சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

Added : மார் 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

சாவித்திரி சிவசைலம், கோவையிலிருந்து எழுதுகிறார்: ஆந்திரா மாநிலம், நகரியில் இருந்து, கே.ஜெ. ஜஹாங்கீர் என்பவர், சில நாட்களுக்கு முன், இப்பகுதியில், 'இஸ்லாமியரில் திறமை உள்ளோர் ஏராளம்' என்ற தலைப்பில், கடிதம் எழுதி இருந்தார். அவர் கூறியது அனைத்தும், உண்மை.இஸ்லாமிய சகோதரர்கள் சிலர், கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வாய்ப்பாட்டுகளை விட, இசைக் கருவிகளை மீட்டுவதில் திறமை மிக்கவர்களாக உள்ளனர். தமிழ் மொழி வளர்ச்சியிலும், அவர்கள் பங்காற்றி வருகின்றனர்.காயிதே மில்லத் முதல், அப்துல் கலாம் வரை, அரசியலிலும் அவர்கள், பல சாதனைகளை செய்துள்ளனர்.தி.மு.க., துவங்கியதில் இருந்து, அக்கட்சியினர், ஓட்டு வங்கிக்காக மட்டுமே, இஸ்லாமிய சகோதரர்களிடம் சினேகம் கொண்டாடினரே தவிர, அவர்களின் முன்னேற்றத்திற்காக அல்ல.போராட்டம் மற்றும் தேர்தலுக்காக, இஸ்லாமியர்களை பயன்படுத்தும், தி.மு.க., தலைமை, பதவி என்றால் மட்டும், அவர்களை ஒதுக்கி விடும்.அவர்களுக்கு, அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருந்தால், ஊழல் நடந்திருக்காது. ஏனெனில் அவர்கள், புனித நுாலான திருக்குரானுக்கும், தர்மத்திற்கும் பயப்படுவர். கடவுள், தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களால் தான், ஊழல், மோசடி நடக்கிறது.இஸ்லாமியர்களின் திறமையை பயன்படுத்தாமல், அவர்களை, ஓட்டு வங்கியாக மட்டும் நினைப்போர், திராவிட அரசியல்வாதிகள் என்பதை, புரிந்து கொள்ள வேண்டும்.

கெட்டதிலும்ஒரு நல்லது!
இ.டி.ஹேமமாலினி, கிளாம்பாக்கம், திருவள்ளூரிலிருந்து எழுதுகிறார்: வீட்டிலுள்ள பெரியவர்கள் சொன்னால் கேட்காதவர்கள், 'கொரோனா' வைரஸ் பீதியில், இப்போது சுத்தமாக இருந்து வருகின்றனர்.கை கொடுத்தும், கட்டித் தழுவியும் அன்பை பரிமாறிக் கொண்டவர்களுக்கு, வணக்கம் சொல்வது தான், சுகாதாரமானது என்பதை, கற்றுத் தந்துள்ளது, கொரோனா!பல்வேறு ஜாதி, மதம், இனம் வாழும், 130 கோடி மக்கள் தொகை உடைய இந்தியாவில், இதுவரையில் எந்த விதமான வைரசும் தோன்றவில்லை.பல கோடி மக்கள் பங்கெடுக்கும், கும்பமேளாவிலும்; தெலுங்கானாவில், 12 நதிகளை பூஜிக்கும், 'மேதாரம்' யாத்திரையிலும், லட்சக்கணக்கில் மக்கள் ஒன்றாக இணைந்து குளிக்கும் உற்சவத்தில் கூட, ஒரு வைரஸ் கூட உருவாகவில்லை.'சீசன்' நேரத்தில், ஐந்து கோடிக்கும் அதிகமான, அய்யப்ப பக்தர்கள் சென்று வரும் சபரிமலையிலும்; ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான மக்கள் தரிசனம் செய்யும் திருமலையிலும் கூட, ஒரு வைரசும் உருவானதில்லை.ஜாதி, மத பேதமின்றி, ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும், 'குருத்வார்' போன்றவற்றில் கூட, வைரஸ் உருவாகும் பீதி ஏற்பட்டதில்லை.இவற்றிற்கு எல்லாம் காரணம், இந்தியாவின் கலாசாரம், உணவு முறை, இயற்கையாடு இணைந்து வாழும் முறையும் தான்!முறையற்ற உணவு முறை தான், பல விதமான வைரஸ் உருவாக காரணம். சீனா போன்ற சில நாடுகளில் பாம்பு, பல்லி, பூரான், தேள், வவ்வால் போன்றவற்றை, சமைக்காமலும், அரைகுறையாக வேக வைத்தும் சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதனால் தான், நோய்கள் உருவாகின்றன.கொரோனா வைரஸ் பீதியால், மக்களிடம் ஒழுக்கம், சுகாதாரம் மேம்பட்டுள்ளது. கெட்டதிலும் ஒரு நல்லது!

நம் தேசத்தைகாப்போம்!
அ.குணா, சிதம்பரம், கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: டில்லியில், 'நிர்பயா' என்ற மருத்துவ கல்லுாரி மாணவி, ஆறு பேர்களால், நள்ளிரவில், ஓடும் பஸ்சில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது, நாடு முழுவதும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அது தொடர்பான வழக்கில், நான்கு பேருக்கு, துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.'ஒரு இளம்பெண், தனிமையில், நள்ளிரவில், உடல் முழுவதும் நகை அணிந்து, சாலையில் பாதுகாப்பாக நடந்து செல்ல முடிகின்றதோ, அன்று தான், நாம் உண்மையான சுதந்திரம் அடைந்து விட்டதாக சொல்லி, மகிழலாம்' என, நம் தேச தந்தை, காந்தி கூறியுள்ளார்.இன்று, பகலில் கூட அப்படி செல்ல முடியவில்லையே!'நிர்பயா' சம்பவம் நடந்ததற்கு, முக்கிய காரணம், அந்த குற்றவாளிகள் அனைவரும், மது அருந்தியதேயாகும்.காந்தி, 'இந்த நாட்டை ஆள்வதற்கு, எனக்கு ஒரு மணி நேரம் அனுமதி அளித்தால், உடனடியாக, அனைத்து மதுக்கடைகளை மூடிவிடுவேன்' என்றார். பெரும்பாலான குற்றங்களுக்கு, மதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது. தனி மனித ஒழுக்கம், சமூக சீர்கேடு, குடும்பங்கள் பாதிப்பு என, மதுவின் அட்டூழியங்கள் அதிகம்.ஆனால், இன்று அரசே, வீதிக்கு வீதி மதுக்கடைகளை திறந்து வைத்து, விற்பனை செய்கிறது. மேலும், அதன் விற்பனையை அதிகரிக்க, அரசு அதிகாரிகள் ஆலோசனை வேறு நடத்துகின்றனர்; கொடுமை!நம் நாடு, சுதந்திரம் அடைந்து, 72 ஆண்டுகள் நிறைவுபெற்றும், இன்னும் ஏழ்மை ஒழியவில்லை. அனைவருக்கும், தரமான கல்வி கிடைக்கவில்லை.நிர்பயா குற்றவாளிகள் கூட, பள்ளிக் கல்வியைக் கூட நிறைவு செய்யாதவர்கள் தான். நல்ல கல்வி கிடைக்காத குழந்தைகள், எதிர்காலத்தில் தவறான பாதைக்கு செல்ல வாய்ப்புகள் அதிகம்.பெண்களுக்கு எதிரான, பாலியல் தாக்குதல்களில் முக்கிய பங்கு, இந்த மதுவுக்கு உண்டு.மது குடிக்கும் வழக்கம், பள்ளி மாணவர்கள் வரை வந்து விட்டது. ஆண், பெண் என, இருபாலரும் மது குடிப்பதில், சமத்துவம் பேண துவங்கி விட்டனர்.'பெண் சுதந்திரம்' எனக் கூறி, இளம்பெண்கள், நள்ளிரவில், ஆண் நண்பர்களுடன், 'பார்'களுக்கு செல்வது, குற்றங்கள் நடக்க வழிவகுத்து விடுகிறது.நம் முன்னோர், விளக்கு வைக்கும் முன், பெண்கள், வீடுகளுக்கு வந்து விடவேண்டும் எனச் சொல்வது, வழக்கம். ஆனால், இன்று பணி சூழல் காரணமாக, இரவிலும் அவர்கள் சென்று வர வேண்டிய சூழல் உள்ளது; அதனால், அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.நம் கல்வி முறையை, ஆங்கில வழியில் மாற்றி, அதை வியாபாரமாக்கி விட்டோம். நல்ல ஒழுக்கத்தையும், பண்பையும் போதிக்காத கல்விக்கு, நம் குழந்தைகள் அடிமையாகி விட்டனர்.அதன் பலனை, நிர்பயா குற்றங்கள் மூலம் பார்த்து, வெட்கி தலைகுனிந்து நிற்கிறோம்.இனிவரும் காலங்களில், மதுவை ஒழித்து, நல்ல கல்வியை அளிப்பதே, நம் தேசத்திற்கு நல்லது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
28-மார்-202000:28:25 IST Report Abuse
Subbanarasu Divakaran இன்று கூட ராஜஸ்தான் ஜோத்பூர் நகரத்தில் பெண்கள் உடல் நிறைய ஆபரங்கள் அணிந்து இரவில் தெருவில் வருவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
27-மார்-202020:26:10 IST Report Abuse
Krishnamurthy Venkatesan ஆளில்லாத கடையில் டீ ஆத்தினான்கிற கதைபோல் தங்கம் வாங்க ஆளில்லை ஆனால் விலை மட்டும் விஷம் போல் இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
27-மார்-202006:41:56 IST Report Abuse
Darmavan இந்த உலகத்துக்கு எமன் /சாத்தான் சீனா தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X