தனித்திரு, விழித்திரு, மகிழ்ந்திரு!

Added : மார் 28, 2020 | கருத்துகள் (1) | |
Advertisement
தனித்திரு, விழித்திரு, மகிழ்ந்திரு!உலகெங்கும், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை, 'கொரோனா' வைரஸ் நோய் குறித்து, மிகப் பெரிய அச்சத்தில் உறைந்து கிடக்கின்றனர். சில உண்மைகளை அறிந்து கொண்டால், மக்கள் மனதிலுள்ள பீதி விலகும்.ஒர் உயிரியல் அடிப்படை விதியை, அனைவரும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களும், வைரஸ் உட்பட, தங்கள் இனம் அழியாமல்,
 தனித்திரு, விழித்திரு, மகிழ்ந்திரு!

தனித்திரு, விழித்திரு, மகிழ்ந்திரு!உலகெங்கும், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை, 'கொரோனா' வைரஸ் நோய் குறித்து, மிகப் பெரிய அச்சத்தில் உறைந்து கிடக்கின்றனர். சில உண்மைகளை அறிந்து கொண்டால், மக்கள் மனதிலுள்ள பீதி விலகும்.ஒர் உயிரியல் அடிப்படை விதியை, அனைவரும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களும், வைரஸ் உட்பட, தங்கள் இனம் அழியாமல், இனப்பெருக்கம் செய்து கொள்வதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளன.பெரும்பாலான வைரஸ்களால், தனித்து இயங்கி, இனப்பெருக்கம் செய்து கொள்ள முடியாது. அவை, தங்களுக்கு இரையாக அமையும் உயிரினங்களின், 'செல்'களை தம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அவற்றின் துணையுடன் தங்களின் மரபணுக்களையும், உடலையும் வடிவமைத்து கொள்கின்றன.

இந்த வைரஸ் பெருக்கத்தால், அவற்றின் புகலிடமாக அமைந்த உயிரினத்தின் செல்கள் வெடித்து அழியும். ஒரு கட்டத்துக்கு மேல், தாக்குப் பிடிக்க முடியாமல், புகலிடம் கொடுத்த உயிரினமும் அழியும். அதற்குள், வைரஸ் வேறு புகலிடத்தை தேடி கொள்ளாவிடில், அதுவும் அழிந்து போக நேரிடும்.தானும் வாழ்ந்து பெருக வேண்டும்; தனக்குப் புகலிடம் கொடுத்த உயிரினமும் முழுவதுமாக அழிந்து போகக் கூடாது என்பது தான், அனைத்து வைரஸ்களும் பின்பற்றும், சிறந்த உயிரியல் கோட்பாடு. முதலாளி வாழ்ந்தால் தான், அவரை அண்டி வாழும் தொழிலாளியும் வாழ முடியும் என்பது போன்ற கொள்கை தான் இதுவும்.

இந்த உயிரியல் அடிப்படை தத்துவத்துக்கு, கொரோனா வைரசும் விதிவிலக்கல்ல.


இப்போது பரவி வரும் கொரோனா வைரஸ், இதுவரை ஏதோ ஒரு விலங்கின் உடலில் பல லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளது. அது, பாம்பு என்றோ வவ்வால் என்றோ உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால், அது ஒரு திடீர் மரபணு மாற்றம் பெற்று, மனிதர்களைத் தாக்கும் வைரசாக, புது அவதாரம் எடுத்துள்ளது.இது நாள் வரை, விலங்குகளில் வாழ்ந்து கொண்டிருந்த கொரோனா வைரஸ் வேறு; இப்போது, மனித குலத்தைத் தாக்கும் புதிய கொரோனா வைரஸ் வேறு என்ற உண்மையை, முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த புதிய கொரோனா வைரஸ், மனிதர்கள் உடலில் மட்டுமே உயிர் வாழும் திறனுடையது. மனித குலம் அழிந்தால், புதிய கொரோனா வைரசும் மனிதனுடன் சேர்ந்து, முற்றிலுமாக அழிந்து விடும்.
விழிப்புணர்வுஆகவே, எல்லா மனிதர்களையும் கொன்று விட்டு, தனக்குப் புகலிடம் கொடுக்க ஆளில்லாமல், தன்னையும் அழித்துக்கொள்ள, இந்தப் புதிய கொரோனா வைரஸ், உயிரியல் நியதிக்கு எதிராக நிச்சயமாக செயல்படாது.ஏற்கனவே, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், இந்தப் புதிய வைரசின் சீற்றத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் மடிந்து போகலாம். ஆனால், 95 சதவீத மனிதர்கள், கொரோனா வைரஸ் நோய், தாக்கிய பிறகும், உயிர் பிழைத்து விடுவர்.அவர்களின் உடலில், கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகியிருக்கும் என்பதால், மறுபடியும் இந்த நோய் அவர்களைத் தாக்காது. ஆனால், எதிர்காலத்தில் மற்றுமொரு மரபணு மாற்றம் ஏற்பட்டால், வேறொரு புதிய கொரோனா வைரஸ் தோன்றி, இவர்களைத் தாக்க முடியுமே தவிர, தற்போதைய வைரஸ் தாக்காது.இன்னொரு உண்மையையும், தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வுலகிலிருந்து கொரோனா வைரசை, நம்மால் முழுமையாக, ஒருபோதும் அழிக்கவே முடியாது. மனித முயற்சியால், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, புதிதாகப் பிறக்கும் குழந்தைகளை, வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாக்கலாம்.ஆனால், உலகின் எங்கோ ஒரு மூலையில், ஏதோ ஒரு சில மனிதர்களிடம், ஏதாவது ஒரு வைரஸ் வாழ்ந்து கொண்டே தான் இருக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பரவிய, 'சார்ஸ், மெர்ஸ்' ஆகிய வைரஸ்கள் இதற்கு உதாரணம். அதனால் ஏற்பட்ட நோய்கள் தற்போது கட்டுப்படுத்தப்பட்டு 0விட்டன.ஆனால், இவை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக, எந்த மருத்துவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.உலக நாடுகள், தற்போது கடைப்பிடிக்கும், சுய தனிமைப்படுத்தலும், சுகாதார விழிப்புணர்வும், பயணக் கட்டுப்பாடுகளும், இந்தப் புதிய வைரஸ் பரவலைத் தடுக்கும் என்பதால், வெகு விரைவில், இந்த நோய் கட்டுக்குள் வந்து விடும்.தற்போது, மக்களிடையே நிலவி வரும் கொரோனா வைரஸ் பற்றிய அச்சம், சற்று அபரிமிதமாக உள்ளது. ஏதோ ஒருவர், தெருவில், துாசி ஒவ்வாமையால் தும்மினாலோ அல்லது ஆஸ்துமா நோயால் இருமினால் கூட, அருகிலிருப்போர் அலறியடித்து ஓடுகின்றனர். இது, தேவையற்றது.தும்முவோரும், இருமுவோரும், கைக்குட்டையால் வாயையும், மூக்கையும், தற்போது மூடிக் கொள்ளப் பழகி விட்டனர். அரசின் தொடர் அறிவுறுத்தல்களால், கைகளைக் கழுவி, சுத்தமாக வைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.அதுபோல, வெளி உணவகங்களில் சாப்பிடுவதை வெகுவாகக் குறைத்து விட்டனர். உல்லாசப் பயணம் என்ற பெயரில், தேவையில்லாமல், ஊர் சுற்றுவதை விட்டு விட்டனர். இதனால் ஒரு சில பிரிவினருக்கு, பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.எனினும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பல நன்மைகளும் ஏற்பட்டுள்ளன. எந்த நாணயத்துக்கும், இரு பக்கங்கள் உண்டு என்பதை நாம் மறந்து விடக் கூடாது.கொரோனா வைரஸ் வருகையால், சில நல்ல விளைவுகளும் ஏற்பட்டுள்ளன என்று தான் சொல்ல வேண்டும். வீட்டிற்கு வெளியில் சென்று வந்தால், கை, கால்களைக் கழுவ வேண்டும் என்பது, நம் முன்னோர் வலியுறுத்தும் நல்ல பழக்கம். அதை மறந்திருந்த இளைஞர்களுக்கு, அவசியம் என்பது ஆழமாக, இப்போது பதிந்து விட்டது. இதனால், இதுவரை மருத்துவர்களாலும், சுகாதாரத் துறையாலும், எவ்வளவோ முயன்றும் கட்டுப்படுத்த முடியாத நோய்களாக இருந்த டைபாய்டு, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள், வெகுவாகக் குறைந்துவிட்டன.

