சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சங்கிலிதொடர் எப்படி உடையும்! சட்டவிரோத கும்பல் சர்வ சாதாரணமாக மது விற்பதால்... நேர்மையான தொழில் செய்பவர்கள் வீட்டில் முடக்கம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

உடுமலை : உடுமலையில், நேர்மையாக தொழில் செய்பவர்கள், மத்திய, மாநில அரசுகளின், உத்தரவை ஏற்று, கடைகளை அடைத்து, 'கொரோனா' தொற்று பரவாமல் தடுக்க முடங்கியுள்ள நிலையில், சட்ட விரோத மது விற்பனை மட்டும் அமோகமாக நடந்தது.

'கொரோனா' தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நோய் பரவலைத்தடுக்கும் வகையிலும், சங்கிலித்தொடரை அறுக்கும் வகையிலும், ஏப்.,14 வரை, 21 நாட்கள் பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என, அரசு அறிவித்துள்ளது.உடுமலையில், 144 தடை உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். பெரிய வணிக நிறுவனங்கள் முதல் டீக்கடைகள், சிறு பெட்டிக்கடைகள் என, நேர்மையான முறையில் தொழில் செய்து, உழைப்பால் வருவாய் ஈட்டி வரும் வியாபாரிகள், தங்கள் வருவாய் இழப்பை பொருட்படுத்தாமல், கடைகளை அடைத்து அரசுக்கு ஒத்துழைப்பு தருகின்றனர்.

அன்றாடம் வேலைக்கு சென்றால் மட்டுமே, குடும்பம் நடத்த முடியும் என்ற நிலையிலுள்ள, கட்டட தொழிலாளர்கள், கூலி வேலை செய்பவர்கள் என அனைத்து தரப்பினரும், நோய் தொற்று பரவாமல் இருக்க, அரசு உத்தரவை கடைபிடித்து, வேலைக்கு செல்லாமல், தவித்து வருகின்றனர்.அரசும், அரசுத்துறை அதிகாரிகள், மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, போலீசார், துாய்மைப்பணியாளர்கள் என ஒரு தரப்பு, நோய் பரவலை தடுக்க, கிருமி நாசினி தெளித்தல், சுத்தப்படுத்துதல் என, தீவிரமாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், அரசியல் செல்வாக்கில், சட்ட விரோத மது விற்பனை செய்யும் நபர்கள் மட்டும், அரசின் நடவடிக்கைகள் குறித்து கண்டு கொள்ளாமல், நோய்த்தொற்று பரவும் சூழலை கருத்தில் கொள்ளாமல், வழக்கம் போல், மது விற்பனையை அமோகமாக நடத்தி வருகின்றனர். கள்ள மது உற்பத்தி மற்றும் விற்பனை, நாராயணன் காலனி, யசோதா ராமலிங்கம் லே-அவுட், தளி ரோடு, எஸ்.என்.ஆர்., லே-அவுட் பகுதியிலுள்ள முட் காட்டிற்குள் உள்ள பாழடைந்த கட்டடம் மற்றும் புற நகர பகுதிகளில், தேவனுார்புதுர், எரிசனம்பட்டி, குறிச்சிக்கோட்டை, பெதப்பம்பட்டி, கொங்கல்நகரம், மடத்துக்குளம் என, பல்வேறு பகுதிகளிலும் ஆளும் கட்சியினர் 'டாஸ்மாக்' பார் மற்றும் பொது இடங்களில் மது விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டதால், மது பாட்டில்களுக்கு, கூடுதலாக நுாறு ரூபாய் விலை வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.அத்தியாவசிய காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க வருபவர்களும், சமூக இடைவெளி, 1.5 மீட்டர் தள்ளி நிற்க வேண்டும், இதனை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும், என அரசு அறிவுறுத்தி வருகிறது.

ஆனால், சட்ட விரோத மது விற்பனை நிலையங்களில், 'கொரோனா' தொற்று சமுதாய பரவல் நிலைக்கு செல்லும் வகையில், கூட்டமாகவும், கூடுதல் விலை காரணமாக, 'கட்டிங்' கூட்டணி சேருவது என, கூட்டம், கூட்டமாக போதை ஆசாமிகள் இணைந்து வருகின்றனர்.முட்காடாக உள்ளதால், அங்கேயே வட்டமாக அமர்ந்தும், மது அருந்தி வருகின்றனர். அதே போல், பார் அனுமதி பெற்ற மையங்களையும் மூட உத்தரவு உள்ள நிலையில், தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, பழநி ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் விற்பனை நடந்து வருகிறது.நோய் பரவலை தடுக்க ஒட்டுமொத்த சமுதாயமும், முடங்கியிருந்தாலும் சட்ட விரோத மது விற்பனையை போலீசார் தடுக்க முடியவில்லை.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என அரசியல் அதிகாரத்தை வைத்துக்கொண்டு, போலீசாரையும், அதிகாரிகளையும் மிரட்டி, மது விற்பனையை நிறுத்தாமல் தொடர்ந்து வருகின்றனர்.புகார் வந்தால் போலீசார் சென்று விரட்டுவதோடு நிறுத்தி விடுகின்றனர். பதுக்கி வைத்துள்ள மது வகைகளை பறிமுதல் செய்வது, விற்பனை செய்யும் முக்கிய நபர்கள், அவர்களின் பணியாற்றும் நபர்கள் குறித்த அனைத்து விபரங்களும், போலீஸ் உயர் அதிகாரிகள் முதல், தனிப்பிரிவு மற்றும் உளவு பிரிவு போலீசாருக்கு தெரிந்தாலும், கடும் நடவடிக்கைகள் எடுப்பதில்லை.

நோய்த்தொற்று பரவாமல் தடுக்க நேர்மையான தொழில் செய்பவர்களை முடக்கிய அதிகாரிகள், இது போன்று, சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், நோய் தொற்று பரவுவதை தடுக்க முடியாது, என்பதை உணர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X