பீய்ஜிங்: சீனாவில், கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில், இன்று துக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுதும், கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்து வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை, 10 லட்சத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை, 50 ஆயிரத்தை தாண்டியிருப்பதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்த வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில், 81 ஆயிரத்து, 620 பேர்,பாதிக்கப்பட்டனர். அதில், 3,322 பேர் உயிரிழந்துள்ளனர். 76 ஆயிரத்து, 571 பேர், சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். மீதமுள்ள, 1,727 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர, அறிகுறிகள் இன்றி, 1,027 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அதில், வெளிநாடுகளில் இருந்து வந்த, 22 பேரும் அடங்குவர். இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள தங்கள் மக்களை, நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கையில், சீனா இறங்கியுள்ளது. வெளிநாடுகளில் படிக்கும் சீன மாணவ - மாணவியர், அதிக எண்ணிக்கையில், நாடு திரும்பி வருகின்றனர்.வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில், மொத்தம், 800 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. அதில், பாதிக்கும் மேல், சீன மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில், சீனாவில், இன்று துக்க நாள் அனுசரிக்கப்பட்டது. நாடு முழுதும் உள்ள தேசிய கொடிகள், அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாட்டு மக்கள், இன்று காலை, 3 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு மக்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE