சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

Added : மார் 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

'யூ டூ ராகுல்!'
ச.லதா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' வைரஸ் நோய் தொற்றால், உலகம் முழுவதும், ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்துள்ள நிலையில், மக்கள் அனைவரும், அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.வேகமாகப் பரவும் இந்நோயைக் கட்டுப்படுத்த, பல நாடுகளும் முழுவீச்சில் உத்வேகத்துடன் செயல்பட்டு வருகின்றன.பல நாட்டு தலைவர்களும், பிரபலங்களும், மக்களுக்கு தைரியமும், ஆறுதலும் தந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். நம் பிரதமர், மோடியும், மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கும் வகையில் உரையாற்றினார்.இந்நோய் விஷயத்தில், அறிவியல் உடனடியாக உதவ முடியாத நிலையில், மக்கள் அனைவரும், அரசு எடுக்கும் சுகாதார முயற்சிகளுக்கு, முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.மத்திய, மாநில அரசுகள், கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்க, சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என, பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம், இது. ஆனால், காங்., - எம்.பி., ராகுல், 'வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள, அதிரடி நடவடிக்கை, உடனடி தேவை. மத்திய அரசு, தீர்க்கமாக செயல்பட தவறியதற்கு, நம் நாடு, மிக அதிக விலை கொடுக்கப் போகிறது' என, மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளார்.அவருடைய பேச்சில், துளியும் முதிர்ச்சி இல்லை. நல்ல தலைவருக்கு, இது அழகில்லை. இக்கட்டான நேரத்தில், நாடு சிக்கித் தவிக்கும் போது, தலைவர் என்பவர், மக்களின் அச்சத்தை போக்குபவராகவும், தைரியம் தருபவராகவும் இருக்க வேண்டும். கட்சி பேதமின்றி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கடந்து, அனைவரும் ஒன்று சேர்ந்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, பேராபத்தில் இருந்து, மக்களை காக்கும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அது தான், ஒரு நல்ல தலைவனுக்குரிய உயரிய பண்பு.இத்தகைய பண்பு, தமிழகத்தில் இப்போது வளர்ந்துள்ளது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உட்பட பலர், மக்களின் அச்சத்தை போக்கும் விதமாக பேசி வருகின்றனர்; இது, பாராட்டுக்குரியது.பாரம்பரியமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, ராகுல், இப்படி பேசியிருப்பது, ஏற்றுக்கொள்ளவே முடியாது.உலகமே எதிர்த்துப் போராடும், கொரோனா நோயை, மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, நாம் வென்று காட்டுவோம். வாருங்கள் ராகுல்... 'கை' வேண்டாம்; தோள் கொடுப்போம் அரசுக்கு!


இதுசேவைக்கானநேரம்!


அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வணிகம் என்பது, லாபத்தை குறிகோளாக உடையது. வாடிக்கையாளர்களே, வணிகர்களின் கடவுள்.கொரோனா வைரஸ் பீதியால், உலகம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவுகின்ற வேளையில், இந்தியாவிலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வைரஸ் உயிர் வாழ்கிற அல்லது தொற்றுகிற கால அவகாசம் என்பது, குறைந்தது, 15 நாட்கள் என, கணக்கிடப்பட்ட காரணத்தால், மத்திய, மாநில அரசுகள், 144 தடையை விதித்துள்ளன.கொரோனா வைரஸ் சங்கிலித் தொடரை உடைக்கும் முயற்சியில், அரசு இயந்திரம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இத்தகைய சூழலில், அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பு, மக்களுக்கு உள்ளது.சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட அன்று, மயிலாடுதுறை மட்டுமல்லாது, பல்வேறு நகரங்களில், விதிகளை மீறி, சில கடைகள் செயல்பட்டன; அதிகாரிகள், அக்கடைகளுக்கு, 'சீல்' வைத்தனர்.அதேபோல முக கவசம், கிருமி நாசினி, பால், காய்கறி, உணவுப் பொருட்களின் விலையை அதிகரித்து, விற்பனை செய்யப்படுவதாக, புகார் எழுகின்றன; இது, வேதனை அளிக்கிறது.கொரோனா காரணமாக, தொழில்களுக்கு செல்ல முடியாமல், மக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில், விலை ஏற்றம் செய்திருப்பது, அநியாயமானது.ஆகவே, வியாபாரிகள், பேரிடர் காலங்களில், மக்களின் நலன் கருதி, லாப நோக்கத்தை தவிர்த்து, சேவை மனப்பான்மையோடு உதவிட வேண்டும்.


அதிரடிக்கு தயாராகுங்கள்போலீசாரே!கி.பாலாஜி, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சென்னையில் உள்ள மாநில கல்லுாரி, பச்சையப்பன் கல்லுாரி ஆகியவை, எண்ணற்ற சான்றோர்களை உருவாக்கி உள்ளன; அங்கு படித்த மாணவர்கள், இன்று உயர்ந்த பதவியில் உள்ளனர்.ஆனால், சமீபகாலமாக,'ரூட் தல' விவகாரத்தில், அக்கல்லுாரிகளின் பெயர் கெட்டு வருகிறது.மாணவர்களிடையே மோதல் நடக்கும் போது, போலீசார், அவர்களை அழைத்து, எச்சரிக்கை செய்து அனுப்பி வைப்பர்; சில நேரங்களில், உறுதிமொழி எழுதி வாங்குவர். அத்தோடு, அவர்கள் மீதான நடவடிக்கை முடிவுக்கு வந்து விடுகிறது.இதனால், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு, 'துளிர்' விட்டு போகிறது. 'போலீசார், ஒண்ணும் செய்ய மாட்டார்கள்' என, அவர்களுக்கு தைரியம் வந்து விடுகிறது. ரூட் தல தகராறில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் சிலர், மாநில கல்லுாரி மாணவர் ஒருவரின் தலையை, நடு ரோட்டில் வெட்டியது, மக்களை கதி கலங்க வைத்துள்ளது.அரசு கல்லுாரி மாணவர்கள், பஸ்சின் மீது ஏறி சாகசம் செய்வதும், சக பயணியரை கிண்டல் செய்வதும், தினமும் நடந்து வருகிறது.மாணவர்கள் மோதலை தடுக்க, அவர்கள் செல்லும் பஸ்சில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்; நாளடைவில், அந்த கண்காணிப்பை கைவிட்டனர். இதனால், மாணவர்கள் மோதல் அதிகரித்துள்ளது. இதனால், அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.பிள்ளைகளை படிக்க வைக்க, பெற்றோர் எவ்வளவு கஷ்டப்படுகின்றனர் என்பது, மாணவர்களுக்கு புரியவில்லை. தனியார் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், இதுபோன்ற வன்முறை செயல்களில் ஈடுபடுவது இல்லை. அரசு கல்லுாரிகளில் மட்டும், இப்படி நடக்கிறது என்றால், யார் மீது குற்றம்?வன்முறை செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை, போலீசார், 'நன்கு கவனித்தால்' இந்த பிரச்னை, முடிவுக்கு வரும்.போலீசாரின் நடவடிக்கையை, பெற்றோர் வரவேற்கவே செய்வர். எனவே, வன்முறை மாணவர்களுக்கு எதிராக, அதிரடிக்கு தயாராகுங்கள் உயர்மட்ட போலீசாரே!


