சென்னை: ரேஷன் கடைகளில் 'கொரோனா' நிவாரண தொகை இன்று(ஏப்.,2) முதல் வழங்கப்பட உள்ளதால் எந்த புகாரும் ஏற்படாதபடி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு கூட்டுறவு மற்றும் உணவு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மார்ச் 25 முதல் இம்மாதம் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் வேலைக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் கொரோனா வைரஸ் தடுப்பு கால நிவாரணமாக அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் ரொக்கத்துடன் ஏப். மாதத்திற்கு உரிய அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை இலவசமாக வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

அவை ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் இன்று முதல் ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட உள்ளன. ஒரு கடையில் 1300 -- 1500 கார்டுதாரர்கள் உள்ளன. நிவாரணம் வழங்கும்போது கடைகளில் கூட்டம் சேரக் கூடாது என்பதற்காக எந்த தேதி நேரம் வர வேண்டும் என்ற 'டோக்கன்'களை கார்டுதாரர்களின் வீடுகளுக்கு ரேஷன் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் வழங்கியுள்ளனர்.
ஒவ்வொரு கடையிலும் தினமும் தலா 100 கார்டுதாரர்கள் என ஏப்., 15ம் தேதி வரை 35 ஆயிரத்து 244 கடைகள் வாயிலாக 2.01 கோடி கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட உள்ளது. கொரோனா தொற்றை தடுக்க ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் குறிப்பிட்ட துாரத்திற்குள் கார்டுதாரர்களை நிற்க வைப்பதற்காக அடையாள குறியீடுகளும் வரையப்பட்டுள்ளன.