தமிழ்நாடு

மொடக்குறிச்சி தொகுதியில் 850 பேருக்கு மேல் தனிமை: கொடுமுடியில் அதிகம்; சுகாதாரத்துறை நடவடிக்கை தீவிரம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி தொகுதியில் மட்டும், 850 பேருக்கும் மேற்பட்டோரை, சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி, கண்காணித்து வருகின்றனர்.
ஈரோடு, கொல்லம்பாளையத்தை சேர்ந்த, மத்திய அரசு வங்கி காசாளர் ஒருவர், கொடுமுடியில் பணிபுரிகிறார். ஈரோட்டில், மத பிரசாரத்துக்கு வந்த தாய்லாந்து ஆசாமிகளுடன், தொடர்பில் இருந்தார். அவர்களில் இருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் வங்கி காசாளர், பெருந்துறை மருத்துவமனையில், கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்னும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், கொடுமுடி பள்ளிவாசலில் அவருடன் தொடர்பில் இருந்த, 129 பேரை, சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். இவர்களின் வீட்டு வாசலில், கொரோனா தொற்று குறித்து, நேற்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது. கொடுமுடியில் மட்டும், நேற்று முன்தினம் வரை, 491 பேரும், நேற்று, 130 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் வீடுகளில், கொரோனா தொற்று குறித்த நோட்டீஸை, சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்றும் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் அவல்பூந்துறை, அரச்சலூர், மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த, 56 பேர் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் என்பது, அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்தது. இவர்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்துவோர் எனப்படும் நோட்டீசை ஒட்டி, 28 நாட்களுக்கு தனிமையில் இருக்க, சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதேசமயம் இப்பகுதிகளில் மட்டும், 235 பேரை சுகாதார அதிகாரிகள், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர். மொத்தத்தில் மொடக்குறிச்சி தொகுதியில் மட்டும், 856 பேரை தனிமைப்படுத்தி, கண்காணித்து வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டியதுடன், இடது கையில் சீல் வைக்கப்பட்டு, வீட்டிலிருந்து யாரும் வெளியில் செல்லக்கூடாது, வெளிநபர்களை வீட்டில் தங்க வைக்கக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக, அதிகாரிகள் கூறினர்.

அந்தியூரிலும் நோட்டீஸ்...: அந்தியூர் தாலுகா அலுவலகத்தில், சுகாதாரம், வருவாய் துறை, போலீசார் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., ராஜா தலைமை வகித்தார். வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் விபரங்களை சேகரித்து, பாதுகாப்பு கருதி அவர்கள் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்ட முடிவெடுக்கப்பட்டது. இதன்படி வெளிநாடு, வெளி மாநிலம் சென்று வந்தவர்கள் வசிக்கும், அந்தியூர், தவிட்டுப்பாளையம், சின்னதம்பிபாளையம், எண்ணமங்கலம் குப்பாண்டபாளையம் பகுதிகளில், 20 வீடுகளில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி தென்படவில்லை. ஆனாலும் இவர்களின் வீடுகளில், கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டி, 28 நாட்களுக்கு தனிமையில் இருக்கும்படி சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

புன்செய்புளியம்பட்டியில்...: புன்செய்புளியம்பட்டி நகராட்சியை சேர்ந்த ஆறு பேர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று, சமீபத்தில் திரும்பினர். இவர்களுக்கு அப்போது, நடத்திய சோதனையில், கொரோனா அறிகுறி இல்லை. ஆனாலும் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அறிவுறுத்தல் படி, கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக ஆறு பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கியுள்ள வீடுகளில், 15 நாட்கள் தனித்திருக்கும்படி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வீடு திரும்பியவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என, மைக்கில் அறிவிப்பு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X