கொடுத்துப் பாருங்கள்... குன்றாப் புகழ் பெறுங்கள்..!

Added : மார் 26, 2020
Share
Advertisement
 கொடுத்துப் பாருங்கள்... குன்றாப் புகழ் பெறுங்கள்..!

'அன்னையின் மடியில் ஆடுவது ஆனந்தம்கன்னியின் மடியில் சாய்வது ஆனந்தம்தன்னை மறத்தல் அதுவும் ஆனந்தம்தன்னல மறந்தால் அது பேரானந்தம்உன்விழியால் பிறருக்கு அழுதால்கண்ணீரும் ஆனந்தம்'என்பது போல தன்னலம் மறந்து பிறர் நலம் பேணுவது பேரானந்தம்தான். வறியவர்க்கு ஒன்று ஈவதே ஈகை. குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக்கொள்வது கடமை. அறியாதவர்களுக்கு கொடுப்பதே உண்மையான ஈகை.அடுத்தவருக்கு கொடுப்பதற்காகவே இறைவன் கையை குப்புறப் படைத்துள்ளான். ஏழை எளியவர்களுக்கு அவர்கள் விரும்பியதை கொடுத்து அதை அனுபவிக்கும்போது அடைகின்ற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதை பார்க்கும்போது கொடுத்தவர் உள்ளம் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

கொடுத்தது காத்து நிற்கும்

அடுத்தவருக்கு கொடுத்து உதவினால் இறைவனே நம்மிடம் கையேந்தி நிற்பான் என்பதை கர்ணன் மூலம் அறிய முடிகிறது. உயிர் போகும்போது நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. நாம் கொடுக்கின்ற தர்மம்தான் காப்பாற்றும். தர்மம் செய்தவனை கடவுளால்கூட கொல்ல முடியாது. மகாபாரதத்தில் எல்லோரையும் கொல்ல முடிந்தது. கர்ணனை மட்டும் கொல்ல முடியவில்லை. கடவுள் போய் பிச்சை எடுக்கிறார்.'நீ செய்த தர்மத்தைக் கொடு' என்று கேட்கிறார். 'யான் செய் புண்ணியம் அனைத்ததும் தந்தனன் கொள்க” என்று தன் ரத்தத்தில் தாரை வார்த்துக் கொடுத்த பின்தான் கர்ணனை கொல்ல முடிந்தது. தர்மத்திற்கு இருக்கும் வலிமை வேறு எதற்கும் கிடையாது வாழும்போது கார், பங்களா, கோடிக்கணக்கான பணம் என எதையும் வைத்துக் கொள்ளலாம். எதுவும் நம் கூட வராது. தர்மம் மட்டுமே கூட வரும்.இதையே'தர்மம் தலைகாக்கும்தக்க சமயத்தில் உயிர் காக்கும்கூட இருந்தே குழி பறித்தாலும்கொடுத்தது காத்து நிற்கும்'என்ற பாடல் வரிகள் விளக்குகின்றன.
பிறருக்கு உதவி

நம் பிள்ளைகளுக்கு மாட மாளிகைகளை கட்டி வைக்க வேண்டாம். வங்கிகளில் பணத்தை சேர்த்து வைக்க வேண்டாம். பிறருக்கு உதவிசெய்து புண்ணியத்தை மட்டும் சேர்த்து வைத்துவிட்டுச் செல்வோம். அதுவே அவர்களை வாழவைக்கும்.'பசி என்று வந்தவர்க்குபுசி என்று ஒருபிடி அன்னம்கொடுத்து பாரப்பா'என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.ஒருபிடி உணவை உண்டுவிட்டு 'மகராசி நீ நல்லா இருக்கணும்' என்று மனம் நிறைய வாழ்த்தும்போது நம் உள்ளம் புத்துணர்ச்சி பெறும்.இல்லாதவர்க்கு கொடுக்கும்போது பெற்றவன் 'தர்ம துரையே நீங்கள் நீண்ட நாட்கள் வாழணும்' என்ற வார்த்தையை கேட்கும்போது நம் மனம் எவ்வளவு துள்ளி மகிழும்.
பாரதியின் கருணை

பாரதியார் வறுமை நிலையிலும்கூட வீட்டில் இருந்த அரிசியை குருவிகளுக்கு கொடுத்து அதை உண்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். பாரதியாரின் பக்கத்து வீட்டுக்காரர் புத்தாடை கொடுத்து அணிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அதை அணிந்துக்கொண்டு பாரதியார் வெளியே சென்றார். திரும்பிவரும்போது துண்டை மட்டும் உடலில் போர்த்திக்கொண்டு வந்தார். வேட்டியை காணவில்லை. புத்தாடை கொடுத்தவர் கேட்டதற்கு, 'நான் வரும் வழியில் ஒருவர் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார். அதனால் என் வேட்டியை அவருக்கு கொடுத்து குளிரை போக்கினேன்' என்றார் பாரதியார். மற்றவர்களுக்கு யார் ஒருவர் ஒரு பொருளை கொடுக்கிறோர்களோ அவர் தன்னம்பிக்கை உடையவர். பாரதியார் தன்னம்பிக்கை உடையவர்.

