கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: அரசு மருத்துவமனையில் தூய்மைப்பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: அரசு மருத்துவமனையில் தூய்மைப்பணி

Added : மார் 27, 2020
Share

திருச்சி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நாடு முழுவதும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், மளிகை, காய்கறி மற்றும் ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க பாதுகாப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மளிகை, காய்கறி மற்றும் ரேஷன் கடைகளில் இருக்கும் விற்பனையாளர்கள் மற்றும் எடை அளவையாளர்கள் முக கவசம் அணிந்து கொள்வதோடு, பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களை ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்க வைத்து, பொருட்கள் வழங்க வேண்டும், என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர, திருச்சி அரசு மருத்துவமனையில் 6வது மாடி முழுவதும் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றப்பட்டு, தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், நேற்று அரசு மருத்துவமனை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியபடி, நேற்று இரவு, 9:00 மணிக்கு துவங்கிய காந்தி மார்க்கெட் காய்கறி விற்பனை, இன்று காலை, 7:00 மணியுடன் முடித்துக் கொள்ளப்பட்டது. அதன் பின், தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க, போலீசார் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டனர். அத்தியாவசிய தேவைகள் எதுவும் இல்லாமல், சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து வழக்கு பதிவு செய்து, வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். ஒரு சில மளிகை கடைகள் தான் திறந்திருந்தன. அந்த கடைகளிலும், பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதில், தட்டுப்பாடு நிலவியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X