இந்த உண்மை, இப்போது தான், கொஞ்சம், கொஞ்சமாக தெரிய வந்துள்ளது; இன்னும் ஓரிரு மாதங்களில் முழுமையாகத் தெரிய வரும்.'குடிப்பழக்கம் காரணமாக, கல்லீரல் பாதிப்புக்கு உள்ளானோர், கொரோனா நோயால் மோசமாகப் பாதிக்கப்படுவர்' என்ற தகவல், இன்னும் பரவலாக அறியப்படவில்லை. அவ்வாறு அறியப்பட்டால், உயிருக்குப் பயந்து, பலர் குடிப் பழக்கத்தையே விட்டு விடுவர்.மிக முக்கியமாக, சாலைகளில், தெருக்களில், வாகனப் போக்கு வரத்து இல்லாததால், காற்றின் மாசு அளவு வெகுவாகக் குறைந்து, ஆஸ்துமா நோயாளிகள், கடந்த ஒரு வாரமாக, 'வீசிங்' பிரச்னை இன்றி, நலமுடன் இருக்கின்றனர்.

அது மட்டுமன்றி, பெரு நகரங்களில் வாழும் மனிதர்களுக்கு, நெரிசல் இல்லாத வாகன போக்குவரத்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், கிராமங்களின் அருமையும் தெரிய வந்துள்ளது. கொரோனாவின் வருகையால், எந்தப் பாதிப்புக்கும் உட்படாத, விவசாயத் தொழிலின் சிறப்பும், இப்போது தான், பெரும்பாலானோருக்கு தெரிய வந்துள்ளது.

சீனாவில், கறையான் தின்னிகளை உண்பதற்கு, தற்போது தடை விதித்துள்ளனர். இதனால், அழிவின் விளிம்பிலிருந்த அந்த உயிரினங்கள் மறுவாழ்வு பெற்றிருக்கின்றன.தடுப்பூசி


அதுபோல, அசைவ பிரியர்கள் நம் நாட்டில் வெளுத்துக்கட்டிய மீன், கோழி, காடை, ஆடு, மாடுகள் உயிர் பிழைத்துள்ளன. இது, மற்றொரு விதத்தில் பொருளாதாரம் மற்றும் அந்த தொழிலை நம்பி உள்ளவர்களுக்கு, வாழ்வாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், சில நாட்களில் அது குறையும்.பொதுமக்கள் தற்போது உள்ளது போல, பெரிய அளவில் அஞ்சுவதற்கு தேவையே இல்லை. எந்த தீவிரமான வைரஸ் நோயும், சுமார், 60 சதவீத மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வந்தவுடன், தானாகவே பின் வாங்கி விடும். அதற்காக, 60 சதவீத மக்களை இந்த வைரஸ் பாதிக்கும் என சொல்லவில்லை. வைரஸ்களின் திறனை குறிப்பிடவே இவ்வாறு கூறுகிறேன்.இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. குறிப்பாக, 1918ல், உலகைக் கலக்கிய, 'ஸ்பானிஷ் இன்புளூயன்சா' நோயைச் சொல்லலாம். அப்போது, தடுப்பூசி அறிவியல் அவ்வளவாக வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. ஆயினும் விரைவில், அந்நோய் மறைந்து விட்டது.அதற்குள், இப்போது உருவாகியிருக்கும், இந்தப் புதிய, கொரோனா நோய்க்கு தடுப்பூசிகளும், குணப்படுத்த உதவும் மருந்துகளும், நிச்சயமாக வந்து விடும். ஆகவே, அதுவரை முதியோர்களும், பிற நோய்களால் பாதிக்கப்பட்டோரும், சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசின் கட்டுப்பாடுகளை மதித்து, சுய தனிமைப்படுத்தலையும், தனி மனித சுகாதார அடிப்படை வழிமுறைகளையும் கடைப்பிடித்தால் போதும்.'தனித்திரு, விழித்திரு' என்ற வள்ளலாரின் அறிவுரையுடன், 'மகிழ்ந்திரு' என்ற வார்த்தையும் இப்போது சேர்க்க வேண்டிஉள்ளது. இத்தனை ஆண்டுகளாக, எவ்வித தடையும் இன்றி, சுதந்திரமாக சுற்றித் திரிந்த நம்மை பிடித்து, வீட்டின் உள்ளே போட்டு விட்டனரே என்ற கோபம், சிலருக்கு ஏற்படுவது இயற்கை தான்.பிரதமர் மோடி விதித்துள்ள, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு, அபரிமிதமான, நல்ல விளைவுகளை நம் சமுதாயத்தில் நிச்சயம் ஏற்படுத்தும். மக்கள்தொகை அதிகமுள்ள, சுகாதாரமான செயல்பாடுகளை மறந்த நம் பெரும்பாலான மக்களுக்கு, இந்த கட்டுப்பாடுகள் கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால், மகிழ்ச்சியாக அதை ஏற்றுக் கொண்டால், கஷ்டமான உணர்வு மறைந்து விடும்.பத்திரிகை, சுகாதாரப் பணியாளர், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், போலீசார், அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து போன்றவற்றை விற்கும் கடைக்காரர்கள் தவிர்த்து பிற மக்கள், தங்கள் வீடுகளுக்குள் முடங்கினால், தொற்றிக் கொள்ள ஆள் இன்றி, கொரோனா காலியாகி விடுவது உறுதி.எத்தனையோ மூன்று வாரங்கள், மாதங்கள், ஆண்டுகளை கழித்துள்ள நமக்கு, இந்த, ௨௧ நாள் தடை பெரியதாக இருக்காது. நாட்டின் நலன் கருதி, நம் எதிர்கால சந்ததியின் வளம் கருதி, 21 நாட்களை, வீட்டை விட்டு வெளியே வராமல், மகிழ்ச்சியுடன், அமைதியாக கழிப்போம்.எரிச்சல், கோபம், தாபம், எதிர்பார்ப்பு, அவஸ்தை உணர்வுடன் வீட்டில் முடங்கி இருந்தால், ஒவ்வொரு நிமிடமும் கடினமாகவே இருக்கும். அவ்வாறு எண்ணாமல், 'மனித குலம் தழைக்க, 21 நாட்கள், வீட்டின் உள்ளே இருப்போம்' என்ற வைராக்கியத்துடன், ஏப்., 1௪ வரை, வீட்டினுள் இருப்போம்; கொரோனாவை விரட்டியடிப்போம். வாருங்கள் நண்பர்களே!


டாக்டர் ஜெகதீசன் எம்.டி., முதுநிலை மரபியல் மருத்துவர், பணி நிறைவு சென்னை மருத்துவக்கல்லூரி.


தொடர்புக்கு:இ - மெயில்: t.jegangene@gmail.com அலைபேசி: 98407 68792


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (1)

mrsethuraman - Bangalore,இந்தியா
29-மார்-202011:05:26 IST Report Abuse
mrsethuraman  தனித்திரு விழித்திரு பசித்திரு .இது எப்போதோ வள்ளலார் நமக்கு கூறியது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X