ஆயுர்வேத சிகிச்சையால் கொரோனாவிலிருந்து மீண்டாரா இளவரசர் சார்லஸ்?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆயுர்வேத சிகிச்சையால் கொரோனாவிலிருந்து மீண்டாரா இளவரசர் சார்லஸ்?

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (11)
Share
PrinceCharles,Ayurveda,treatment,Minister,AYUSH,AYUSHdrugs,Covid19,இளவரசர்,சார்லஸ்,ஆயுர்வேதம்

புதுடில்லி: பெங்களூருவை சேர்ந்த ஆயுர்வேத நிபுணர் ஒருவர் பரிந்துரைத்த மருந்தின் மூலம், இளவரசர் சார்லஸ் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார் என ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார். ஆனால் இதனை இளவரசர் சார்லஸ் தரப்பு மறுத்துள்ளது.

உயிர் கொல்லி கொரோனா, உலக நாடுகளை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரச குடும்பத்தையும் இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை. பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கூறுகையில், 'பெங்களூரில் சக்யா எனும் ஆயுர்வேத நிலையத்தை நடத்தி வரும் நிபுணர் அளித்த, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருந்தை பிரிட்டன் இளவரசர் சார்லஸ் எடுத்துக் கொண்டார். இதன் மூலம் முழுவதுமாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார்.


latest tamil news



முறையாக பரிசோதிக்கும் முன் மருந்துகளை பரிந்துரைக்க நாங்கள் கூறுவதில்லை. அதனால் தான் எப்போதும் 'தடுப்பு மருந்து' என கூறி வருகிறோம். இதில் பக்கவிளைவுகள் இருக்காது. கொரோனா தடுப்பு மருந்தாக பலர் ஹோமியோபதி மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.

பாரம்பரிய மருந்துகளால் கொரோனாவை ஒழிக்க முடியும். சீனாவின் ஹூபே மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், 3 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய சிகிச்சையான டி.சி.எம்., முறையை பயன்படுத்தினர். இந்தியாவிலும் பாரம்பரிய சிகிச்சை முறை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மறுப்பு:


இந்நிலையில், அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் பேச்சை மறுத்துள்ள இளவரசர் சார்லஸின் செய்தி தொடர்பாளர், 'இளவரசர் சார்லஸ் ஆயுர்வேதத்தால் குணமடைந்தார் என்ற தகவல் தவறானது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் மருத்துவ ஆலோசனைகளை அவர் பின்பற்றினார்' என விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X