கொரோனாவை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'கொரோனா'வை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்

Updated : மார் 28, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (3)
Share
 'கொரோனா'வை ,தவிர்க்க, என்ன ,செய்ய வேண்டும்?,இந்திய மருத்துவ ,ஆராய்ச்சி, கவுன்சில், விளக்கம்

புதுடில்லி:ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கொரோனா தொற்று குறித்து, மக்கள் மத்தியில் உள்ள பல கேள்விகளுக்கு, தெளிவான விளக்கங்களை அளித்துள்ளது.

அதன் விபரம்:


இதய கோளாறு, நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபர்களை, கொரோனா தொற்று எளிதில் தாக்குமா?நிச்சயமாக இல்லை. மற்றவர்களுக்கு இருக்கும் அதே அளவு ஆபத்து தான்,


மேற்கூறியநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உள்ளது.மேற்கூறிய நோய்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு கடுமையானபாதிப்புகளை உண்டாக்கவாய்ப்புள்ளதா?


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 80 சதவீதத்தினருக்கு, காய்ச்சல், தொண்டை
வலி, இருமல் மற்றும் லேசான நுரையீரல் தொற்று ஏற்பட்டு, பின் குணமடையும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய கோளாறுகள் உள்ளவர்களுக்கு, இந்த பாதிப்புகள் சற்று கடுமையாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, அவர்களுக்கு கூடுதல் கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.


நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, கொரோனா தொற்று எளிதாக பரவுமா?

பொதுவாகவே, சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கு, எல்லாவிதமான தொற்றுகளும், எளிதில் பரவக்கூடிய அபாயம் உள்ளது. ஆனால், நீரிழிவு நோய் உள்ள அனைவருக்குமே, கொரோனா தொற்று எளிதில் பரவக்கூடும் என கூற முடியாது. சில நபர்களுக்கு, அவர்களின் உடல்நிலையை பொறுத்து, எளிதில் தொற்று ஏற்படவும், குணமடைவதில் சிக்கல் உருவாகவும் வாய்ப்புள்ளது.

எனவே, உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகளை, விடாமல் தொடருங்கள். மருந்து,
மாத்திரைகளை தவறாமல் சாப்பிடுங்கள், சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதித்து, கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, உடல்நலக் குறைவுஏற்பட்டால், அவர்களின் ரத்தசர்க்கரையின் அளவை,தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். அவர்கள் எடுத்துக் கொள்ளும், 'இன்சுலின்' உள்ளிட்ட மருந்துகளின் அளவுகள், உணவுகளில், சில மாற்றங்கள்செய்யப்பட வேண்டும்.


உயர் ரத்த அழுத்தத்திற்கு உட்கொள்ளும் மருந்துகள், கொரோனா வைரஸ் தாக்கத்தை அதிகரிக்க செய்யும் என கூறப்படுவது உண்மையா?

பல்வேறு மருத்துவ ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் இதய சிகிச்சை நிபுணர்களின் கருத்துப்படி, இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. உயர் ரத்த அழுத்தம் உள்ள
நோயாளிகளுக்கு, இரண்டு விதமானமருந்துகள் வழங்கப்படுகின்றன.அவை, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்து, இதயம் செயல் இழந்துவிடமல் இருக்க உதவுகிறது. இந்த
மருந்துகளை, டாக்டர்களின் அனுமதி இன்றி நிறுத்துவது, உயிருக்கு ஆபத்தாக அமையும்.


காய்ச்சல் வந்தால், என்ன விதமான வலி நிவாரணி மருந்தை உட்கொள்வது?

'ஐபுப்ரோபன்' போன்ற வலி நிவாரணிகளை, டாக்டர்களின் பரிந்துரையில்லாமல் எடுத்துக் கொள்வது ஆபத்தானது. இதய கோளாறு உள்ளவர்கள் இந்த மருந்தை உட்கொண்டால், சிறுநீரக பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே, 'பாராசிட்டமால்' போன்ற வலி நிவாரணி மருந்துகள்,
என்றைக்கும் பாதுகாப்பானது.


ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டால், என்ன செய்ய வேண்டும்?காய்ச்சல், இருமல், தசை வலிகள் மற்றும் மூச்சு திணறல் போன்றவை ஏற்பட்டால், உடனடியாக டாக்டரை தொலைபேசியில் அழைத்து, அவர் அறிவுரையை பெறுங்கள். வீட்டிலேயே,
14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகி இருங்கள்.முக கவசம் அணிந்து, கைகளை நன்கு கழுவி, சுத்தமாகஇருங்கள். மூச்சு திணறல், உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் அதிகரிக்க துவங்கினால், உடனடியாக டாக்டரை நேரில்
சந்தியுங்கள்.


கொரோனாவை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?ஒருவரின் இருமல், தும்மல் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் எச்சில் துளிகளில் இருந்தும், தொடுதலில் இருந்துமே, கொரோனா தொற்று பரவுகிறது. தொற்று உள்ள பொருளை ஒருவர் தொடுவதன் மூலம், அந்த வைரஸ் அவரது கைகளில் ஏறிக் கொள்ளும். பின்னர் அவர், முகத்தை தொடும் போது, அவரை கொரோனா வைரஸ் தாக்குகிறது.

எனவே தான், வீட்டின் நாம் புழங்கும் பகுதிகள், பயன்படுத்தும் பொருட்களை, நன்கு துடைத்து எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கிருமி நாசினி பயன்படுத்தி, கைகளை அடிக்கடி கழுவுங்கள். புதிய இடங்களில் கை வைக்க நேர்ந்தால், கைகளில் சோப்பு போட்டு, நன்றாக
கழுவுங்கள்.இவ்வாறு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X