சென்னை: பொதுப்பணி துறையால் கட்டப்பட்டுள்ள, புதிய கட்டடங்களை, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த, அரசு முடிவெடுத்து உள்ளது.

வரும் நாட்களில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில், தனிமைபடுத்தும் மையங்கள், சிகிச்சை அளிக்கும் மையங்களும் அதிகளவில் தேவைப்படும். இதை கருத்தில் கொண்டு, மாநிலம் முழுதும், பொதுப்பணி துறையால் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த, அரசு முடிவெடுத்துள்ளது. இந்த கட்டடங்களை தயார்படுத்தும்படி, பொதுப்பணித் துறை செயலர், மணிவாசன் உத்தரவிட்டு உள்ளார்.

சென்னையில், சைதாப்பேட்டையில், 10 மாடிகள் உள்ள, 2 அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டடத்திலும், தலா, 100 வீடுகள் உள்ளன. இதேபோல, நந்தனம் அம்மா வளாகத்தில், இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில், ஒருங்கிணைந்த வணிக வரித்துறை கட்டடம் உள்ளது.நுங்கம்பாக்கம், டி.எம்.எஸ்., வளாகத்தில், பள்ளி கல்வி அலுவலகத்திற்கு, 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இதுபோன்று, பல கட்டடங்கள், கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட உள்ளன. புளியந்தோப்பில், குடிசை மாற்று வாரியம் சார்பில், பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. இந்த கட்டடத்தையும், கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த, துணை முதல்வர், பன்னீர்செல்வத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE