பொது செய்தி

தமிழ்நாடு

தென்னையை காவு வாங்கும் குருத்துக்கட்டை நோய்! பாதுகாக்க நடவடிக்கை எடுப்பார்களா?

Added : மார் 27, 2020
Share
Advertisement

ஆனைமலை:ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், தென்னை மரங்களில் குருத்துக்கட்டை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நோய் பாதித்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. தென்னையில் வெள்ளை ஈ, காண்டாமிருக வண்டு, வாடல் நோய், குருத்தழுகல் உள்பட பல்வேறு நோய் தாக்குதல்களால் மகசூல் குறைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக கடந்த, நான்கு ஆண்டுகளாகவே அதீதமாக வெள்ளை ஈ தாக்குதலால், நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.இந்நிலையில், ஏற்கனவே உள்ள பல பிரச்னைகளுக்கு மத்தியில், தற்போது தென்னையில் வேகமாக பரவிவரும் குருத்துக்கட்டை நோய், விவசாயிகளுக்கு மீண்டும் 'தலைவலியை' ஏற்படுத்தி உள்ளது. தற்போது, பொன்னாலம்மன்துறை, பங்களாமேடு, மயிலாடுதுறை, நரிக்கல்பதி, காளியாபுரம், சேத்துமடை, கோட்டூர் உள்பட ஒன்றியம் முழுவதிலும் குருத்துக்கட்டை நோய் அதிவேகமாக பரவி வருகிறது.இதனால், நோய் பாதித்த மரங்களை வெட்டி அழித்து, விவசாயிகள் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.நோய் தாக்குதலை கட்டுப்படுத்த, வேளாண்துறை மற்றும் தென்னை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது:தற்போது, பொன்னாலம்மன்துறை, சேத்துமடை சுற்றுப்பகுதிகளில், தென்னை மரங்களில் குருத்துக்கட்டை நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நோய், தஞ்சாவூர் வாடல் நோய் போன்றும் காணப்படுகிறது.நோய் தாக்கிய மரங்களில் குருத்துப்பகுதி பாதித்து ஓலைகள் காய்ந்து காணப்படுகிறது. ஓலை, தேங்காய் எண்ணிக்கை குறைந்து, மகசூல் குறைந்து காணப்படுகிறது. நோய் தாக்கிய ஆறு மாதங்களிலேயே மரம் மரணிக்கிறது.வேளாண் துறை மற்றும் தென்னை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள், இப்பகுதிகளில் ஆய்வு செய்து பிரச்னையை தீர்க்காமல் அலட்சியமாக உள்ளனர்.இதனால், நோய் தாக்குதல் பரவுவதை தவிர்க்க விவசாயிகள், குருத்துக்கட்டை நோய் தாக்கிய மரங்களை வெட்டி அழித்து, எரித்து வருகின்றனர். மரத்தை அழிப்பதால் பொருளாதார ரீதியில் கடும் பாதிப்புக்கு உள்ளாகி, வாழ்வாதாரத்தை இழக்கின்றனர்.நோய்க்கு உரிய கட்டுப்பாடு முறையை கற்றுக்கொடுத்து, நோய் பரவுவதை தடுத்து விவசாயிகளை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.வேளாண் அதிகாரிகள் கூறுகையில், 'ஒரு சில தோப்புகளில், தென்னையில் குருத்துக்கட்டை நோய் இருப்பதாக தகவல் வந்துள்ளது. தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளுடன் சென்று, கள ஆய்வு செய்யப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X