தமிழ்நாடு

போலீசார் லத்தியை சுழற்றாமல் கட்டுக்குள் வந்தது ஊரடங்கு

Added : மார் 26, 2020
Share
Advertisement
 போலீசார் லத்தியை சுழற்றாமல் கட்டுக்குள் வந்தது ஊரடங்கு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் போலீசாரின் அடக்குமுறையின்றி ஊரடங்கு உத்தரவு கட்டுக்குள் வந்தது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு முன்னதாக தமிழக அரசு 144 தடை உத்தரவை அறிவித்தது. இந்த நடைமுறை கடந்த 24ம் தேதி மாலை 6:00 மணி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.எனினும் தமிழகம் முழுவதும் 25ம் தேதி அதிகாலை முதல் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் திருக்கோவிலுார் நகர் முழுவதும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டிருந்தனர். ஊரடங்கு உத்தரவை மீறி பல்வேறு காரணங்களை கூறி இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்களை பலத்த கவனிப்பிற்கு பிறகு அனுப்பி வைத்தனர்.இதனைப் பார்த்து பயந்த பலரும் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர அஞ்சி வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.கொரோனாவின் வீரியத்தை உணர்ந்த அரசு, அதனைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையின் தீவிரத்தை அறியாத மக்களின் செயல்பாடு ஒரு பக்கம் வருத்தம் அளித்தாலும், போலீசாரின் நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பொதுமக்கள் மீதான பலபிரயோகத்தை தடுத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக நேற்று போலீசார் அத்துமீறி சுற்றித் இருந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து, அனுப்பி வைத்தனர்.அடி, உதை இல்லை என்றாலும் வழக்கிற்கு பயந்து சுற்றித் திரிந்த இளைஞர்கள் வீட்டுக்குள் முடக்கினர், உண்மையிலேயே அவசிய தேவை உள்ளவர்கள் மட்டுமே போலீசாரிடம் நிலைமையைக் கூறி நடந்து சென்று பொருட்களை வாங்கிச் சென்றதைக் காணமுடிந்தது. இதனால் திருக்கோவிலுார் நகரில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

போலீசாரின் கவனம் முழுவதும் நகர் பகுதியிலேயே இருந்ததால், கிராமப்பகுதியில் போலீசாரின் ரோந்து பணி குறைவாகவே காணப்பட்டது. இதன் காரணமாக பெங்களூரு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு பிழைப்பிற்காக சென்று ஊர் திரும்பியவர்கள், வயது முதிர்ந்தவர்கள், கோவில் வளாகம், குளக்கரை, மந்தைவெளி என ஆங்காங்கே கூடி அமர்ந்து ஊர்க்கதை பேசிக்கொண்டிருப்பதை காணமுடிந்தது.

ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார், சுகாதாரத் துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் இவர்களுக்கு நோய் பரவும் அபாயத்தை எடுத்துக்கூற வேண்டும். அப்படியும் மதிக்கவில்லை என்றால் சட்டரீதியாக வழக்கு பதிவு செய்தால் மட்டுமே கிராமங்களிலும் சமூக இடைவெளியை ஏற்படுத்தி நோய் பரவலை தடுக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X