துடில்லி: கொரோனா தொற்று நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தேவையான வெண்டிலேட்டர்கள், மாஸ்க்குகள் உள்ளிட்ட மருத்துவ பாதுகாப்பு சாதனங்களுக்கு பற்றாக்கறை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிப்பதற்காக சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், தற்போது கொரோனாவால் 1251பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். 32 பேர் உயிரிழந்துள்ளனர். 102 பேர் குணமாகியுள்ளனர். இந்நிலையில் 130 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில், பொது சுகாதார அமைப்பு, மற்றும் தனியார் அமைப்புகள் மூலமாக மருத்துவ சாதனங்களின் பற்றாக்குறையை உடனடியாக போக்க முடியாது. லட்சக்கணக்கில் தேவையிருப்பதால், சீனா மற்றும் தென்கொரியா நாடுகளில் இருந்து மருத்துவ உடல் கவசங்கள், சோதனை பொருட்கள் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களை விரைவாக இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சீனாவில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால், அங்குள்ள மருத்துவ சாதன தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.இதன் மூலம் அந்நாடு, இந்தியாவிற்கு 3.8கோடி முகக்கவசங்கள், 6 லட்சத்து 20 ஆயிரம் பாதுகாப்பு சாதனங்களை வாங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறன.

அதே வேளையில் சீன நிறுவனங்களின் மருத்துவ சோதனைப் பொருட்களில் குறையுள்ளதாக சில ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹுவா சன்யிங்,” சீன தயாரிப்பாளர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இதர நாட்டு மக்களின் உயிர்களை காப்பதற்காக, இரவு பகலாக பாடுபட்டு வருகின்றனர். குறையிருப்பின், அதுகுறித்த துறையினருடன் பேசி சரிசெய்வோம்” என கூறினார்.