சென்னை: சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது தவறான முடிவு என காங்., முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.
சிறுசேமிப்பு திட்டங்கள், தொழிலாளர் வைப்பு நிதி உள்ளிட்டவற்றின் வட்டியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ஏப்.,1 முதல் நடைமுறையானது. இது தவறான முடிவு என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: சிறுசேமிப்பு திட்டங்கள், தொழிலாளர் வைப்பு நிதி உள்ளிட்டவற்றின் வட்டியை மத்திய அரசு குறைத்தது பொருளாதார அடிப்படையில் சரியாக இருக்கலாம் ஆனால், அது செயல்படுத்தப்பட்ட நேரம் முற்றிலும் தவறானது. தற்போதைய இக்கட்டான நிலையில், தங்கள் சேமிப்புக்கான வட்டியையே மக்கள் நம்பி உள்ளனர். வட்டியை குறைக்க வழங்கப்பட்ட அறிவுரை முட்டாள்தனமானது. அதனை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். பழைய வட்டியே தொடர வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.