புதுடில்லி :கடந்த இரண்டு மாதங்களில், பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவுக்கு, 15 லட்சம் பயணியர் வந்துள்ளனர்.ஆனால், 'மாநில அரசுகளின் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கும், இந்த பட்டியலுக்கும், மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது' என, கேபினட் செயலர் ராஜிவ் கவுபா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியதும், அனைத்து வெளிநாட்டு விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டன.ஆனால், இதற்கு முன்னரே, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணியரின் விபரங்களைப் பெற்று, அவர்கள் அனைவரையும் கண்காணிப்பில் வைக்குமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.இந்நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்தும், சமீபத்தில் இந்தியா வந்த பயணியரின் பட்டியலை, மத்திய அரசு தயாரித்தது.
பயணியர்
அதில், கடந்த இரண்டு மாத காலகட்டத்தில், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணியர், பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியா வந்துள்ளது தெரியவந்தது.ஆனால், தற்போது மாநில அரசுகளின் கண்காணிப்பில் உள்ள வெளிநாட்டு பயணியர் எண்ணிக்கைக்கும், வருகை தந்த மொத்த பயணியர் எண்ணிக்கைக்கும் இடையே, மிகப் பெரிய வித்தியாசம் இருப்பது தெரியவந்து உள்ளது.
இதையடுத்து, கேபினட் செயலர் ராஜிவ் கவுபா, அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும், கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதன் விபரம்:இந்தியாவில், கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களில் பெரும்பாலானோர், ஏதோ ஒரு வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என, புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இவர்களிடம் இருந்து, மற்றவர்களுக்கு வைரஸ் பரவாமல் இருக்க, அவர்களின் தகவல்களை பெற்று, தீவிர கண்காணிப்பில் வைக்க, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை, அறிவுறுத்தல்களை வழங்கியது.
அதிர்ச்சி
கடந்த இரண்டு மாதங்களில் இந்தியா வந்த, வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணியரின் எண்ணிக்கைக்கும், மாநில அரசுகளின் கண்காணிப்பு பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கும், பெரிய வித்தியாசம் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.இது, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் அரசின் நோக்கத்தையே சீர்குலைத்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, இனியாவது விழித்துக் கொண்டு, விடுபட்டவர்களை கண்டுபிடித்து, அவர்களையும், கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வர, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'இந்தியா வந்த வெளிநாட்டு பயணியர் குறித்து, குடியேற்ற துறை, தங்களுக்கு அனுப்பிய பட்டியல், தெளிவாக இல்லை' என, மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE