள், இரு போகத்திற்கு நீர் இருந்தால் கூட ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். தீபாவளி, விசேஷ நாட்களில் கூட அவர்கள் பட்டாசு வெடிப்பதில்லை. பறவைகளுக்கு எவ்வித தொந்தரவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கொள்ளுக்குடிப்பட்டி கிராமத்தினர் உறுதியாக உள்ளனர். பறவைகள் மீதான அவர்களின் அன்பு அலாதியானது.


வனத்துறை கவனத்திற்கு...



* பெரியக்கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில் பறவைகளை ரசிக்க அமைக்கப்பட்ட இரும்பு, பலகையால் ஆன இரு கோபுரங்களுமே மோசமான நிலையில் உள்ளன. எப்போது வேண்டுமானாலும் தகர்ந்து விழலாம். சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. இவற்றுக்குப் பதில் புதிதாக கான்கிரீட் கோபுரங்கள் அமைக்க வேண்டும்.
*அங்குள்ள சிறுவர் பூங்கா முற்றிலும் சேதமடைந்துள்ளது. ஒரு விளையாட்டு உபகரணத்தை கூட குழந்தைகள் பயன்படுத்த முடியவில்லை. இப்பூங்காவை சீரமைக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் அமர கூடுதல் வசதி தேவை.* மழை பொய்த்தால் சீசன் காலத்திலும் கண்மாய் வறண்டே காட்சி அளிக்கிறது. சீசன் காலத்தில் மட்டுமாவது வறட்சியை சமாளிக்க ஏற்பாடு வேண்டும்.

பொதுவாக பறவைகள் வலசை செல்லும் குணம் கொண்டவை. வேட்டங்குடிக்கு சுவிட்சர்லாந்து, நார்வே, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளில் இருந்தும்,
வெளிமாநிலங்களில் இருந்தும் வருகின்றன. இச்சரணாலயம் முற்றிலும் மாறுபட்டது. முழுக்க, முழுக்க இனப்பெருக்கத்திற்காகவே இங்கு பறவைகள் வருகின்றன. இதற்கு சாதகமான
சூழல் நிலவுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X