சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

காங்கிரசை காப்பாற்ற ஒரே வழி!

Added : மார் 27, 2020
Share
Advertisement

காங்கிரசை காப்பாற்ற ஒரே வழி

ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை யிலிருந்து எழுதுகிறார்: சரியான தலைமை இல்லாததால், காங்கிரஸ் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. அக்கட்சியில் சோனியாவும், ராகுலும், என்று முன்னிறுத்தப்பட்டனரோ, அன்றே, அதன் வீழ்ச்சியும் துவங்கிவிட்டது.அடுத்தடுத்த, இரண்டு பார்லிமென்ட் தேர்தல்களில், எதிர்க்கட்சியின் அந்தஸ்தைக் கூட பெற முடியாத அளவுக்கு, படுதோல்வி அடைந்தது. டில்லியில் தொடர்ந்து இரண்டு தேர்தல்களிலும் படுதோல்வி.சில மாநிலங்களில், அந்தந்த மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே, ஆட்சி அமைக்க வேண்டிய அவல நிலை, காங்கிரசுக்கு.தமிழகத்தில், 50 ஆண்டுகளுக்கு முன், காங்கிரசை வேரோடு சாய்த்த, தி.மு.க.,வுக்கே, தற்போது, பல்லக்கு துாக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவில், தங்களது பரம எதிரியான, சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலை.மாநில கட்சிகளின் தலையெடுப்பால் ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில், ஒரு இடம் கூட பெற முடியவில்லை.இதோ... மத்திய பிரதேசத்தில், இளைஞர் காங்கிரசின் முக்கியமான நபராக கருதப்பட்ட, ஜோதிராதித்ய சிந்தியா, கட்சியில் இருந்து, தன் ஆதரவாளர்களோடு விலகியதால், ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.இவை, சோனியா மற்றும் ராகுலின் திறமையற்ற தலைமையைத் தான், பிரதிபலிக்கின்றன.இழந்த செல்வாக்கை மீட்பதற்காக, தங்கள் ஆட்சியில் செயல்படுத்த முயன்ற திட்டங்களுக்கு எதிராகவே, காங்கிரஸ் இன்று போராடி வருகிறது.சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியை தக்க வைக்க, நாடகமாடி வருகிறது, காங்கிரஸ். ஆனால் அது, நிச்சயம் பலனளிக்காது.காங்கிரஸ் தலைமைக்கு, சோனியா குடும்பத்தை விடுத்து, செல்வாக்குள்ள ஒருவரை, தலைவராக்க வேண்டும். அது தான், மூழ்கிக் கொண்டிருக்கும் காங்கிரசை மீட்பதற்கு இருக்கும், ஒரே வழி.இல்லையெனில், 'சுதந்திரத்திற்கு பின், காங்கிரசை கலைத்து விடலாம்' என, ஆலோசனை கூறிய மஹாத்மா காந்தியின் எண்ணத்தை சோனியாவும், ராகுலும் கண்டிப்பாக நிறைவேற்றி வைப்பர்.

அன்பழகனுக்குவரலாற்றில்இடம் உண்டு!
ஆ.பட்டிலிங்கம், பேரூர், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழக அரசியலில் மூத்த தலைவராக திகழ்ந்த, தி.மு.க., பொதுச் செயலர், அன்பழகன், கடந்த, 7ம் தேதி இயற்கை எய்தினார்.முன்னாள் முதல்வர், கருணாநிதிக்கு உற்ற நண்பராக இருந்தவர். தன்னை விட, 2 வயது இளையவர் என்றாலும், கருணாநிதியை தலைவராக ஏற்று, இறுதி வரை, அவருடன் பயணித்தவர்.எம்.எல்.ஏ., - எம்.பி., - மேலவை உறுப்பினர், அமைச்சர் என, மக்கள் பணியாற்றியவர். 43 ஆண்டுகள், தி.மு.க., பொதுச் செயலராக இருந்து, கட்சிப் பணியாற்றி உள்ளார்.அரசியல்வாதி, ஆசிரியர், பேச்சாளர், எழுத்தாளர், தொழில் சங்கவாதி, சமூக சீர்திருத்த ஆர்வலர் என, பன்முகர் தன்மையை வெளிப்படுத்தியவர்.தலைவர் முதல், கிளைச் செயலர் வரை, தன் வாரிசுகளுக்கு பதவி பெற்றுக் கொடுப்பது தான், தி.மு.க.,வில் வழக்கம். இதில் விதிவிலக்கு, அன்பழகன். 43 ஆண்டுகள் கட்சியில் உயர் பதவியில் இருந்தாலும், தன் வாரிசுகளுக்கு, அரசியலில் எதுவுமே செய்யவில்லை.தி.மு.க.,வை தோற்றுவித்த, அண்ணாதுரை மற்றும் அன்பழகன் வாரிசுகள் மட்டும் தான், கட்சியில் எந்த பதவியிலும் இல்லை.அன்பழகன் உடலை, கட்சித் தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யவில்லையே என்ற மனக்குறை, தொண்டர்களுக்கு உள்ளது.தி.மு.க., மீது, எத்தனை விமர்சனம் இருந்தாலும் கூட, தமிழக அரசியல் வரலாற்றில், அன்பழகனுக்கு முக்கியமான இடம் உண்டு.

