ஊரடங்கு அமலில் இருப்பதால், அவரவர் வீட்டுக்குள் இருந்த சித்ரா, மித்ராவும் மொபைல் போன் மூலமே பேசி கொண்டனர்.''ஹலோ.. மித்து, எப்படிடி இருக்கே?''''அக்கா... நாங்க பாதுகாப்போடு இருக்கிறோம். நீங்களும் வெளியே வராதீங்க. சமூக இடைவெளியை கண்டிப்பா கடைபிடிங்க,''''ஏன்டி... எனக்கு தெரியாதா? இந்த வெளி மாநில தொழிலாளர் மாதிரி என்னை நெனச்சுக்கிட்டயா?''''ஏக்கா.. அவங்க என்ன பண்ணாங்க?''''திருப்பூரில் அவங்களை வேலைக்கு வச்சிருந்த நிறுவனங்கள், சம்பளம் மற்றும் செலவுக்கு பணம் குடுத்திருக்காங்க.
ஆனா, பணத்த செலவு பண்ணாம, ஊருக்கு போயிடலாம்னு, தங்களோட 'ஏஜன்ட்'களை வச்சு, அந்தந்த மாநில கவர்மென்ட்கிட்ட, 'தமிழ்நாட்டில்' ஒண்ணும் கவனிக்க மாட்டேங்கிறாங்கன்னு, பொய்யா சொல்ல வச்சிட்டாங்க,''''அடக்கொடுமையே...''''அவங்க பேச்சை நம்பிய, பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வினி யாதவ், உடனே, நம்ம சி.எம்.,க்கு 'டிவிட்டரில்' மெசேஜ் போட்டிருக்காரு.
உடனே, சி.எம்., கலெக்டருக்கு தகவல் சொல்லி, 'வெளிமாநில தொழிலாளர்களுக்கு எல்லா உதவியும் பண்ணுங்கனு சொன்னாரு,''''அப்புறம் என்னாச்சுங்க்கா?''''உடனே லிஸ்ட் எடுத்து, அரிசி, பருப்பு, காய்கறினு, 10 நாளைக்கு தேவையான பொருளை குடுத்திட்டாங்க,''''எப்படி எல்லாம் கவர்மென்ட்டை ஏமாத்தறாங்க பாருங்க.. அக்கா, சொல்ல மறந்துட்டேன், சில பி.டி.ஓ.,க்கள் வீட்டுக்குள்ளயே உக்கார்ந்திட்டு, போனை கூட அட்டென்ட் பண்றதில்லையாம்,''''இது யாருடி?''''கார்ப்ரேஷன் லிமிட்டில் வர்ற யூனியன் பி.டி.ஓ.,க்கள் எதையும் கண்டுக்காததால், அந்தந்த ஊராட்சி தலைவருங்க என்ன பண்றதுனு தெரியாம தவிக்கிறாங்களாம். கலெக்டர் கண்டுகிட்டா பரவாயில்ல,''''ஏன்டி மித்து, கலெக்டர் ஆபீசில் இருந்த ஒரு பண்டல் 'மாஸ்க்' மினிஸ்டரின் ஆட்கள் எடுத்துட்டு போயிட்டாங்களாம்,''''தெரியலீங்களே.. அது என்ன விஷயம்''''சமீபத்தில், கலெக்டர் ஆபீசில், மினிஸ்டர் கிட்ட தன்னார்வலர்கள் சிலர் பல ஆயிரக்கணக்கில் 'மாஸ்க்' கொடுத்தாங்களாம். பங்ஷன் முடிஞ்சு கிளம்பும்போது, மினிஸ்டரின் ஆட்கள், ஒரு பண்டலை துாக்கிட்டு போயிட்டாங்களாம்.
அதிகாரிகளும் ஒண்ணும் சொல்லலையாம்,''''ஏங்க்கா... அவங்க வாங்காம போனாத்தான் அதிசயம்.'' என சிரித்த மித்ரா, ''தாராபுரத்தில், வெளிநாடு போயிட்டு வந்த ஒருத்தர் சுதந்திரமா சுத்தி திரிஞ்சாராம்,''''அரசாங்கம், எவ்ளோ கஷ்டப்படுது. அத புரிஞ்சுக்காம, சிலர் இப்படி பண்றது நல்லாவேயில்லைடி'' ''உண்மைதாங்க்கா... இவர், அடிக்கடி 'பாரின் டிரிப்' போவாராம். இந்தவாட்டி போயிட்டு வந்ததை அவர் மறைச்சிட்டாராம்.
ஆனா, தன்னோட பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதை பார்த்த ஒருவர், கலெக்டருக்கு தகவல் சொல்லீட்டாரு. அதனால், அவரை தனிமைப்படுத்துங்கனு, கலெக்டர் ஆர்டர் போட்டாராம்,''''அப்புறம் என்னாச்சுடி?''''ரெவின்யூ அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நபர் வீட்டுக்கு போய், அட்வைஸ் செஞ்சு, தனிமையில் இருக்குமாறு சொன்னாங்களாம்,''''அக்கா... ஜி.எச்., மேட்டர் தெரியுமா?''''ம்...ஹூம்... என்னது?''''அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா சிறப்பு வார்டு அமைச்சிருக்காங்க. இதில், ஒரு சில டாக்டர்கள் மட்டுமே சிரத்தையுடன் டியூட்டி பார்க்கிறாங்களாம். ஒரு சிலர், ஆஸ்பத்திரிக்கு வந்து 'சைன்' பண்ணிட்டு, வீட்டுக்கு போயிடறாங்களாம்,''''அதேமாதிரி, தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் பணிபுரிய, டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களது குடும்ப நிலையை சொல்லி அழுது புலம்பி அந்த வார்டுக்கு போக மாட்டேனு சொல்றாங்களாம். இதை எப்படி 'சால்வ்' பண்றதுன்னு, ஆபீசர்ஸ் திணறி நிற்கின்றனராம்,''''ஆமாமா... கஷ்டம்தான். என்னதான், கலெக்டர் எச்சரிக்கை செஞ்சாலும், சிலர் திருந்தற மாதிரி தெரியலைடி?''''யாருங்க்கா...?''''திருப்பூரிலுள்ள பெரிய மெடிக்கல்ஸில், முக கவசத்தை அதிக விலைக்கு விக்கிறாங்கன்னு, ஒருத்தர் தாசில்தாருக்கு போன் பண்ணினாராம். அவரோ, கலெக்டர்கிட்ட சொல்லுங்க'னு, சொல்லியிருக்கார். இப்படி அதிகாரிகளே ஒருத்தர் மீது ஒருத்தர் துாக்கி போட்டாங்கன்னா, பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா சொல்லு மித்து?''''வாஸ்தவங்க்கா. இதேமாதிரி, என்னதான், ஊரடங்கினாலும், சீட்டாட்டம், சரக்கு விற்பனை படுஜோரா நடக்குதாம்,''''இவங்களை திருத்தவே முடியாதுடி''''சரியா, சொன்னீங்க. உடுமலை சப்-டிவிஷனில் பல இடங்களில், சாராயம் காய்ச்சி விக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். 'டாஸ்மாக்' இல்லாததால், இவங்களுக்கு சவுரியமா போச்சாம்,''''ஏன், போலீசுக்கு தெரியாதா?''''அவங்களுக்கு தெரியாமா இருக்குமா? எல்லாம், 'சம்திங்... சம்திங்...'தான். இதேபோல, 'குடி' பேர் கொண்ட ஸ்டேஷன் லிமிட்டில், புதுசா ஒருத்தர் சரக்கு வித்துட்டு இருந்திருக்காரு.
இத தெரிஞ்சுகிட்ட பழைய ஆட்கள், போலீசுக்கு போட்டு குடுத்திட்டாங்க,''''உடனே, ஆபீசர், சிங்கம் சூர்யா மாதிரி 'படபட'ன்னு போயி, அந்த ஆசாமியை புடிச்சிட்டு, 500 பாட்டிலை 'சீஸ்' பண்ணியிருக்கார்,''''அடடே... பரவாயில்லையே''''அக்கா... மீதி கதையையும் கேளுங்க''''ம்... சொல்லுடி''''அந்த ஆபீசர் புடிச்சது, 500, கணக்கு காட்டியது, வெறும், அஞ்சு பாட்டில்தானாம். மீதமுள்ள பாட்டிலை, ரெகுலராக 'சரக்கு' ஓட்டுற ஆட்களுக்கு மாத்தி விட்டுட்டு, அதுக்கான பணத்தையும் வாங்கிட்டாராம். இப்படி சட்ட விரோத செயல்களுக்கு, போலீசே துணை போனா, நாடு உருப்பட்ட மாதிரிதான்,''''ஓ.கே., மித்து. நான் போய் யோகா செஞ்சிட்டு, கொரோனாவை தடுக்கிற கபசுர நீர் தயாரித்து, எல்லாருக்கும் குடுக்கணும். ஓ.கே., பைடி,''''ஓ.கே.,ங்க்கா...'' என மித்துவும், மொபைல் போனை அணைத்தாள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE