புதுடில்லி : சொந்த ஊருக்கு திரும்பும், வெளிமாநிலத் தொழிலாளர் பிரச்னை தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'கொரோனா வைரஸ் பாதிப்பை விட, அது தொடர்பான பயம் தான் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது' என, குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து, வெளி மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முயன்றனர். நாடு முழுதும் இவ்வாறு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் முண்டியடித்து, சொந்த ஊருக்கு செல்ல முயற்சித்தனர்.

அதையடுத்து, மாநில எல்லைகளை மூடும்படியும், வெளிமாநிலத் தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்கும்படியும், மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பாக, அலாக் அலோக் ஸ்ரீவத்சவா, ராஷ்மி பன்சால் என்ற வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்றத்தில், பொது நலன் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள், தலைமை நீதிபதி, எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் விசாரித்த, அமர்வு கூறியதாவது:கொரோனா வைரஸ் பாதிப்பை விட, அது பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம்,
பயம் தான் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. வெளிமாநிலத் தொழிலாளர் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தப் பிரச்னையில், உத்தரவு பிறப்பித்து, குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகே, அதன் மீது, உத்தரவு பிறப்பிக்கப்படும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
கெஜ்ரிவாலுக்கு கண்டனம்
உத்தர பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், சமீபத்தில் டில்லியில் இருந்து வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களுக்கு, பேருந்து வசதிகளை, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், தொழிலாளர்கள், கூட்டம் கூட்டமாக, பஸ்களில் இடம்பிடிக்க முண்டியடித்தனர்.சமூக விலக்கலை ஏற்படுத்தவே, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், வெளிமாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பும்போது, இது கடைப்பிடிக்கப்
படவில்லை. இது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள் துறை அமைச்சர், அமித் ஷாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், 'நிலைமையை சரியாக கையாளவில்லை' என, முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, மாநில கவர்னர், அனில் பைஜால், காட்டமாக கடிதம் எழுதியுள்ளார்.
144 தடையுத்தரவு
கேரள மாநிலம், கோட்டயத்தின் செங்கனசேரியில், 100க்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள், திடீரென சாலையில் திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, அங்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் கைது
குஜராத்தின் சூரத் நகரில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சொந்த மாநிலம் செல்வதற்கு போக்குவரத்து வசதி கோரி, திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் பெரும்பாலானோர், உத்தர பிரதேசம் மற்றும் பீஹாரைச் சேர்ந்தவர்கள். போராட்டத்தில் ஈடுபட்டதாக, 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகனங்கள் பறிமுதல்
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் வேலை பார்த்து வந்த வெளி மாநிலங்களைச் சேர்ந்த, 130 தொழிலாளர்கள் மற்றும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த, 13 பேர், சரக்கு வாகனங்களில் வெளியேற முயன்றனர். அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். ஐந்து வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்; அவற்றின் டிரைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேபாளிகள் தவிப்பு
நம் அண்டை நாடான நேபாளத்துக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அது மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால், சொந்த ஊர் செல்ல முடியாமல், உத்தரகண்ட் மாநிலம் தர்ச்சுலாவில், 500க்கும் மேற்பட்ட நேபாளிகள் தவித்து
வருகின்றனர்.
உ.பி.,க்கு வந்தோருக்குகிருமி நாசினி தெளிப்பு
வெளிமாநிலங்களில் இருந்து, உத்தர பிரதேசத்துக்கு, சிறப்பு பஸ்களில் வந்தவர்கள் மீது, கிருமி நாசினி, பீய்ச்சி அடிக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.டில்லி உட்பட வெளி மாநிலங்களில் வேலை பார்த்து வந்த, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், சிறப்பு பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். பரேலி மாவட்ட எல்லையில், அவர்கள் குழுவாக உட்கார வைக்கப்பட்டு, அவர்கள் மீது கிருமி நாசினி, பீய்ச்சி அடிக்கப்பட்டது. இது தொடர்பான, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, சர்ச்சை ஏற்பட்டது.முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜிதின் பிரசாதா கூறுகையில், ''நாட்டில் என்ன நடக்கிறது. இந்த மக்களை, இப்படியா துன்புறுத்த வேண்டும். ''அவர்கள் மீது, வேதிப்பொருள் கலந்த தண்ணீரை பீய்ச்சியடிக்க, உ.பி., அரசு எப்படி உத்தரவிட்டது? ஏற்கனவே, இந்த மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், அதிகாரிகளும் இப்படி நடந்து கொள்வது, எந்த வகையில்
நியாயம். இது, நிச்சயம் கண்டனத்திற்குரியது,'' என, தெரிவித்தார்.'குளோரின் கலந்த தண்ணீர் தான் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அதில், ரசாயனம் ஏதும் சேர்க்கப்படவில்லை. கண்களை மூடிக் கொள்ளும்படி அனைவரிடம் கூறினோம். அவர்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், மனித உரிமை மீறல் ஏதுமில்லை' என, உத்தர பிரதேச அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விடுதலை செய்ய பரிந்துரை
சமீபத்தில் ஒரு வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், 'கொரோனா பாதிப்பால், சிறை கைதிகள் பாதிக்கப்படுவதை தடுக்க, முன்னதாகவே விடுதலை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது.மேலும், இது தொடர்பாக, மாநில அளவில், உயர்நிலை குழுவை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதன்படி நியமிக்கப்பட்டுள்ள, டில்லி மாநில உயர்நிலைக் குழு கூட்டம், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி, ஹிமா கோஹ்லி தலைமையில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில், புதிதாக சிறைக்கு வருவோர், குறிப்பாக வெளிநாட்டவராக இருந்தால், தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தண்டனை காலம் முடிவடைய ஆறு மாதங்களுக்கும் குறைவாக உள்ளவர்களை, முன்னதாக விடுதலை செய்யவும் முடிவு செய்யப்பட்டது. கைதிகளுக்கு தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்வது, விசாரணை கைதிகளுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது உள்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
புதிய வழக்கு
உச்ச நீதிமன்றத்தில், அமித் சாஹ்னி என்ற வழக்கறிஞர், புதிய வழக்கை தொடர்ந்துள்ளார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:உலக சுகாதார அமைப்பின்படி, வயதானவர்கள் தான், கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சிறையில் அதிக அளவு கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பிரச்னை குறித்து, உச்ச நீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது.
சிறைகளில் உள்ள, 50 வயதுக்கு மேற்பட்டோர், நீரிழிவு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு, உடனடியாக பரோல் அல்லது இடைக்கால ஜாமின் வழங்கிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE