21 நாட்களில் என்ன செய்யலாம்

Added : மார் 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 21 நாட்களில் என்ன செய்யலாம்

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க 21 நாட்களுக்கு நாடு முழுவதும் 'ஊரடங்கு' மார்ச் 24 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நாட்களில் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கைகூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.தடையை மீறி ரோட்டில் நடமாடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற உத்தரவு ஒருபுறம் அச்சத்தை ஏற்படுத்தினாலும் நமக்காக, நம் நாட்டுக்காக சுயகட்டுப்பாட்டுக்குள் நாம் இருப்பது மிக மிக அத்தியாவசியம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் தான் முழுமையான வெற்றி கிட்டும். 21 நாட்கள் ஊரடங்கை கடைபிடிக்காவிட்டால் 21 ஆண்டுகள் பின்தங்கிவிடுவோம். நாட்டை காப்பாற்ற ஒவ்வொரு தனிமனிதனும் கண்ணுக்கு தெரியாத வைரசை எதிர்த்து போர் புரிய வேண்டிய நேரமிது.


21 நாட்களை எப்படி கடப்பது?வாழ்நாளில் இப்படியெல்லாம் கூட நடக்குமா என நம் அனைவரையும் புருவம் உயரச் செய்திருக்கிறது ஊரடங்கு. சாமானியர்களின் வாழ்வாதாரம் பறிபோகிறதே என்ற விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், இந்த கொரோனாவினால் நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய நன்மை அனைவரும் அவரவர் குடும்பத்துடன் செலவிட கிடைத்த பொன்னான நேரம். இந்த 21 நாட்களைப் பற்றி எதிர்மறையாக சிந்திக்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் நேர்மறையாக நாம் அணுகினால் முழு திருப்தியுடன் மிக எளிதாக கடந்து விடலாம்.பொதுவாக நாம் அனைவரும் கொரோனாவுக்கு முன் வரை உச்சரித்த வேத மந்திரம், 'எனக்கு நேரம் இல்லை' என்பதே. ஆனால் இன்று நம் அனைவர் கைகளிலும் ஏகப்பட்ட மணிநேரங்களை கடவுள் கொடுத்துள்ளான். இந்த 21 நாட்களில் அடுத்த 21 மாதங்களுக்கான வளத்தை மனதில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். நாம் இதை எவ்வாறு பயன்படுத்தப்போகிறோம்


குடும்பத்துடன் பேசலாம்முதலில் சக்கரம் கட்டிக்கொண்ட கதையாக வேகவேகமாக ஓடிய கால்களுக்கு சற்றே ஓய்வு கொடுங்கள். வீட்டில் இணையுடன் மனம் விட்டு பேசலாம். குழந்தைகளை கொஞ்சி பேசலாம். மறந்து போன பாரம்பரிய விளையாட்டுக்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி உடன் விளையாடலாம். வீட்டுப் பெரியவர்களுக்கு பிள்ளைகள் நம்முடன் அதிகம் பேசுவதில்லை என்ற பெருங்குறை நிலவுகிறது. அதை களையலாம். அன்பு, பாசம், நேசம் இதை அபரிமிதமாக கொட்டி பிரதி உபகாரமாய் நாமும் அவற்றை அறுவடை செய்யலாம். இல்லந்தோறும் சின்னச் சின்ன செல்லச் சண்டைகளும் வம்புகளும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதுதானே நம் வாழ்வில் உயிர்ப்பு கூட்டுபவை!பிள்ளைகளுக்கு அவரவர் வயதுக்கு ஏற்ப வீட்டு வேலைகளை பழக்கலாம். அவர்களின் தினசரி பழக்கத்துக்குள் கொண்டு வர இது மிகச்சரியான தருணம். சமையல் பழகுவது, காய்கறிகள் நறுக்கித் தருவது, பாத்திரங்களை சுத்தம் செய்தல், துணி துவைத்தல் மற்றும் உலர்த்துதல் என அனைத்தையும் பழக்குங்கள். 'அவர்களா, பெரிய சோம்பேறிகளாச்சே!. அவர்களிடம் சொல்வதற்கு பதில் நானே செய்து விடுவேன் என்பவர்களா நீங்கள்... இதைக் கேளுங்கள்.


பிடித்ததை செய்யுங்கள்பில் கேட்ஸிடம் ஒரு நிருபர் இப்படி கேட்டாராம். 'ஏன் சோம்பேறிகளையும் மைக்ரோசாப்ட்டில் பணிபுரிய அனுமதிக்கிறீர்கள்?' என்று. அதற்கு பில் கேட்ஸ் தெரிவித்த பதில் என்ன தெரியுமா 'ஒரு வேலையை மிகச்சுலபமாக செய்து முடிக்கிற வழிவகைகளை சோம்பேறிகள் விரைவாக கண்டடைகிறார்கள். அதனால் அவர்களும் எனக்கு முக்கியம்' என்றாராம். ஆக, யாரையும் விதிவிலக்காக எண்ண வேண்டாம். விலக்கியும் வைக்க வேண்டாம்.'பீரோவைத் திறந்தால் மனைவியின் புடவை வந்து நம் காலைத் தொட்டு வணங்குகிறது.

அவ்வளவு மரியாதை. மனைவியிடம் கிடைக்காதது, அவரின் புடவைகள் மூலம் கிடைக்கிறது!' என்ற நகைச்சுவையை படித்து கடந்திருப்போம். ஆனால் அதையெல்லாம் 'ஈகோ' பார்க்காமல் அழகாக அடுக்கி வைக்கலாம். அதை எண்ணி அவர், காலத்திற்கும் சிலாகிப்பார். பிள்ளைகளை துணை கொண்டு ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடம் என பழையதை கழித்து துாய்மைப்படுத்தலாம். பரண், அலமாரிகளை சீராக அடுக்கி வைக்கலாம். பிடித்த நுால்களை வாசிக்கலாம். உறவினர்களை பார்க்கத்தான் செல்லக்கூடாது. மறந்து போன சொந்த பந்தங்களிடம் அலைபேசியில் பேசலாம்.தகவல் தொழில்நுட்பம் உட்பட சில துறையினர் வீட்டில் இருந்தே பணிசெய்ய பணிக்கப்பட்டுள்ளனர். சரியாக திட்டமிட்டால் வேலை சுலபமாக இருக்கும். பணிசெய்யும் போது தான் குழந்தைகள் அவர்கள் எதிரில் அமர்ந்து அனைத்தையும் துவம்சம் செய்யும். தன்னை கவனிக்கவேண்டும், தன்னுடன் விளையாட வேண்டும் என அடம்பிடிக்கும். இப்படி அலுவல் பணியை வீட்டில் செய்யும்போது சில பல தடைகள் இருக்கத்தான் செய்யும்.வேலைக்கு போக பஸ், ரயிலையோ பிடிக்க வேண்டும் என்று வெந்ததும் வேகாததுமாய் உண்டு செரித்தவர்களுக்கு இந்த 21 நாட்கள் நல்ல ஆசுவாசம். உடல் அசதி, சோர்வினால் இணையுடன் ஒரு காதல் பார்வையை கூட பகிரும் சந்தர்ப்பங்கள் பலருக்கு ஏற்படாமலே போயிருக்கும்.

இந்நாட்களில் உடலால் தனித்திருந்து உள்ளத்தால் இணைந்திருக்கலாம்ஒவ்வொருவருமே நாளை என்ன செயல் செய்யவேண்டும் என்று இன்றே திட்டமிட்டுக் கொள்வோம். இதனால் இலக்குகளை நிர்ணயம் செய்வதோடு மட்டுமல்லாமல் சுலபமாக அடையவும் வழிவகை பிறக்கும். 21 நாட்கள் இருக்கிறதே! பிறகு பார்த்து கொள்ளலாம் என காலத்தை கடத்தி இறுதி நாட்களில் பரபரவென நகர்த்தாமல் அனைத்து நாட்களையும் ரம்மியமாய் கழிப்பது அவரவர் கைகளில் உள்ளது. ஏனெனில் நேரம் போனால் திரும்ப கிடைக்காது!


மாணவர்கள் தயாராகுங்கள்!மாணவர்கள் சில மணி நேரம் ஒதுக்கி படித்து அடுத்தாண்டுக்கு தயாராகலாம். பெற்றோரும் இந்நாட்களில் உங்களுக்கு உதவுவார்கள். மேலும் புதிதாக ஒரு மொழியை கற்க எண்ணியிருந்தவர்கள் இந்த நாட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். நேரத்தின் பின் நாமெல்லாம் சக்கரம் கட்டி ஓடிய காலம் 21 நாட்கள் கழித்து மீண்டும் வரத் தான் போகிறது. நாம் அபரிமிதமாக உழைக்க இந்த 21 நாட்கள் ஓய்வு நம்மை புத்துணர்வுடன் பணிபுரிய உத்வேகம் கொடுக்கும்.


இதுவும் கடந்து போகும்இந்நாட்களில் வெறுமனே 'டிவி'யை பார்த்து கொண்டிருந்தால் நம்மை இன்னும் பலவீனமாக்கி விடும். அதனால் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து நாட்டிற்கு துணை நிற்போம். இந்த 21 நாட்களில் கொரோனா பரவுதல் குறைவதோடு சில நல்ல விஷயங்களும் நடக்க வாய்ப்புள்ளது. வாகன விபத்து, கொள்ளை என சகலவித தீங்கும் குறையும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாது.கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால் மருத்துவமனையில் நம்மை தனிமைப்படுத்தி விடுவர். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் முற்றிலும் அற்றுப் போய் உண்மையில் அதுதான் மிகப்பெரிய கொடுமை. அந்த நிலைக்கு நாம் போகாமல் இருக்க வேண்டுமாயின் வீட்டிற்குள் சகல வசதிகளுடன் மனநிறைவு கொண்டு நம்மை தனிமைபடுத்திக் கொள்ளலாம்.சொந்தவீட்டில் பயனுள்ளதாக பொழுதை போக்கி இந்நாட்டை காப்பாற்றலாம். வாய்ப்பு நம் கைகளில். ஆரோக்கியமாய் நேர்மறை சிந்தனையுடன் எதிர்கொள்வோம். கொரோனாவை நல்ல புரிதலுடன் அணுகி வெல்வோம். மொத்தத்தில் இதுவும் கடந்து போகும்.- பவித்ரா நந்தகுமார்ஆரணி. 79044 92281

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
29-மார்-202009:54:51 IST Report Abuse
Pannadai Pandian 20 ஆண்டுகளில் 60 ஆண்டுகளுக்கான வேலையை செய்து விட்டேன். பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு என் கதி தான். எனவே இந்த நாட்களில் நன்றாக தூங்குங்கள். சாப்பிடுங்கள்.....தூங்குங்கள்.......சாப்பிடுங்கள்.......தூங்குங்கள்.......regain fresh energy .
Rate this:
Share this comment
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
27-மார்-202021:12:19 IST Report Abuse
mrsethuraman  இந்த கால பிள்ளைகளுக்கு உடல் உழைப்பு குறைவு . இந்த 21 நாட்களில் மாணவர்கள் தங்கள் துணிகளை துவைப்பது .இஸ்திரி செய்வது . வீட்டை பெருக்கி துடைப்பது போன்ற வேலைகளில் தங்களை ஈடு படுத்திக்கொள்ளலாம் .அவர்கள் வயதிற்கேற்ப டீ காபி போடுவது சாதம் வைப்பது சாம்பார் ரசம் பொரியல் செய்வதை கற்று கொள்ளலாம் .சமையல் அறைக்குள்ளே நுழையாத ஆண்களும் இதை செய்யலாம் . இது பிற்காலத்தில் எதற்கும் அடுத்தவரையே நாடி இருக்காமல் தன் தேவைகளை தானே நிறைவேற்றிக்கொள்ளும் சிறந்த பழக்கத்திற்கு வழி வகுக்கும் .இது சிறந்த உடற்பயிற்சியாகவும் அமையும் .
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
27-மார்-202010:58:08 IST Report Abuse
Gopi பரமபதம், தாயம், ஆடுபுலி ஆட்டம், செஸ், கேரம், சீடடு க்கட்டு, பல்லாங்குழி , இவை அனைத்து மூளை கூர்மை கணக்கு திறன் கூடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X