ஊரெல்லாம் கொரோனா பரவுது மக்கள் கூட்டம் அடங்க மாட்டேங்குது | Dinamalar

ஊரெல்லாம் 'கொரோனா' பரவுது மக்கள் கூட்டம் அடங்க மாட்டேங்குது

Added : மார் 30, 2020
Share
மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் தோழியைப் பார்க்க, சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.இருவரும் மறக்காமல் முக கவசம், கையுறை அணிந்தனர். ஹேண்ட் பேக்கில் கிருமி நாசினி திரவம் ஒரு பாட்டில் எடுத்துக் கொண்டு, அலுவலக அடையாள அட்டையை அணிந்து கொண்டனர். சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தாலும், ஏராளமானோர் இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும்
 ஊரெல்லாம் 'கொரோனா' பரவுது  மக்கள் கூட்டம் அடங்க மாட்டேங்குது

மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் தோழியைப் பார்க்க, சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.இருவரும் மறக்காமல் முக கவசம், கையுறை அணிந்தனர். ஹேண்ட் பேக்கில் கிருமி நாசினி திரவம் ஒரு பாட்டில் எடுத்துக் கொண்டு, அலுவலக அடையாள அட்டையை அணிந்து கொண்டனர்.
சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தாலும், ஏராளமானோர் இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் சென்று கொண்டிருந்தனர்.அதைப்பார்த்த சித்ரா, ''என்ன மித்து, ஊரடங்கு மாதிரியே தெரியலையே. இப்படி ஜாலியா சுத்துறாங்களே. போலீஸ்காரங்களும் கண்டுக்காம இருக்காங்க,''''ஆமாக்கா, ஊரடங்குன்னா என்ன?, ஊரே அடங்கி இருக்கணும். ஆனா, மளிகை கடையை திறந்து வச்சிருக்காங்க; காய்கறி கடையை திறந்து வச்சிருக்காங்க; போதாக்குறைக்கு, மீன், கோழி, மட்டன் கடைகளையும் திறந்திருக்காங்க.
வீட்டுல வச்சிருக்கிற பொருட்களை வச்சு சமாளிக்காம, கடை கடையா, ஜனங்க சுத்துறாங்க. முக கவசம் அணிஞ்சிருந்தா, நோய் தொற்று வராதுன்னு, தப்பா நெனைக்கிறாங்க,''''ஆமா மித்து, நீ சொல்றதும் உண்மைதான்! 'கொரோனா' வைரஸை பத்தி பேசுறாங்க; விழிப்புணர்வு இல்லாம இருக்காங்க,''''மித்து, என் பிரெண்டு அம்மாவை ரெண்டு நாளைக்கு முன்னாடி சந்திச்சேன். அவுங்க அம்மா காலத்துல, அதாவது, 1918-20களில், கோயமுத்துார்ல, 'பிளேக்' நோய் பரவுச்சாம்.
கொத்து, கொத்தா, நெறைய்ய பேரு இறந்தாங்களாம். எல்லோரும் ஊரை காலி செஞ்சிட்டு, காரமடைக்கு போயி, உறவினர் வீடுகள்ல தஞ்சம் அடைஞ்சாங்களாம். கொஞ்சம் கொஞ்சமா ஊர் பழைய நிலைமைக்கு வந்ததும், திரும்பி வந்ததா சொன்னாங்க. அது மாதிரியான நிலைமை வந்திருமோன்னு, பயமா இருக்கு,''''நம்மூர் ஜனங்க, இன்னமும் விழிப்புணர்வு இல்லாம இருக்காங்களே, என்ன செய்றது,''''முதல்ல பொதுமக்கள், வீட்டை விட்டு வெளியே வராம இருக்கறதுக்கு வழி செய்யணும்.
கடைகளை இழுத்து மூடணும். மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, பத்திரிகையாளர்களை தவிர, வேறு யாரும் ஊருக்குள்ள நடமாட முடியாத அளவுக்கு, ஊரடங்கை கண்டிப்பா அமல்படுத்தணும். இல்லேன்னா, தொற்று இன்னும் வேகமா பரவ ஆரம்பிச்சிடும்,''''என்னக்கா, பயமுறுத்துறீங்களே,'' என, பயந்தாள் மித்ரா.''மித்து, அசால்ட்டா நெனைக்காதேப்பா.
சாயி்பாபா காலனி, கே.கே.புதுார் ஏரியாவுல, ஸ்பெயின் நாட்டுக்கு போயிட்டு வந்த மாணவி தங்கியிருந்த அபார்ட்மென்ட் மற்றும் ஒரு கி.மீ., சுற்றுப்பகுதியில் வசிக்கிற எல்லோரையும், மெடிக்கல் டீம் 'செக்' பண்ணிட்டு இருக்கு.50 வீட்டுக்கு ஒரு நர்ஸ், 200 வீட்டுக்கு ஒரு டாக்டர்ன்னு, 'ஆக்சன் பிளான்' தயார் செஞ்சு, வீடு வீடா போயிட்டு இருக்காங்க. யாருக்காவது சளி, இருமல் இருக்கா, காய்ச்சல் பாதிப்பு இருக்கான்னு கேக்குறாங்க. பாதிப்பு இருந்தா, உடனடியா அரசு ஆஸ்பத்திரியில சிகிச்சைக்கு அனுமதிக்கிறாங்க,''''ஓ... அப்படியா... அப்ப, நோய் தொற்று இன்னும் வேகமா பரவும் போலிருக்கே,''''ஆமாப்பா, அரசாங்க தரப்புல, நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒரு பக்கம் எடுத்துக்கிட்டு இருந்தாலும், மருத்துவமனைகளை தயார்படுத்துற வேலையிலும் ஈடுபட்டுக்கிட்டு இருக்காங்க.
நான்கு தனியார் மருத்துவமனைகள்ல, 'கொரோனா' வார்டு ஏற்படுத்தியிருக்காங்க,''''இவ்ளோ களேபரத்துக்கு இடையிலும், மது விற்பனை ஜோரா நடக்குதாமே,''''மதுக்கடை மூடியிருக்குன்னு சொல்றாங்க. ஆனா, மதுக்கரை, போத்தனுார், சரவணம்பட்டி, சிங்காநல்லுார், ஆர்.எஸ்.புரம் ஏரியாவுல ஜோரா விற்பனை நடக்குது.சுண்டக்காமுத்துார் ஏரியாவுல, அரசியல் கட்சி பிரமுகர் வீட்டுல, ஒரு கடையில இருக்கற அவ்ளோ சரக்குகளையும், 'ஸ்டாக்' வச்சிருக்காங்களாம்.
அரசியல் பிரமுகர் மொபைல் எண், 'வாட்ஸ்அப்'புல வேகமா பரவிட்டு இருக்கு. அந்த எண்ணுக்கு 'ஆர்டர்' கொடுத்தால் போதுமாம்; 'டோர் டெலிவரி' செய்றாங்களாம்,''''அடக்கொடுமையே... நோய் பரவிட்டு இருக்கற சமயத்துல, இது வேறயா,'' என, அங்கலாய்த்தாள் மித்ரா.பேசியபடியே இருவரும் கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தனர். எப்போதும் சாந்தமாக இருக்கும் கலெக்டர் ராஜாமணி, கடுங்கோபத்தில் காணப்பட்டார்.அங்கிருந்தவர்களிடம் சித்ரா பேச்சு கொடுத்தாள். அதிகாரி ஒருவர், 'வாட்ஸ்அப்'பில் 'மெசேஜ்' அனுப்புவதாக, சைகை காட்டினார்.சிறிது நேரத்தில், சித்ரா மொபைல் போனுக்கு, குறுஞ்செய்தி வந்தது. அதைப்படித்த சித்ரா, ''மித்து, மாவட்ட எல்லையை கடந்து போறதுக்கு, 'பாஸ்' கொடுக்கறதா, அரசு அறிவிச்சிருக்கு.
அதனால, கேரளாவுக்கு காய்கறி கொண்டு போகணும்; ஊர்ல பாட்டி இருக்காங்க; அம்மாவை பார்க்கப் போகணும்; குழந்தையை கூட்டிட்டு வரணும்னு ஏகப்பட்ட பேரு, 'பாஸ்' கேட்டு, கலெக்டர் ஆபீசுக்கு வந்துட்டாங்க. 'நானென்ன, 'பாஸ்' கொடுக்குற ஆபீசரா; 144 ஊரடங்கு சட்டம் பிறப்பிச்சிருக்கு; யாரும் மதிக்க மாட்டீங்களா'ன்னு, டென்ஷனாகி, எல்லாத்தையும் திட்டி, திருப்பி அனுப்பினாராம்,''''கொரோனா வைரஸ் விஷயத்திலும் அரசியல் கட்சிக்காரங்க என்ன செய்றாங்க,''''ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில இருந்து, அஞ்சு கோடி ரூபாயை, மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்திருக்காங்க.
'ஸ்பான்சர்' மூலமா, ரூ.22.79 லட்சம் மதிப்புக்கு முக கவசம், கையுறை, சானிட்டைசர் பாட்டில் வாங்கிக் கொடுத்திருக்காங்க,''''துாய்மை தொழிலாளிகளுக்கு முக கவசம், கிருமிநாசினி திரவம் கொடுக்கிறோம்னு சொல்லி, எதிர்க்கட்சிக்காரங்க, வழக்கம்போல, அரசியல் செய்ய முயற்சி பண்றாங்க.
அரசியல் செய்யாம, நோய் தொற்று பரவாம இருக்கறதுக்கு, உதவி செய்யணும்னு மக்கள் நெனைக்கிறாங்க,'' என்றபடி, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டாள் சித்ரா.காந்திபுரம், கிராஸ்ட் கட் ரோட்டை கடந்து சென்றபோது, ''அக்கா, 'கொரோனோ' நிவாரண நிதிக்கு, மூன்றெழுத்து ஜவுளிக்கடைக்காரரு, ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்திருக்காரு, தெரியுமா,'' என, கேட்டாள் மித்ரா.''ஆமாப்பா, கேள்விப்பட்டேன். 'வாட்ஸ்அப்'புல குறுஞ்செய்தியா வந்துச்சு. நம்மூர்ல ஏகப்பட்ட நிறுவனங்கள் இருக்கு; வேறெந்த நிறுவனமும் நிதி கொடுக்க இன்னும் முன்வரவில்லை. 'வாட்ஸ்அப்' குழுக்கள்ல மட்டும், உபதேசம் சொல்லி, 'மெசேஜ்' போடுறாங்க,'' என்றாள் சித்ரா.சற்று நேரத்தில் இருவரும் ராமலிங்கம் காலனிக்கு சென்றடைந்தனர். அங்குள்ள பள்ளி மைதானத்துல, காய்கறி சந்தை அமைக்கப்பட்டு இருந்தது. போதிய சமூக இடைவெளி விட்டு, வியாபாரிகள் காய்கறிகள் விற்றுக் கொண்டிருந்தனர்.
அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, அண்ணா காய்கறி மார்க்கெட்டுல வியாபாரிகள் ரெண்டு கோஷ்டியா இருக்காங்க. மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்டுல கடை போடுறதுக்கு, கார்ப்பரேஷன் அனுமதி கொடுத்துச்சு; வியாபாரிங்க சரியா பயன்படுத்திக்கிடலை. அதனால, மார்க்கெட்டையே இழுத்து மூடிட்டாங்க.
மக்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாதுங்கிறதுக்காக, ராமலிங்கம் காலனி ஸ்கூல் பிளே கிரவுண்ட்டுல காய்கறி சந்தை ஏற்பாடு செஞ்சிருக்காங்க,'' என்றாள்.அங்கிருந்து, ஆர்.எஸ்.புரம் வழியாக, தியாகி குமரன் மார்க்கெட்டை நோக்கி ஸ்கூட்டரை செலுத்தினாள் சித்ரா.ஆர்.எஸ்.புரத்தில், கிருமி நாசினி தெளிக்கும் பணியில், மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் படுமும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, கார்ப்பரேஷன் ஹெல்த் டிபார்ட்மென்ட்டுக்காரங்க, ரொம்பவே மெனக்கெடுறாங்க. அவுங்களுக்கு 'சப்போர்ட்' பண்ணி, இன்ஜி., செக்சன்ல சில அதிகாரிங்க, 'டவுன் பிளானிங்' அதிகாரிங்க சில பேரு களத்துல இருக்காங்க. மத்தவங்க, வீட்டுக்குள்ள முடங்கியிருக்காங்க. மினிஸ்டர் விழா நடத்துனா மட்டும், முக கவசம் அணிஞ்சுக்கிட்டு, 'போஸ்' கொடுக்க வர்றாங்க.''பேரிடர் ஏற்படுற சமயங்கள்ல, அனைத்து ஊழியர்களையும் களமிறக்கணும்.
அதுக்கேத்த மாதிரி, 'ஒர்க் டீம்' ரெடி பண்ணனும். ஒவ்வொரு வேலைக்கும் ஒரு டீம்னு பம்பரமா சுத்தணும். அதை விட்டுட்டு, என்.ஜி.ஓ.,க்கள் தயவுல காலத்தை தள்ளிக்கிட்டு இருக்காங்க கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ்,'' என, பொங்கினாள்.''மித்து, பொறுமையா இரு. கார்ப்பரேஷன்ல என்ன நடக்குதுன்னு சொல்றேன், கேளு! கார்ப்பரேஷன் அதிகாரிங்க பல பேரு, பதவியை மட்டும் விரும்புறாங்க. கஷ்டமான காலங்கள்ல, 'பீல்டு ஒர்க்' செய்றதில்லை. ஓடி ஒளிஞ்சிக்கிறாங்க. அந்த மாதிரியான சமயங்கள்ல, என்.ஜி.ஓ.,க்கள் உதவி பயனுள்ளதா இருக்கு. அதனால, அவுங்களை எப்பவுமே பக்கத்துல வச்சிருக்காங்க'' என்றாள் சித்ரா.தியாகி குமரன் மார்க்கெட் வந்தடைந்ததும், ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, சற்று தள்ளி நின்று இருவரும் வேடிக்கை பார்த்தனர். மார்க்கெட்டுக்குள் ஏகப்பட்ட கூட்டம். சென்ட்ரல் ஜோன் கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ், கடைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர்.
அதைப்பார்த்த மித்ரா, ''நம்ம மக்கள், ஏன், இப்படி இருக்காங்கன்னே தெரியலையே, தினமும் இவ்ளோ கூட்டம் வருதே. நோய் பரவல் மூன்றாவது கட்டத்தை எட்டிப்பார்க்க ஆரம்பிச்சிடுச்சு. அதிகமா பரவ ஆரம்பிச்சா, பாதிப்பு அதிகமாயிடுமே,'' என, கவலைப்பட்டாள்.''திருந்தவே மாட்டாங்க போலிருக்கு,'' என, அங்கலாய்த்தபடி, ஸ்கூட்டரை 'ஆன்' செய்தாள்.ஒப்பணக்கார வீதி வழியாக, வீட்டை நோக்கி, ஸ்கூட்டரை செலுத்தினாள். அப்போது, ராணுவ ஆம்புலன்ஸ் அவ்வழியாகச் சென்றது.அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, ராணுவத்தினரை பாதுகாப்புக்காக நிறுத்தினால்தான், நம்ம மக்கள், வீட்டுக்குள் அடங்கி இருப்பாங்க, போலிருக்கு,'' என்றாள்.ஆமாம் என்பதைபோல், தலையை ஆட்டினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X