சென்னை : கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் குறித்து, தி.மு.க.,வின், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, அக்கட்சி தலைவர் ஸ்டாலின், நேற்று ஆலோசனை நடத்தினார்.
சென்னையில், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு; நாகர்கோவில் - ஆஸ்டின், கோவை - கார்த்திக் உள்ளிட்டோரிடம், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, ஸ்டாலின் கேட்டறிந்தார்.பின், ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் நிவராண உதவிகளுக்காக, தி.மு.க., சார்பில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, 1 கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது. இந்த நிதி, 'ஆன்லைன்' பரிவர்த்தனை வாயிலாக, நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:மக்கள் செயலர்களாக செயல்பட, மாவட்ட செயலர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளேன். கொரோனா காலத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், மக்களின் குடும்ப உறுப்பினர்களாக, உதவிகள் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:பேரிடரான சூழலில், தும்பை விட்டு வாலை பிடிப்பது போல நடவடிக்கைகள் அமைந்து விடக்கூடாது. எனவே, 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். பேரிடர் காலங்களில், அரசியல் எல்லை கோடுகளை கடந்து, அறம் சார்ந்த அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.தி.மு.க.,வினர் அனைவரும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகளை தொடர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பதவி பறிப்பு
'தி.மு.க., விவசாய அணி செயலர், கே.பி.ராமலிங்கம், அவர் வகித்து வந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்' என, ஸ்டாலின் கூறியுள்ளார்.முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி ஆதரவாளராக இருந்த கே.பி.ராமலிங்கம், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற, ஸ்டாலின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதன் காரணமாக, கட்சி பதவியில் இருந்து, அவர் நீக்கப்பட்டு உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE