பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனை, சுகாதார பணியாளர்களுக்கு முகக்கவசம் பற்றாக்குறை!

Added : மார் 27, 2020
Share
Advertisement
  மருத்துவமனை, சுகாதார பணியாளர்களுக்கு முகக்கவசம் பற்றாக்குறை!

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் பணியாற்றும், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு, போதிய அளவில் முகக்கவசம் வழங்கவில்லை என புகார் எழுந்து உள்ளது. இதனால், களப்பணியாற்றும் சுகாதார பணியாளர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள், அதிவேகத்தில் பரவிவருகிறது.
கொரோனா பாதிப்பை தடுக்க, கோவை மாவட்டத்தில், கேரள மாநில எல்லைகள் 'சீல்' செய்யப்பட்டு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே, மாநில எல்லைகளை கடந்து கொண்டு செல்லப்படுகிறது. மாவட்டம் முழுவதிலும், சுகாதாரத்துறையினர் சோதனைச்சாவடிகளில் மாநில எல்லையை கடந்து செல்பவர்களுக்கு, கொரோனா பாதிப்பு உள்ளதா என பரிசோதித்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, கேரள மாநில எல்லைகளான, மீனாட்சிபுரம், செமணாம்பதி, நடுப்புணி, கோபாலபுரம் உள்பட பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்த சோதனைச்சாவடிகளில் பணியாற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு, போதிய அளவில் முகக்கவசம், கையுறை வழங்கப்படாமல் உள்ளதாக புகார் எழுந்து உள்ளது.அதேபோல், ஆனைமலை சுற்றுப்பகுதி மருத்துவமனை, ஆரம்பசுகாதார நிலையங்களில், புறநோயாளிகளை பரிசோதிக்கும் டாக்டர்களுக்கும், முகக்கவசம், கையுறை கிடைக்காத நிலை நீடிக்கிறது. மொத்த தேவையில், 65 சதவீதம் மட்டுமே பாதுகாப்பு பொருட்கள் வழங்கப்படுகிறது.மக்கள் தங்களை சுகாதாரமாக பராமரிக்க, முகக்கவசம், 'சானிடைசர்', 'ஹேண்ட் வாஷ்', 'சோப்' வாங்குவதற்காக, மருந்துகடைகளை தேடி படையெடுத்து வருகின்றனர்.மருந்து கடைகளில், முகக்கவசம், 'சானிடைசர்' உள்ளிட்ட பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சில கடைக்காரர்கள் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல், உரிய நடவடிக்கை எடுத்து, சுகாதார பணியாளர்களுக்கு போதிய அளவில் முகக்கவசம், கையுறை வழங்க வேண்டும். மருந்துக்கடைகளில் அதிக விலைக்கு விற்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.பிரச்னையை சமாளிப்போம்!கோவை பொதுசுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ரமேஸ்குமார் கூறியதாவது: கோவை மாவட்டத்துக்கு ஒரு நாளைக்கு, ஐந்தாயிரம் முகக்கவசங்கள் தேவைப்படுகிறது. மாநில எல்லை, மருத்துவமனைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு, போதிய அளவில் முகக்கவசம் வழங்கி வருகிறோம்.
அரசு போதிய அளவில் முகக்கவசம், கையுறை வழங்கி வருகிறது. முகக்கவசத்தின் தேவை அதிகரித்து உள்ளதால், உள்ளூரில் தயாரிப்பவர்களிடம் கொள்முதல் செய்யவும் திட்டமிட்டு உள்ளோம்.ஒருவரிடம் இருந்து மற்றொருவர் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நின்றாலே வைரஸ் பரவாது. மக்கள் 'சோப்' மூலம், 30 வினாடிகளுக்கு கைகளை நன்றாக கழுவினாலே வைரஸ் ஒழிந்து விடும்.'சானிடைசர்', 'ஹேண்ட்வாஷ்' தேவையில்லை, முகக்கவசமும் தேவையில்லை. மக்கள் இவற்றை அதிகஅளவில் வாங்கி, தட்டுப்பாடை உருவாக்குகின்றனர். மக்கள் தேவை இருந்தால் மட்டுமே இவற்றை வாங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X