பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு நாட்களை புத்தகம் வாசித்து கழிங்க!

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருவொற்றியூர் : 'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், வீட்டில் முடங்கிய மக்களில் ஒரு சாரர், புத்தகங்கள் படிப்பதில், நாட்டம் செலுத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று, அதி தீவிரமாக பரவி வரும் நிலையில், மக்கள் ஒன்று கூடலை தடுக்கும் விதமாக, பிரதமர் மோடி, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12 மணிக்கு, ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.சமூக ஒன்று கூடலை தவிர்க்கும் விதமாக, 21 நாட்கள், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். பள்ளி, கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள் முற்றிலும் மூடப்பட்டு, மக்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்டுள்ளனர்.வீட்டில் முடங்கிய மக்கள், பொழுதை கழிக்க, சிலர், 'டிவி' பார்ப்பது, விளையாடுவது போன்றவற்றில், நேரத்தை கடத்தி வருகின்றனர். அந்த வரிசையில், ஒரு சாரர் புத்தகம் படிப்பதில், நாட்டம் செலுத்தி வருகின்றனர்.

திருவொற்றியூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குரு.சுப்ரமணி, 63, கூறியதாவது:இந்த நேரத்தில், உயிரை பணயம் வைத்து, களத்தில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை, சுகாதாரம், மாநகராட்சி, துாய்மை பணியாளர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு நன்றிகள்.சமூக ஆர்வலர் என்பதால், பல்வேறு பணிகளில் பம்பரமாய் சுழல்வேன். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சூழலில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், வீட்டிற்குள் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.இந்த நேரத்தில், டிவி, மொபைல், இணையத்தில் காலம் கடத்தாமல், புத்தகங்களை படிக்கலாம். தனிமையில் புத்தகம் வாசிப்பது, அறிவார்ந்த ஆற்றலை ஏற்படுத்தும். 21 நாட்கள் வீணாய் கழிக்காமல், புத்தகங்களை சற்றே புரட்டலாம். பிரபஞ்சன் புத்தகங்கள், ஜெயஸ்ரீயின், 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' போன்ற புத்தகங்களை படிக்க முடிவு செய்துள்ளேன்.வீட்டில் முடங்கிய, மாணவர்கள், இளைஞர்களும், புத்தகம் படிப்பது, எழுதுவது போன்றவற்றில் நாட்டம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

தண்டையார்பேட்டையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவன், பி.வி.கமலேஸ்வரன், 9, கூறியதாவது:கொரோனா பரவுவதால், பெற்றோருடன் வீட்டில், என்னையும் தனிமைப்படுத்திக் கொண்டேன். ஊரடங்கிற்கு முன், தந்தையுடன் சேர்ந்து, முக கவசம் அணிந்த படி, எங்கள் பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.தற்போது, ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால், வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. எவ்வளவு நேரம், 'டிவி' பார்ப்பது. அதனால், வீட்டிலேயே, விவேகானந்தர் புத்தகம், திருவாசகம் போன்ற புத்தகங்கள் படிக்கிறேன். தவிர, பெற்றோர் அறிவுறுத்தல் படி, கையெழுத்து அழகாக மாற, பயிற்சி செய்கிறேன். நண்பர்களுடன் விளையாடுவதை தவிர்க்கிறேன்.பலரும், இந்த ஊரடங்கை விடுமுறையாகவும், குற்ற உணர்ச்சியாகவும் கருதக்கூடாது. தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, நாட்களை பயனாக கழிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X