மும்பை: 'தனது குழு நிறுவனங்கள், கொரோனாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் 7 நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்கும்' என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பரவி வரும் கொரோனாவை தடுக்க மத்திய அரசு பல்வேறு வழிகளில் போராடி வருகிறது. பிரதமர் அவசர கால நிவாரண நிதிக்கும், மாநில நிவாரண நிதிக்கும் பல்வேறு பிரபலங்களும் நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், 'தனது குழு நிறுவனங்களான, கோல்கட்டா நைட் ரைடர்ஸ், ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட், மீர் பவுண்டேஷன் மற்றும் ரெட் சில்லிஸ் விஎப்எக்ஸ் ஆகியவை 7 நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கும் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: இந்த கடினமான காலத்தில், நீங்களும் உங்களை சுற்றியுள்ள அனைவரும் அயராது உழைக்க வேண்டும். உங்களுக்கு கூட தெரியாமல், உங்கள் தொடர்பு இல்லாதவர்கள் யாரிடமிருந்தும் தொற்று பரவலாம். யாரும் தனிமையாக இல்லை என்பதை அனைவரும் உணர, நாம் நமக்குள் சிறிதளவேனும் உறுதி செய்ய வேண்டும். இந்தியாவும் அனைத்து இந்தியர்களும் ஒரே குடும்பம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.