திண்டுக்கல்கலெக்டருக்குபாராட்டுகள்!

ம.அன்புச்செல்வன், வீர பாண்டி, தேனி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: ஊனமுற்றோரின் மனம் துயரப்படும் என்பதால், அவர்களை, 'மாற்றுத்திறனாளிகள்' என்று அழைத்தவர், தி.மு.க., தலைவர் கருணாநிதி.தங்கள் உடல் ஊனத்தை மனதில் கொள்ளாமல், பலர், உலகம் வியக்கும் வகையில், பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். தடகள போட்டி வீரர்கள், விஞ்ஞானி, அறிஞர் என, பல துறையிலும் சிறந்து விளங்கி வருகின்றனர்.ஆனால், மாற்றுத்திறனாளி மற்றும் முதியோருக்கு, இன்றைய தலைமுறையினர் மரியாதை கொடுப்பதும் இல்லை, உதவியும் செய்வதில்லை. அவர்களின் குறைகளை, ஏக்கத்தை யாரும் கேட்பதில்லை.இந்நிலையில், தமிழகத்திலேயே முதன்முறையாக, குறைதீர் கூட்டத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, உணவு வழங்கும் நடைமுறையை, திண்டுக்கல் கலெக்டர், விஜயலட்சுமி செயல்படுத்தி வருகிறார் என்ற செய்தியை படித்து, ஆறுதலடைந்தேன்.குறைதீர் கூட்டத்திற்கு சென்று மனு கொடுத்தால், தங்கள் பிரச்னை தீர்ந்து விடும் எனும் நம்பிக்கையில் தான், அனைவரும் செல்வர். அவர்களின் குறை தீருமோ, இல்லையோ... ஆனால், தாகத்தாலும், பசியாலும் நிச்சயம் வாடுவர்.இந்நிலையில், குறைதீர் கூட்டத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, உணவு வழங்க, திண்டுக்கல் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதை முதியோருக்கும் விரிவுபடுத்தினால், நல்லது.இத்திட்டத்தை, பிற மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் பின்பற்றலாமே!

கிராம நுாலகங்களை புதுப்பிக்க வேண்டும்!
என்.பி.எஸ்.மணியன், திருவள்ளூரிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, முக்கிய கிராமங்களில், 'அய்யன் வாசக சாலை' என்ற பெயரில், கிராம நுாலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம், நுாலகங்கள் அமைத்து, செயல்பட்டு வருகின்றன.ஒவ்வொரு நுாலகத்திலும், 3 லட்சம் - 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் உள்ளன. இவை, ஊராட்சி செயலரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தன.காலப்போக்கில், அவற்றில் பெரும்பாலானவை செயல்படவில்லை. நுாலகக் கட்டடங்களும், வாங்கிய நுால்களும் வீண். அரசின் மக்கள் திட்டம், பயன்பாடின்றி உள்ளது.உள்ளாட்சி நிர்வாகத்தில், புதிய தலைவர்கள் பதவி ஏற்றுள்ளதால், அவற்றை புதுப்பித்து, செயல்படுத்த முன்வர வேண்டும்.நுாலகத்தை பராமரிக்கும் பொறுப்பை, அப்பகுதியில் உள்ள, படித்த பெண்களுக்கு வழங்கினால், சிறப்பாக இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X