தமிழ்நாடு

உலகையே உலுக்கும் 'கொரோனா'வை ஒழிக்க நடவடிக்கை

Added : மார் 27, 2020
Share
Advertisement

உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும், 'கொரோனா வைரஸ்' தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுவரை, உலகம் முழுவதும், 22 ஆயிரத்தும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சேலத்தில், ஐந்து பேருக்கு தொற்று உறுதியானதோடு, 136 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், மக்கள் மேலும் கவனமுடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தனிமைப்படுத்திக்கொண்டு, நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதற்காக, மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரம்:
சேலம் மாநகராட்சி பகுதிகளிலுள்ள மத்திய சிறைச்சாலை, போலீஸ் ஸ்டேஷன், தீயணைப்பு துறை அலுவலகம், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், பொதுப்பணித்துறை, பட்டு வளர்ப்பு, கால்நடை பராமரிப்பு துறை, ரேஷன் கடைகள், வங்கிகள், தபால் துறை அலுவலகங்கள் ஆகியவற்றில், நேற்று, கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டன. மேலும், நான்கு மண்டலத்துக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகள், வழிபாட்டு தலங்கள், உழவர் சந்தை, அம்மா உணவகங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுவதாக, கமிஷனர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

கிருமி நாசினி தெளிப்பு: ஓமலூர் பேரூராட்சி சார்பில், நேற்று மதியம், பஸ் ஸ்டாண்டில், தீயணைப்பு வாகனம் மூலம், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து தாலுகா அலுவலகம் சாலை, அரசு மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் தெளிக்கப்பட்டன. அதேபோல், தாரமங்கலம் பேரூராட்சி பகுதியிலும், கிருமிநாசினி தெளிக்கப்பட்டன.

மஞ்சள் நீர்: கெங்கவல்லி தாலுகா, வீரகனூரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், நேற்று, டேங்கர் லாரியிலிருந்த தண்ணீரில் மஞ்சள் தூளை கலந்து, அந்த நீரை, தெருக்கள், வீதிகளில் தெளித்தனர். அத்துடன், அவரவர் வீடுகளில், வேப்பிலையை கட்டி, வீடு முழுதும் மஞ்சள் நீர் தெளித்தனர்.

இயந்திரம் வழங்கல்: பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 20 ஊராட்சிகள் உள்ளன. அங்கு, நோய் தடுப்பு பணிக்கு தேவையான, மருந்து தெளிக்கும் இயந்திரம் - 4, கிருமி நாசினி, நோய் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஆகியவை, ஒன்றிய அலுவலகத்துக்கு, நேற்று வந்தன. ஆணையர் ராஜா, பி.டி.ஓ., மணிவண்ணன் ஆகியோர், ஐந்து ஊராட்சிக்கு ஒரு இயந்திரம் வீதம், நான்கு மண்டல துணை பி.டி.ஓ.,களிடம் வழங்கினர். மேலும், 16 இயந்திரங்கள், ஊராட்சிகளுக்கு வழங்கப்படவுள்ளன.

விழிப்புணர்வு: ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதி மக்களுக்கு, போலீசார், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஆத்தூர், காமராஜர் சாலை பிரிவு, ராணிப்பேட்டை ஆகிய இடங்களில், வாகன ஓட்டிகளிடம், ஆத்தூர் ஆர்.டி.ஓ., துரை, டி.எஸ்.பி., ராஜூ உள்ளிட்ட போலீசார், 'கைகளை எவ்வாறு கழுவ வேண்டும்' என, செயல்விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அத்துடன், 'தேவையின்றி சாலையில், வாகனங்களில் வரவேண்டாம்; விதிமீறி செல்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தனர். பின், கிருமி நாசினி வழங்கி, கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தினர். வாகனங்களுக்கும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஆத்தூர் டவுன் போலீசார், நேற்று, புதுப்பேட்டை, ராணிப்பேட்டை வழியாக, பைக்கில் சென்ற இளைஞர்களை விரட்டினர்.

முதியோர் வரவேண்டாம்: ஓமலூர் அரசு மருத்துவமனை முன் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு: ரத்தக்கொதிப்பு, இருதய நோய், சர்க்கரை நோயாளிகள், மருத்துவமனைக்கு வர வேண்டாம். மாறாக, இரு மாதத்துக்குரிய மருந்துகளை, அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம். முதியோர் செல்லாமல், வீட்டிலுள்ள இளையவர் ஒருவரை அனுப்பி வாங்கிக்கொள்ளவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி மறுப்பு: கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு, புகார் கொடுக்க வந்தவர்களை, போலீசார் அனுமதிக்கவில்லை. மாறாக, திறந்த வெளியில் புகார் மனுக்களை பெற்று, மக்களை அனுப்பினர்.

மளிகை கடைகள் மூடல்: சேலத்தில், நேற்று முன்தினம் திறந்திருந்த பல மளிகை கடைகள், நேற்று மூடப்பட்டிருந்தன. பல கடைகள், காலையில் மட்டும் திறக்கப்பட்டு, மதியத்துக்கு பின் மூடப்பட்டன. இதனால், கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டது.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X