கொரோனாவை வென்ற நாடுகளை பின்பற்றும் இந்தியா | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனாவை வென்ற நாடுகளை பின்பற்றும் இந்தியா

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (10)
Share

புதுடில்லி : கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்த சீனா , ஜெர்மனி மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளின் திட்டம் மற்றும் செயல்முறைகளை நடைமுறைப்படுத்தி நோயை கட்டுக்குள் கொண்டு வர இந்தியா முயற்சி செய்து வருவதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் பல நாடுகளையும் அச்சுறுத்துவதுடன் அழிவுகளையும் அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறது. இதனை கட்டுக்குள் வைக்கவும் , தேவையான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய அரசு போராடி வருகிறது. கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மக்களில் வீடுகளில் இருந்து நோய் பரவுதலை கட்டுப்படுத்த வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கொரோனாவை வெல்ல இன்னும் சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே தற்போதையநாட்டின் நிலைமையாக உள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ள அரசும் பல விதங்களில் முயற்சி செய்து வருகிறது. கொரோனா பாதித்த சில நாடுகள் சில சிறப்பான தொழில்நுட்பங்கள் மற்றும் திட்டங்களால் அதை கட்டுக்குள் கொண்டு வந்து அம்முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அவை சீனா, ஜெர்மனி மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் தான். அங்கு பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்யவும் இந்தியாதிட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.


latest tamil news



தொடர்ந்து, அந்த 3 நாடுகளில் எந்தெந்த துறைகளில் ஒத்துழைப்பை பெற முடியும் , என்னென்ன மருத்துவ உபகரணங்களை பெற முடியும் என்பது குறித்து ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகுமாறு இந்திய தூதரங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பரவலான பரிசோதனை அணுகுமுறையையும், அறிகுறிகளுடன் கொரோனா பரவல் சந்தேகத்துக்கு உரியவர்களை டிஜிட்டல் முறையில் கண்காணிக்கவும் சிறப்பான விதத்தில் செயல்பட்ட தென்கொரியாவை பின்பற்ற இந்தியா விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதித்தவர்களின் தடங்களை அறிந்ததிலும், சிகிச்சைக்கான உத்தியை வகுத்ததிலும் தென்கொரியாவின் நடைமுறை உலகளவிலான அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நாம் எதிர்காலத்திற்காக போராட வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக சிறந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பெற உலகளாவிய சந்தையை நாடுகிறோம். சீனாவில் இருந்தும் சில உபகரணங்களை பெற பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளோம். மேலும் பரிசோதனைக்கூட வசதிகளை உண்டாக்குவது தொடர்பாக அமெரிக்காவின் ஒத்துழைப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவுடன் இந்திய வெளியுறவுத்துறைஅமைச்சர் ஜெய்சங்கர் தொடர்பு கொண்டு பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X