'கொரோனா' வைரசால், நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியில் இருந்து மக்களை மீட்டால், பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்ற, மிகப் பெரிய தலைவராகி விடுவார் என, அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர், 'கொரோனா' வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். 50 ஆயிரத்திற்கும் அதிகமானோரை, இந்த தொற்று பலி வாங்கி உள்ளது. நம் நாட்டில், 2,500க்கும் அதிகமானோருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 60க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள், அதிகரித்து வருகிறது.
அழைப்பு:
இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து, ஆட்சி அதிகாரத்தில் இருந்த அரசுகள், இதுவரை சந்தித்திராத நெருக்கடியை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, சந்தித்து வருகிறது. 'சமூகம், பொருளாதாரம் மற்றும் சுகாதார துறையில், இத்தனை கடுமையான நிலையை, நம் நாடு இதுவரை கடந்து வந்ததில்லை' என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சுகாதார நெருக்கடியில் இருந்து, நாம் மீண்டு வர வேண்டியது, இன்றைய முதல் தேவையாக கருதப்படுகிறது. எனவே தான், 21 நாட்கள் முழு அடைப்புக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள், கடைகள், அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், வழிபாட்டு தலங்கள், பொது போக்குவரத்து, கட்டடப் பணிகள் என, அனைத்தும் முடங்கி உள்ளன. மக்கள், வீடுகளுக்குள் தனித்தனியே இடைவெளியை பின்பற்றி வாழுமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி, எந்த அறிவிப்பு வெளியிட்டாலும், அதை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர் மற்றும் விமர்சகர்கள் கூட, இந்த முழு அடைப்புக்கு, முழு ஆதரவு அளித்து வருகின்றனர். நாட்டில், 75 சதவீத மக்கள், தங்கள் மருத்துவ தேவைகளுக்கு, தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர். அவை சிறப்பாக பராமரிக்கப்படுவதாலும், நவீன வசதிகள் கிடைப்பதாலும், அதிகம் செலவு செய்யவும், மக்கள் தயங்குவது இல்லை.
எனவே, முதல்கட்டமாக, கொரோனா பரி சோதனை மற்றும் சிகிச்சைக்காக, அரசு சுகாதாரத்துறையின் கட்டமைப்பை உயர்த்த நினைத்த மத்திய அரசு, அதற்காக, 15 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதியை ஒதுக்கியது. மக்கள் நிவாரணப் பணிகளுக்கான நன்கொடை வசூலுக்கு, 'பி.எம்., கேர்' என்ற சிறப்பு அறக்கட்டளையை உருவாக்கி, அதன் மூலம், நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது.
நடவடிக்கை:
குஜராத் முதல்வராக, நரேந்திர மோடி பதவி ஏற்றுக் கொண்ட காலகட்டத்தில், 2001ல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் துவங்கி, பாக்.,கில் நடத்தப்பட்ட 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' வரை, பல்வேறு சவால்களை, மோடி சந்தித்துள்ளார். இவை அனைத்தையும், சாதுர்யமாக எதிர்கொண்டு, அதை வென்று, தனக்கு சாதகமாக்கி கொண்டுள்ளார். இந்த கொரோனா அரக்கனுக்கு, மேற்கத்திய நாடுகள், பெரும் விலை கொடுத்துள்ளன.
பிரதமர் மோடியின் துரித நடவடிக்கையால், பெரும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டு, இந்த நெருக்கடிகள் விலகும் பட்சத்தில், மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்குரிய தலைவராக நரேந்திர மோடி கருதப்படுவார்.கடந்த இரண்டு லோக்சபா தேர்தலை விட, பன்மடங்கு மக்கள் ஆதரவு, அவருக்கு கிடைக்கும் என்பது, அரசியல் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -