சென்னை: ''ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும்'' என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சென்னையில் முதல்வர் கூறியதாவது: வங்கிக் கடனுக்கு மாத தவணை வசூலிக்க வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தவணை பிடித்தம் தொடர்பாக எஸ்.எம்.எஸ். வந்துள்ளதை மத்திய நிதி அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
டில்லியில் நடந்த கருத்தரங்கில் தமிழகத்தில் இருந்து 1131 பேர் பங்கேற்றுள்ளனர்; அவர்களில் 515 பேரை கண்டறிந்துள்ளோம். சோதனை நடத்தியதில் 45 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. எனவே மற்றவர்கள் தாமாக முன்வந்து அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவரால் அவர் குடும்பம் மட்டுமின்றி மற்றவர்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். எனவே தாமாக முன்வந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும். ஆரம்ப நிலையிலே சிகிச்சை அளித்தால் குணமடைய வாய்ப்புள்ளது. அவர்களின் முகவரி கிடைக்காததால் சுகாதாரத் துறை செயலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை ஈஷா மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நோய் அறிகுறி இருந்தால் சோதனை நடத்தப்படும். நோய் தொற்று இருந்தால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறோம். கோவில், தேவாலயம், மசூதி அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வெளி நாட்டிலிருந்து வந்த அனைவரையும் பரிசோதனை செய்து வருகிறோம். முன்னெச்செரிக்கை நடவடிக்கை துரிதமாக எடுக்கப்படுகிறது.
ஏப். 14க்கு பின் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும். பொது மக்கள் நலன் கருதி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். ஒட்டுமொத்த மக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியும். நோய் பரவாமலிருக்கவே சட்டம் போடப் படுகிறது; அதை மதித்து நடக்க வேண்டும். நோய் தாக்கம் தெரியாமல் பரவலாக வெளியில் செல்கின்றனர்.
ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம். எனவே தான் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எவ்வித தடையும் இல்லை. வேளாண் பணிகளை மேற்கொள்ளவும் விளைபொருட்களை சந்தைக்கு எடுத்து செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.