நம்பிக்கையுடன் இருங்கள்!முனைவர், மீனாட்சி பட்டாபிராமன், பழங்காநத்தம், மதுரை- மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒருநாளில், ஒரு மணி நேரம் மட்டுமே மூடப்படும், திருப்பதி ஏழுமலையான் கோவில்; வெள்ளம் என பக்தர்கள் கூடும், சபரிமலை அய்யப்பன் கோவில் ஆகியவை, 'கொரோனா' காரணமாக, மூடப்பட்டுள்ளன.இவை மட்டுமல்லாமல், குருவாயூரப்பன், மதுரை, மீனாட்சி அம்மன், ஸ்ரீரங்கம், சிதம்பரம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் என, அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ளன; பள்ளிவாசல், தேவாலயங்களும் மூடப்பட்டுள்ளன.'என்னைச் சரணடைந்தால், உன்னை அனைத்துத் துன்பங்களிலிருந்தும், நான் காப்பாற்றுகிறேன்' என, கீதையில் கூறியுள்ள பகவான், இன்று பேராபத்தை எதிர்நோக்கியிருக்கும் பக்தனை காப்பாற்ற ஓடிவராமல், கதவை சாத்திக் கொண்டுள்ளானே என்ற கேள்வி, நியாயமானது தான்.அவனும் பொறுத்து, பொறுத்துப் பார்த்து, பொங்கி எழுந்துள்ளதன் விளைவு தான், இது.கோவில்கள், கொடியவர் கூடாரமாய் மாறியதும்; கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளோர், கோவில் பணியில் அமர்த்தப்பட்டதும்; 'சிவன் சொத்து குலநாசம்' என்பதை மறுத்து, கோவில் சொத்தையே கொள்ளையடிப்பதும், தொடர்ந்து நடக்கிறதே...அரசியல்வாதிகளின் துணையுடன், சிலைகளை திருடுவது; பக்தர்களின் காணிக்கையை கொள்ளையடிப்பது; கோவில் நிகழ்வுகளை, வியாபாரம் ஆக்கியது என, அத்தனை அநியாயங்களையும், இறைவன் பார்த்தபடியே தான் இருந்தான். கோவிலுக்குள் நுழையும்போது, கால்களை கழுவ செய்தனர். பக்தர்களை தொடாமல், அர்ச்சகர், திருநீறு வழங்கினர்; துளசி நீர் கொடுத்தனர். இது, சுகாதாரமானது என்பதை மறுத்து, 'தீண்டாமை' என, திராவிடக்கட்சிகள் பெயர் சூட்டின.'பக்தி' எனும் போர்வையில், பகல் வேஷமிடும் நபர்களை, இறைவன் அறியாமல் இருப்பாரா என்ன!நம் பண்பாட்டு கலாசாரத்தை, அனைவரும் உணர்ந்து, பின்பற்ற வேண்டும். கொரோனாவிற்கு எதிரான போரில், மருத்துவர்களின் பக்கம், இறைவன் இருப்பார். விரைவில், இந்நோயில் இருந்து, மக்களை காப்பார்; நம்பிக்கையுடன் இருங்கள்.


ஊரில்நோயை பரப்பாதீங்க!


கல்பலதா மோகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கடந்த, 23ம் தேதி, பல லட்சம் பேர், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூடியிருந்ததை, 'டிவி'யில் பார்த்து, அதிர்ச்சி அடைந்தோம்.அவர்களில் சிலருக்கு, 'கொரோனா' நோய் தொற்று இருந்திருந்தால்... நிலைமை என்னவாகும்?சொந்த ஊருக்கு சென்றவர்கள், சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்...* எடுத்துச் சென்ற பொருட்கள் மீது கிருமி நாசினியை தெளியுங்கள்* மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்து, கொதிக்க வைத்த தண்ணீரில் உடலை, நன்கு கழுவிக் கொள்ளுங்கள்* உடைகளை, நன்கு துவைத்து, காய வையுங்கள்* அடுத்த, 14 நாட்களுக்கு, உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். மனைவி, குழந்தை உட்பட, யார் அருகிலும் செல்லாதீர்* வீட்டில், ஒரு அறைக்குள் மட்டும் இருங்கள். உணவு சாப்பிட கூட, வெளியே வராதீர். தனியாக தட்டு, குவளை வைத்துக் கொள்ளுங்கள்; அவற்றை நீங்களே கழுவி வையுங்கள்* உங்களுக்கென்று, தனியாக பாய், போர்வை, தலையணை போன்றவற்றை பயன்படுத்துங்கள்; அவற்றையும், அடிக்கடி, நீங்களே சுத்தப்படுத்துங்கள்* உங்களது, மொபைல்போனில் தொற்று இருக்கலாம்; அதனால் அதை, உங்கள் குழந்தைகளிடம் விளையாட கொடுக்காதீர்* 'டிவி' பார்க்கிறேன் என, கூடத்தில் வந்து அமராதீர். எதையும், யாரையும் தொடாதீர்* 'வீட்டில் இருப்பவருக்கு உதவுகிறேன்' என, 'காய் வெட்டி தருகிறேன், தேங்காய் துருவி தருகிறேன்' என்று, கிளம்பாதீர்* உங்களுக்கு சளி, காய்ச்சல் இல்லை என்றாலும் கூட, கவனமாக இருங்கள். உங்கள் உடலில் உள்ள கிருமியின் அறிகுறி, வெளியே தெரிய, 15 நாட்கள் கூட ஆகலாம்* 'ரிஸ்க் எடுக்கிறதெல்லாம், ரஸ்க் சாப்பிடுற மாதிரி' என, 'உதார்' விடாதீர். நீங்கள் செல்லுமிடமெல்லாம், நோய் பரவும்* சிறிது நாளைக்கு, பாய் வீட்டு பிரியாணி, பாட்டி வீட்டு பாயாசம், அண்ணன் வீட்டு மொச்சை குழம்பு எதுவும் வேண்டாம்* உணவை, சுடச்சுட, புதிதாக தயாரித்து உண்ணுங்கள். நேற்றைய சாம்பார், அதன் முந்தைய நாளைய கார சட்னி வேண்டாமே* அதேபோல, குழந்தைகள் ஆசைப்படுகின்றனர் என, ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்காதீர்* இட்லி மாவை, வீட்டிலேயே தயார் செய்து கொள்ளுங்கள்* உங்களால் முடிந்தால் ஏழை - எளியோர் மற்றும் நாய், மாடு, பூனைகளுக்கு உணவளியுங்கள்* தேவையான அனைத்து பொருட்களையும், ஒரு முறை வெளியில் செல்லும் போதே, திட்டமிட்டு வாங்கி வந்து விடுங்கள்.தயவுசெய்து, நோய் பரப்பும் கருவியாக இருக்காதீர். விழிப்புடனும், பொறுப்புடனும் செயல்படுங்கள். அரசு சொல்வதை முழுமையாக கடைபிடியுங்கள்.


