சென்னை: 'கொரோனாவை விட கொடியது, கமலின் டுவிட்டர் பதிவு' என, அவரை 'நெட்டிசன்கள்' கிண்டலடித்துள்ளனர்.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல், தன்னை தாமாகவே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ரசிகர்கள், கட்சி தொண்டர்களிடையே, 'டுவிட்டர்' வாயிலாக உரையாடி வருகிறார். அவரின் பல பதிவுகள் குழப்பமாக இருப்பதாகவும், சம்பந்தம் இல்லாமல் போடும் பதிவுகளால், தேவையற்ற விமர்சனம் எழுகிறது என்றும், அவரது கட்சியினரே கூறுகின்றனர்.
'டுவிட்டரில்' நேற்று கமல், 'போருக்கு ஆயுதம் இன்றி, வீரர்களை அனுப்புவது நியாயமா; முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும், மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசு உடனடியாக, மருத்துவ ஊழியர்களின் கோரிக்கையை, போர்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்' என, கூறியுள்ளார்.

மாவட்ட செயலர்களுக்கு, டுவிட்டர் பதிவை ஒன்றை, கமல், நேற்று முன்தினம் அனுப்பியுள்ளார். அதில், 'இது ஒரு நோய் நரகமல்ல; இதை வெல்வது உறுதி. போலி அரசியல் பூசாரிகள், போக்கிடம் இல்லாமல் திரிவர். அவர் கூற்றுக்கு இரையாகாதீர். 'காலி இடம் நிரப்புவதற்கு, நாம் கிடையாது. நாம் புத்துயிர், புதிய உலகம்; ஆதலால், நாளை நமதே' என, கூறியுள்ளார்.
'இப்போது எதற்கு இப்பதிவு' என, அவரது கட்சியில் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். 'இப்படி புரியாத மாதிரி எழுதுவது, கொரோனாவை விட கொடியது' என, கமலின் பதிவை, 'நெட்டிசன்கள்' கிண்டலடித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE