பொது செய்தி

இந்தியா

'கொரோனா' பாதிப்பு 649, பலி 13 ஆனது :சமூக பரவலாக மாறவில்லை என மத்திய அரசு தகவல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

புதுடில்லி : நாட்டில் 'கொரோனா' வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம், குஜராத் மத்திய பிரதேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இதுவரை 13 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டத்தை சேர்ந்த 49 வயது நபருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஐதராபாத்தை சேர்ந்த 41 மற்றும் 36 வயதான டாக்டர் தம்பதியினருக்கு வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தெலுங்கானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 ஆகஉயர்ந்துள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பையில் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் கடந்த 24ல் உயிரிழந்தார்.இவரது மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் மஹாராஷ்டிராவின் கொரோனா பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.ஜம்மு - காஷ்மீரில் முதல் கொரோனா பலி நேற்று பதிவானது. ஸ்ரீநகரில் உள்ள ஹைதர்போரா பகுதியை சேர்ந்த 65 வயது நபர் கொரோனா பாதிப்பால் நேற்றுஉயிரிழந்தார்.இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜம்மு - காஷ்மீரில் தொற்று எண்ணிக்கை 11 ஆகஉயர்ந்துள்ளது.கர்நாடகாவின் சிக்கபல்லாபுரா மாவட்டத்தின் கவுரிபிதானுாரில் இருந்து மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் மெக்காவுக்கு புனிதப் பயணம் சென்று திரும்பிய 75 வயது பெண் நேற்று முன் தினம் உயிரிழந்தார்.இவருக்கு கொரோனா தொற்று இருந்தது நேற்று உறுதியானது. இதன் மூலம் கர்நாடகாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. இங்கு 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தை சேர்ந்த 70 வயது முதியவர் கொரோனா பாதிப்புக்கு நேற்று பலியானார். இதன் மூலம் அம்மாநிலத்தின் பலி எண்ணிக்கை மூன்றானது. இங்கு 43 பேருக்கு தொற்றுஉறுதியானது.ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் சுய நினைவின்றி 'கோமா'வில் கிடந்த 73 வயது முதியவர் நேற்று உயிரிழந்தார்.இவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் கடுமையான நீரிழிவு மற்றும் சீறுநீரக கோளாறு காரணமாக பலியானதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.மேலும் ஜெய்பூர் மற்றும் ஜுன்ஜுன்னுா பகுதிகளில் இருவருக்கு வைரஸ் தொற்று நேற்று உறுதியானது. இதையடுத்து ராஜஸ்தானில் கொரோனா தொற்று எண்ணிக்கை 40 ஆனது.மத்திய பிரதேசத்தின் இந்துார் மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 47 வயது நபர் நேற்று உயிரிழந்தார்.இவர் எந்த வெளிநாட்டுக்கும் பயணம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இவரது பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.இந்நிலையில் ம.பி.யில் புதிதாக ஐந்து பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.நாடு முழுவதும் 649 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இந்த எண்ணிக்கையில் 47 பேர் வெளிநாட்டினர். 43 பேர் குணமடைந்துள்ளனர். 593 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 பேர் பலியாகினர்.
சமூக பரவலாக மாறவில்லைநிமோனியா உட்பட கடுமையான நுரையீரல் தொற்றுடன் நாட்டில் பல்வேறு மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 2,000 நோயாளிகளிடம் ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருந்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. இவர்கள் அனைவரும் கொரோனா பாதிப்புக்குள்ளான எந்த நாட்டுக்கும் சமீபத்தில் சென்று வரவில்லை. சென்று வந்தவர்களுடன் தொடர்பிலும் இல்லை. இந்த ஆய்வின் படி கொரோனா பாதிப்பு இந்தியாவில் சமூகப் பரவலாக மாறவில்லை என்பது தெரியவந்துள்ளது.- லாவ் அகர்வால்துணை செயலர், மத்திய சுகாதாரத்துறை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X