புகார்! வட்டத்தில் பல சாலைகள் மோசம்; ஊராட்சிக்குழு கூட்டத்தில் காரசாரம்| Dinamalar

தமிழ்நாடு

புகார்! வட்டத்தில் பல சாலைகள் மோசம்; ஊராட்சிக்குழு கூட்டத்தில் காரசாரம்

Added : மார் 27, 2020 | கருத்துகள் (1)
Share
புகார்! வட்டத்தில் பல சாலைகள் மோசம்; ஊராட்சிக்குழு கூட்டத்தில் காரசாரம்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் மோசமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட ஊராட்சி குழு முதல் கூட்டம் வளர்ச்சி மன்ற கூடத்தில் நேற்று நடந்தது. சேர்மன் திருமாறன் தலைமை தாங்கினார். கலெக்டர் அன்புச்செல்வன், ஊராட்சி உதவி இயக்குனர் ஆனந்தன், துணை சேர்மன் பர்வீன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் அன்புச்செல்வன் பேசுகையில், 'மாவட்ட ஊராட்சிக்காக மாநில நிதி ஆணையம் 20 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. அதை நீங்கள் எந்தெந்த பகுதியில் தேவை இருக்கிறது என மன்றத்தில் முடிவு செய்து ஒதுக்கீடு செய்து கொள்ளலாம்' என்றார்.

தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: கவுன்சிலர் கந்தசாமி: இந்த கூட்டத்திற்கு உயர் அதிகாரிகளும் வருகை தரவேண்டும். ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம் துவங்கப்பட்டு இதுவரை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. எங்கள் பகுதியில் உள்ள சாலையில் ஒரு வாகனம் செல்லும் அளவில் குறுகி உள்ளது.

கலெக்டர்: ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சக்தி விநாயகம்: நல்லுார் ஒன்றியம் மிகவும் பின் தங்கிய ஒன்றியமாக உள்ளது. இவ்வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே அப்பகுதியில் அவசர சிகிச்சை அளிக்க கூடிய வகையில், மருத்துவமனையை அமைக்க வேண்டும்.

கலெக்டர்: வேப்பூரில் 24 மணி நேர அவசர சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது. வேப்பூரில் புதிய பஸ் நிலையமும் அமைக்கப்படவுள்ளது. ராதாகிருஷ்ணன்: நெய்வேலியில் அதிகளவு தண்ணீர் வெளியேற்றுவதால் 350 முதல் 450 அடி ஆழம் வரை தண்ணீர் சென்று விட்டது. எனவே இப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். சிதம்பரம் - விருத்தாசலம் சாலை மிக மோசமாக உள்ளது. இவ்வழியே வாகனங்கள் செல்லவே முடியவில்லை.

மகாலட்சுமி: பரங்கிப்பேட்டை - விருத்தாசலம் சாலை பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததோடு சரி. பின்னர் பணி நடைபெறவில்லை. மருதுார், அருந்ததியர் காலனிக்கு பாலம் அமைத்துக்கொடுக்க வேண்டும். ஆலம்பாடி, முத்துகிருஷ்ணாபுரம் சாலை மோசமாக உள்ளது. முத்துக்கிருஷ்ணன்: சிப்காட்டில் பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்வதே இல்லை. சிப்காட் பகுதியில் மின் கேபிள்கள் புதைக்கப்பட்டு வருகின்றன.

இப்பணிகள் சரி வர நடைபெறவில்லை. பல இடங்களில் பள்ளங்களை மூடாமலே சென்றுள்ளனர்.சிப்காட் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். ஜவான்ஸ்பவன் சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X