கொரோனா பாதித்தவர் நலம்... குடும்பத்தினருக்கு தொற்று இல்லை!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' பாதித்தவர் நலம்... குடும்பத்தினருக்கு தொற்று இல்லை!'

Added : மார் 26, 2020
Share

திருப்பூர் : 'கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஒரே நபரும், சிகிச்சை பெற்று நலமாக இருக்கிறார்,' என, திருப்பூர் மருத்துவக்கல்லுாரி 'டீன்' தெரிவித்தார்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு நடந்தது. கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார். கலெக்டர் விஜய கார்த்திகேயன், மாவட்ட அளவிலான விரிவான ஏற்பாடுகள் குறித்து விளக்கினார்.மருத்துவ பணிகள் குறித்து, 'டீன்' வள்ளி பேசியதாவது:திருப்பூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில், 11 படுக்கையுடன் கூடிய சிறப்பு வார்டு தயார்நிலையில் உள்ளது. கொரானா வைரஸ் தொற்று அறிகுறியுள்ளவரை, தனிமைப்படுத்தி பரிசோதிக்க கூடுதல் வசதி தேவையென, அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கும் பணி நடந்து வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை, வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர் என, 172 பேர், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைத்து, தினமும் கண்காணித்து வருகிறோம்.லண்டன் சென்று வந்த, திருப்பூரை சேர்ந்த ஒருவருக்கு மட்டும், கொரோனா பாதிப்பு என உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ மனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்; ஆபத்தான நிலையை தாண்டி, நலமுடன் இருக்கிறார்.அவருடைய மனைவி, மகள், டிரைவர் மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கு, கொரோனா பாதிப்பு இல்லையென, ரத்த பரிசோதனை மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், 21 நாட்களும், தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தாலே, கொரோனாவை விரட்டியடிக்கலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X