தலைவாசல் காற்று

வீடு கட்டும்போது தலைவாசல் கதவுக்கு எதிரே ஜன்னல் வைப்பார்கள். ஏன் தெரியுமா? தலைவாசலுக்கு எதிரே ஜன்னல் இருந்தால் தான் காற்று வீட்டிற்குள் வந்து செல்லும். அதுபோல நாம் சம்பாதித்து சேர்த்த செல்வம் பிறருக்கும் பயன்பட்டால்தான் மீண்டும் செல்வம் சேரும். இதை உணர்ந்த செல்வந்தர்கள் கோயில்களுக்கும் ஏழைகளுக்கும் செல்வத்தை வாரி வழங்குகிறார்கள்.

விருந்தினரை உபசரித்தல்
உணவு தயார் செய்யும்போது முதலில் சாதம் தயார் செய்தல் வேண்டும். பிறகு காய்கறிகள் தயார் செய்ய வேண்டும் என்பது தமிழர் மரபு. காரணம் வருகின்ற விருந்தினர் பசியோடு வந்தால் பசி போக்க சாதத்தைப் போட்டு ஊறுகாயை வைத்துக்கூட அவரது பசியை ஆற்றிவிடலாம். தீயிலே மிகக் கொடுமையானது பசித் தீ. காரைக்கால் அம்மையார் வீட்டிற்கு பசியோடு ஒரு சிவனடியார் வருகிறார். சாதம் மட்டும் தயாராக இருந்தது. சாதத்தோடு ஒரு மாம்பழத்தை வைத்த அவரது பசியாற்றினார் காரைக்கால் அம்மையார். கோயில் கட்டடவில்லை; குடமுழுக்கு செய்யவில்லை. சாதமும், மாம்பழமும் அவரை சிவபெருமானிடம் கொண்டு போய் சேர்த்தது. உலகத்திற்கு தாயாக விளங்கும் சிவபெருமான் திருவாயால் 'நம்மைப் பேணும் அம்மைகாண்' எனறு சொல்ல வைத்தது அல்லவா?

ஞான ஒளி

பசியோடு வருபவர்களுக்கு உணவளித்தால் அவர்கள் சாப்பிட்டபின் அவர்கள் நெற்றிப் பொட்டிலிருந்து ஒரு 'ஞான ஒளி' தோன்றும். அது உணவு வழங்கியவரை பல படிகள் உயர்த்திச் செல்லும் என்று வள்ளல்பெருமான் கூறுகிறார்.பதினைந்து வயது சிறுவன் வீடு வீடாகப் பொருட்களை விற்று வருகிறான். அவனுக்கு தாங்கமுடியாத பசி. ஏதாவது சாப்பிட்டாக வேண்டும். காசு இல்லை. அருகில் உள்ள வீட்டில் ஏதாவது உணவு கேட்கலாம் என்று எண்ணி கதவை தட்டினான். கதவு திறக்கப்பட்டது. ஒரு தாய் வந்தாள். உணவு கேட்க தயக்கமாக இருந்தது. தாகமாக உள்ளது. கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என்று தயங்கி கேட்டான். அந்த தாய் ஒரு குவளை நிறைய பால் கொடுத்தாள். அதை குடித்து பசியாறினான். புறப்படும்போது 'இந்த பாலுக்காக நான் எவ்வளவு தர வேண்டும்' என்றான்.
'அன்புக்கு விலை இல்லை' என்று அந்த தாய் கூறினாள். அத்துடன் சென்ற சிறுவன் மிகவும் சிரமப்பட்டு மருத்துவக் கல்லுாரியில் படித்து டாக்டராகி ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்தான். ஒரு குவளைப் பால் கொடுத்த தாய் உடல் நலமின்றி அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஊர், பெயரை அறிந்த டாக்டருக்கு மூளையில் மின்னல் வெட்டியது. உடனே அந்த தாயை சந்தித்தான். அன்று பால் கொடுத்த அதே தாய்தான். இரவு, பகல் பாராமல் சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றினான்.சிகிச்சை கட்டண ரசீது அந்த தாயின் வீட்டிற்கு வந்தது. 'எவ்வளவு பணம் கட்ட வேண்டுமோ, பணத்திற்கு எங்கே போவேன்' என பதட்டத்துடன் பிரித்தாள்.
அதில் 'இந்த பணத்தை நீங்கள் கட்ட வேண்டாம். ஒரு குவளை பாலில் நீங்கள் கட்ட வேண்டிய கடன் முழுவதும் தீர்க்கப்பட்டுவிட்டது' என்று எழுதப்பட்டிருந்தது. அந்த தாயின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது. அந்த சிறுவன் தான் டாக்டர் கார்டு கில்லி.இதையே வான்புகழ் வள்ளுவர்'அற்றார் அழிபசி தீர்த்தல் அதொருவன்பெற்றான் பொருள் வைப்புழி'என்று கூறியுள்ளார்.கொடுத்து பாருங்கள்குன்றாப் புகழ் பெறுங்கள்.- குன்றக்குடி பெருமாள்பட்டிமன்ற நடுவர், கல்லுாரணி.94437 38534

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X