புதுடில்லி: கொரோனா சிகிச்சைக்கு உதவும் வகையில் அளவில் சிறிய வென்டிலேட்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுக்கள் பல்வேறு வகையில் போராடி வருகின்றன. கொரோனா தொற்று அதிக நபர்களுக்கு பரவும் நிலை ஏற்பட்டால், நாட்டில் வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம்.

இந்நிலையில், நரம்பியல் நிபுணர் தீபக் அகர்வால் என்பவரும், ரோபர்ட் விஞ்ஞானி திவாஹர் வைஷூ என்பவரும் சேர்ந்து, சிறிய அளவிலான போர்டபிள் வென்டிலேட்டரை உருவாக்கி உள்ளனர். AgVa எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வென்டிலேட்டர், மூன்றரை கிலோ மட்டும் எடை கொண்டது. இது அளவில் சிறியதாக இருப்பதால், எந்த இடத்திற்கும் கொண்ட செல்ல முடியும்.
வழக்கமான வென்டிலேட்டர்களில் விலை ரூ.10 லட்சம் வரை இருக்கும் நிலையில், இந்த போர்டபிள் வென்டிலேட்டர் ரூ.1.5 லட்சத்துக்கு கிடைக்கிறது. இந்த வென்டிலேட்டர்கள் கொரோனா சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலையில், மாதம் 20 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வரை தயாரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கோரிக்கையின் அடிப்படையில், இந்த வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய, உதவுவதாக மாருதி சுஸூகி நிறுவனமும் தெரிவித்துள்ளது.