சென்னை :பொது மக்களிடம் கருணையுடன், மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும்படி, போலீசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர், எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனு:
ஊரடங்கு உத்தரவை மத்திய அரசும், 144 தடை உத்தரவை மாநில அரசும் பிறப்பித்துள்ளன. பால், மருந்து, உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்களிடம், போலீசார் கடுமையாக நடந்து கொள்கின்றனர்; லத்தியால் தாக்குகின்றனர். எனவே, பொது மக்களை, போலீசார் துன்புறுத்தக்கூடாது என, அரசுக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுவை, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய, ‛டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த வழக்கை, நீதிபதிகள் வீட்டில் இருந்தே விசாரித்தனர்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், திருஞானசம்பந்தம்; அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரும், அவரவர் வீட்டில் இருந்து, 'ஜும் ஆப் வீடியோ' வழியாக வாதாடினர்.
அரசு தரப்பில், 'எந்த வரம்பு மீறலும் இல்லை. தடை உத்தரவை மீறியவர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம், 17 ஆயிரத்து, 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன' என, வாதிடப்பட்டது.விசாரணையின் போது, 'பொதுமக்களிடம் கருணையுடன், மனிதாபிமானத்துடன், போலீசார் நடந்து கொள்ள வேண்டும்' என, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஊரடங்கின் போது, தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர அவசியமில்லை. அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், மருந்து வாங்கவும், ‛நோடல்' அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். அவரது உதவி, அனுமதி பெற்று செல்லலாம்.
எனவே, ஒவ்வொரு குறு வட்டத்துக்கும், துணை தாசில்தார் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை, அரசு நியமிக்க வேண்டும். அவரது மொபைல் போன் எண், போன் எண் வெளியிட வேண்டும்.உரிய காரணங்கள் இன்றி, வீட்டை விட்டு வெளியில் வந்தால், அதை தடுக்க, அரசு பாதுகாப்பு வழிமுறைகளை கையாளலாம்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE