இந்தியா

நான்கரை மணி நேரத்தில் ரூ.36 லட்சத்துக்கு அனுமதி; வீட்டில் இருந்தபடி பணியாற்றி ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் புதுமை

Added : மார் 27, 2020
Share
Advertisement

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை் அதிகாரிகள், வீட்டில் இருந்தபடியே பணியாற்றி, நான்கரை மணி நேரத்தில், வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்கான தொகைக்கு அனுமதி அளித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், மக்களுடன் நெருங்கிய தொடர்புடைய அத்தியாவசிய துறைகளை தவிர, மற்ற துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் 21 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள், தங்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலையை செய்வதா? எப்படி? என அடுக்கடுக்கான கேள்வி எழலாம். தொடர்ந்து படியுங்கள்...

வெண்டிலேட்டர்கள் தேவை:

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் அதிகாரிகளும், ஊழியர்களும் தங்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி, வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்காக ரூ.36 லட்சத்தை சுகாதாரத் துறைக்கு அனுப்பும் பணியை 4:30 மணி நேரத்தில் முடித்துள்ளனர்.கொரோனா குறித்த சிகிச்சைக்கு வெண்டிலேட்டர்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. எனவே, வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்காக, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.36 லட்சத்தை வழங்குவதற்கு வைத்திலிங்கம் எம்.பி., முன் வந்தார். இதற்கான தனது ஒப்புதல் கடிதத்தை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனருக்கு 'வாட்ஸ் ஆப்' மூலமாக நேற்று முன்தினம் மதியம் அனுப்பி வைத்தார்.

கைகொடுத்த 'வாட்ஸ் ஆப்'

லாஸ்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்த ஊரக வளர்ச்சித் துறையின் செயலரும், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனருமான ரவிப்பிரகாஷ், எம்.பி.,யின் கடிதத்தை 'வாட்ஸ் ஆப்'பில் பார்த்தவுடன், உடனடியாக செயலில் இறங்கினார்.எம்.பி.,யின் கடிதத்தை, டீலிங் அசிஸ்டெண்ட் ஊழியருக்கு 'வாட்ஸ் ஆப்' செய்தார்; மேலும், அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ரூ.36 லட்சத்தை வழங்குவதற்கான கோப்பை தயார் செய்து அனுப்புமாறு உத்தரவிட்டார். காலாப்பட்டில் உள்ள வீட்டில் இருந்தபடியே தனது கம்ப்யூட்டரில் கோப்பை தயார் செய்த ஊழியர், உடனடியாக மெயில் மூலமாக, ஊரக வளர்ச்சித் துறையின் செயலர் ரவிப்பிரகாஷூக்கு அனுப்பினார். அதை படித்து, தேவையான திருத்தங்களை செய்யுமாறு அறிவுறுத்த, அதன்படி கோப்பில் திருத்தங்களை செய்து ஊழியர் மறுபடியும் அனுப்பினார். இது, செயற்பொறியாளர், திட்ட அதிகாரி ஆகியோரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது.

நவீன தொழில்நுட்பம்

இறுதியாக வந்த பைலை, தனது மொபைல் போனில் உள்ள 'ஸ்கேம் ஸ்கேனர்' மூலமாக ஸ்கேன் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து கையெழுத்திட்டு, 36 லட்சம் ரூபாயை சுகாதாரத் துறைக்கு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தார் ரவிப்பிரகாஷ். இந்த ஒப்புதல் கடிதம், சுகாதாரத் துறை இயக்குனருக்கும், எம்.பி.,க்கும் வாட்ஸ் ஆப்பில் உடனடியாக அனுப்பப்பட்டது.மேலும், சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, அவர்களது வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்கள் கேட்கப்பட்டது. அந்த விபரங்களை, சுகாதாரத் துறையின் முதுநிலை கணக்கு அதிகாரி வாட்ஸ் ஆப் மூலமாக அனுப்பி வைக்க, அந்த விபரங்கள் டீலிங் அசிஸ்டெண்ட் ஊழியருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, முறைப்படியான வங்கிக்கு கடிதம் தயார் செய்யப்பட்டது.

அனைத்து பணிகளும் ஓவர்

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 36 லட்சத்தை, சுகாதாரத் துறையின் கணக்கிற்கு 'இ-டிரான்ஸ்பர்' செய்யுமாறு கடிதத்தில் கையெழுத்திட்டு, ரவிப்பிரகாஷ், சம்பந்தப்பட்ட வங்கி மேலாளருக்கு அனுப்பி வைத்ததுடன் நடைமுறைகள் முடிவுக்கு வந்தன.மதியம் 12:10 மணிக்கு ஆரம்பித்த இந்த பணிகள், மாலை 4:50 மணிக்கு, அதாவது நான்கரை மணி நேரத்தில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதான்... மின்னல் வேகம்!

வழக்கமாக, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செலவிட வேண்டும் என்றால், முதலில் சம்பந்தப்பட்ட துறைக்கு கோப்பு அனுப்பப்பட்டு, எம்.பி.,க்கள் குறிப்பிடும் வேலைக்கான மதிப்பீடு கேட்கப்படும். மதிப்பீடு கோப்பு வந்தவுடன், முதல்கட்டமாக, 50 சதவீத தொகையே வழங்கப்படும். வேலை முடிந்து பில்களை சமர்ப்பித்த பிறகே மீதி தொகை ரிலீஸ் செய்யப்படும்.இதற்கிடையில், மேலே குறிப்பிட்டுள்ள பைல் நடைமுறைகளும் உள்ளன. இந்த நடைமுறைகள் முடிவதற்கு வாரக்கணக்கில் ஆகி விடும். ஆனால், கொரோனா எதிரொலியாக அவசர அவசியம் கருதி, நான்கரை மணி நேரத்தில் அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டு பணம் வழங்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X