அமெரிக்காவில் தேசிய மருத்துவ அவசர நிலை

Added : மார் 26, 2020
Share
Advertisement
 அமெரிக்காவில் தேசிய மருத்துவ அவசர நிலை

வாஷிங்டன்,: கொரோனா வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அமெரிக்கா முழுதும், தேசிய அவசர நிலையும், நியூயார்க் உள்ளிட்ட பல மாகாணங்களில், தேசிய பேரிடராகவும், அதிபர், டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பாதிப்பு, அமெரிக்காவில் மிகவும் தீவிரமாக உள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி, 68 ஆயிரத்து, 572 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது உறுதியாகி உள்ளது. மேலும், பலி எண்ணிக்கை, 1,031 ஆக உயர்ந்துள்ளது. சீனா, இத்தாலியைத் தொடர்ந்து, அமெரிக்காவில் தான், வைரஸ் தொற்று உள்ளோர் அதிகம் உள்ளனர்.

இதையடுத்து, அதிபர் டிரம்ப், அமெரிக்கா முழுதும், தேசிய அவசர நிலையை நேற்று முன்தினம் அறிவித்தார். இதைத் தவிர, நியூயார்க், கலிபோர்னியா, வாஷிங்டன், இயோவா, லுாசியானா, வடக்கு கரோலினா, டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில், தேசிய பேரிடர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கடந்த பல ஆண்டுகளில், அமெரிக்காவில் சுகாதார நடவடிக்கைகளில், தேசிய அவசர நிலை மற்றும் தேசிய பேரிடர் நிலையாக அறிவிக்கப்படுவது, இதுவே முதல் முறையாகும்.'இது மிகப் பெரிய சவால் தான். அதே நேரத்தில், திறமை வாய்ந்த நல்லவர்கள் இணைந்து செயல்படுவதால், இதை நாம் இணைந்து எதிர்கொள்வோம்' என, அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.நியூயார்க் நகரம் தான், மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு, தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது; 285 பேர் உயிரிழந்துள்ளனர். அதை ஒட்டியுள்ள நியூ ஜெர்சியில், 4,402 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது; 62 பேர் உயிரிழந்துள்ளனர். கலிபோர்னியாவில், 3,000 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. அதில், 65 பேர் உயிரிழந்தனர்.பல்வேறு நகரங்களில், 1,000த்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உள்ளது. பெரும்பாலான மாகாணங்களில், முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.'நியூயார்க்கில், மூன்று நாட்களில், வைரஸ் தொற்று, இரண்டு மடங்காக உயர்ந்து வந்தது. தற்போது, சமூக விலக்கல் மற்றும் முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

'இதையடுத்து, வைரஸ் பாதிப்பு பரவுவது குறைந்து வருகிறது. இருப்பினும், இது போதாது; மக்கள் அதிக ஒத்துழைப்பு தர வேண்டும்' என, நியூயார்க் நகர கவர்னர் ஆன்ட்ரூ கியோமா கூறியுள்ளார்.இதற்கிடையே வாஷிங்டன் மாகாணத்தில், அனைத்து அத்தியாவசியமல்லாத நிறுவனங்களையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் இருந்து ராணுவ வீரர்களை அழைத்து வருவதையும், அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.சீனாவுக்கு எதிர்ப்புகொரோனா வைரஸ் தொற்று பரவத் துவங்கியதில் இருந்தே, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், சீனாவுக்கு எதிராக, தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். இந்த வைரசை, 'சீன வைரஸ்' என்றே அவர் குறிப்பிட்டு வருகிறார்.

இந்த நிலையில், அவர் கூறியுள்ளதாவது:உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதனால், பலர் அதிருப்தியில் உள்ளனர். உலக சுகாதார அமைப்பின் செயல்பாடு ஏற்புடையதாக இல்லை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.'சீனாவில் ஆட்சியில் இருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி, அமெரிக்க மக்களுக்கு எதிராக உள்ளது. வூஹானில் இருந்து பரவிய வைரஸ், இதை நிரூபிக்கிறது' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர், மைக் போம்பியோ கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X