மாநிலஅந்தஸ்துகொடுங்களேன்!பொன்.கருணாநிதி, கோட்டூர், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: புதுச்சேரி, டில்லி போன்ற மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோர், முதல்வராக பதவி வகித்தாலும், அவை இன்னமும், யூனியன் பிரதேசங்களாக இருப்பதால், அவர்கள் மத்திய அரசுக்கும், கவர்னருக்கும் கட்டுப்பட்டே ஆட்சி நடத்த வேண்டிய நிலை உள்ளது.அந்த யூனியன் பிரதேச கவர்னருக்கும், முதல்வருக்கும் சுமூகமான உறவு இருக்கும் வரை, ஆட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படும்; இருவருக்கும் கருத்து முரண்பாடு அதிகரிக்கும் போது, அது, மாநில நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்களை உருவாக்குகிறது.மக்கள் நலத் திட்டம் உட்பட, அனைத்து நிர்வாகமும் தடையின்றி செயல்பட, யூனியன் பிரதேசங்களுக்கு, மாநில அந்தஸ்து வழங்குவது தான், சரியான தீர்வாக அமையும்.நீண்ட காலமாக, மத்தியில், ஆட்சியில் இருந்த காங்கிரஸ், இந்த கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை. பிரதமர், மோடியின் ஆட்சிக் காலத்தில், யூனியன் பிரதேசங்களுக்கு, மாநில அந்தஸ்து வழங்கினால், அது அவருக்கு பெருமை தரும்.அப்பகுதிகளில், தேவையற்ற நிர்வாக சிக்கல்கள் உருவாவதை, மாநில அந்தஸ்து தடுக்கும். மக்கள் பிரதிநிதிகளும், ஆட்சி நிர்வாகத்தை திறன்பட மேற்கொள்வர்.மத்திய அரசு, இது குறித்து ஆய்வு செய்து, நல்லதொரு முடிவை அறிவிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
29-மார்-202010:37:13 IST Report Abuse
D.Ambujavalli இவரது நாடான இத்தாலியிலேயே, 101 வயது மூதாட்டி இந்நோயிலிருந்து மீண்டு நமக்கெல்லாம் நேர்மறை உதாரணமாக உள்ளாரே அவரைப் பார்த்தால் போயிற்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X