சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'லொக்... லொக்...' சத்தம் கேட்குது சார்! அபார்ட்மென்ட்டில் இருந்து போனில் அலறல்!

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோவை : வெளிநாடுகளில் இருந்து கோவை திரும்பியவர்கள், வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொள்ளாமல், வெளியே நடமாடுவதால், பக்கத்து வீடுகளில் வசிப்போர் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்துக்குள் வெளிநாடுகளில் இருந்து, கோவைக்கு திரும்பியவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.கோவை மாநகராட்சி எல்லைக்குள், 247 பேர் அடையாளம் காணப்பட்டு, சுகாதாரத்துறை தரப்பில் பட்டியல் தயாரித்து, ஒவ்வொருத்தரின் வீட்டின் முகப்பில், 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இது, அருகாமையில் வசிப்போரை உஷார்படுத்துகிறது.

'வெளிநாட்டுக்கு சென்று விட்டு வந்திருக்கின்றனர். ஆனால், எவ்வித மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தாமல் இருக்கின்றனர். தனிமைப்படுத்திய வீடு என ஸ்டிக்கர் ஒட்டியும் கூட, வெளியே நடமாடுகின்றனர். பக்கத்து வீட்டில் வசிப்பவர், 'லொக்... லொக்...' என, இருமிக் கொண்டிருக்கிறார். எங்களுக்கு பயமாக இருக்கிறது. மருத்துவ குழுவை அனுப்பி வையுங்கள்' என, மாநகராட்சி அதிகாரிகளின் மொபைல் போனுக்கு, அழைப்பு வந்த வண்ணம் இருக்கிறது.இதுதவிர, தொழில் நிமித்தமாக ஒருவர், கேரள மாநிலம், சித்துார் சென்றிருக்கிறார். அங்கிருந்து கோவை வந்தால், தனிமைப்படுத்தி விடுவார்களோ என அஞ்சி, சென்னை சென்று, அங்கிருந்து, கோவைக்கு கார் மூலமாக வந்திருக்கிறார்.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் சிலர், தாமாக முன்வந்து, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தாமல், மருந்தகங்களில் மாத்திரை வாங்கி, சாப்பிடுகின்றனர்.இவர்களை அடையாளம் கண்டு, மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக, மண்டலத்துக்கு ஒன்று வீதம், ஐந்து மருத்துவ குழு தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. அக்குழுவினர், பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று மருத்துவ சோதனை செய்வர்.சளி, காய்ச்சல் மற்றும் 'கொரோனா' தொற்றுக்கான அறிகுறி இருப்பின், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக நடவடிக்கை எடுக்க, சுகாதாரத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X