அரசியல் செய்தி

தமிழ்நாடு

இ.பி.எஸ்., 'அலெர்ட்!'

Added : மார் 26, 2020
Share
Advertisement


சென்னை : பிரதமர் மோடி அறிவித்தபடி, ஏப்ரல், 14 வரையிலான ஊரடங்கு உத்தரவு, நாடு முழுதும் தீவிரமாக அமலில் உள்ள நிலையில், முதல்வர், இ.பி.எஸ்.,சும், 'அலெர்ட்' அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில், 'மக்களுக்கு தேவையான, அனைத்து அத்தியாவசிய சேவைகளும், தடையின்றி கிடைக்க, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடங்கிய, ஒன்பது குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் தலைமையில், இப்பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்' என, தெரிவித்துள்ளார்.
'கொரோனா' வைரஸ் தொற்றை தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், முதல்வர், இ.பி.எஸ்., நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆலோசனை நடத்தினார். அதன்பின், முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதன் விபரம்:* வரும், 31 வரை பிறப்பிக்கப்பட்ட, ஊரடங்கு உத்தரவு மற்றும் இதர உத்தரவுகள், ஏப்ரல், 14 வரை நீட்டிக்கப்படுகின்றன. மக்களுக்கு தேவையான, அனைத்து அத்தியாவசிய சேவைகளும், தடையின்றி கிடைக்க, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடங்கிய, ஒன்பது குழுக்கள் அமைக்கப்படும்* சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் போன்றவை, தினசரி, வாராந்திர, மாத வட்டி மற்றும் அசலை வசூல் செய்கின்றன. ஊரடங்கு உத்தரவால், பண வசூலை, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். மீறுவோர் மீது, குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும்* காய்கறி மார்க்கெட், கிராம சந்தை பகுதியில், மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க, காய்கறி, பழம் விற்கும் கடைகளை, விசாலமான இடங்கள் அல்லது மைதானங்களில் அமைக்க வேண்டும். மளிகை கடைகளிலும், மருந்து கடைகளிலும், காய்கறி கடைகளிலும், சமூக விலகல் முறையை, தீவிரமாக பின்பற்ற வேண்டும்* கர்ப்பிணி பெண்கள், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, காசநோய், எச்.ஐ.வி., தொற்று உள்ளோருக்கு, அரசு மருத்துவமனைகளில், இரு மாதங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும்* அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள், தடையின்றி நடக்க, சென்னை மாநகராட்சி அலுவலகத்திலும், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி மையம் அமைக்கப்படும். அவற்றுக்கான அத்தியாவசிய சான்றிதழை, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் வழங்குவர்* மருத்துவ பொருட்களுக்கான சான்றிதழ்களை, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம், அரசு மருத்துவனை முதல்வர்கள், மருத்துவ பணிகளின் இணை இயக்குனர்கள், பொது சுகாதார துணை இயக்குனர்கள் வழங்குவர்* அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும், தனியார் வாகனங்களுக்கும், அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள, தனியார் பணியாளர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களின் நேர்முக உதவியாளர்கள், காவல் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, அடையாள அட்டை வழங்க, ஏற்பாடு செய்ய வேண்டும்* மளிகை கடைகள், கூட்டுறவு விற்பனை அங்காடிகள் போன்றவை, வீடுகளுக்கு சென்று, அத்தியாவசிய பொருட்கள் வழங்க, அனுமதி அளிக்கப்படுகிறது. காய்கறி, பழங்கள், முட்டை போன்ற விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், பிற நபர்களுக்கும் தேவையான அனுமதி சீட்டை, அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்க வேண்டும்* வேளாண் பொருட்கள், கால்நடை, கோழி, மீன், முட்டை, கால்நடை தீவனம் ஆகியவற்றின் நகர்வுகளும் அனுமதிக்கப்படுகின்றன. இதில் சிரமங்கள் இருந்தால், 044 -- 2844 7701, 2844 7703 ஆகிய தொலைபேசி எண்களை, 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்* அரசால் அறிவிக்கப்பட்ட, சிறப்பு நிவாரணம் முழுமையாக பயணாளிகளை சென்றடைவதையும், அவற்றை வழங்கும் போது, சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள், முழுமையாக பின்பற்றப்படுவதையும், மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்* தேவைப்பட்டால், நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை, அவரவர் வீடுகளில் நேரடியாக வழங்க, கலெக்டர்கள் ஏற்பாடு செய்யலாம். நோய் தொற்றை தடுக்கும் விதமாக, கை ரேகை பதிவு செய்து, பொருட்கள் வழங்குவதை, முற்றிலும் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X