ஊரடங்கால் வந்த உன்னதங்கள்!

Updated : ஏப் 05, 2020 | Added : ஏப் 05, 2020 | கருத்துகள் (1) | |
Advertisement
'தினமலர்' நாளிதழின், உரத்த சிந்தனை பகுதியில், ஊருக்குள் புகும் யானைகள் தொடர்பாக நான் எழுதிய கட்டுரை, ஓராண்டுக்கு முன், வெளிவந்தது. அந்த கட்டுரையை, நான் சொல்ல சொல்ல, என் உதவியாளர், தமிழில் தட்டச்சு செய்தார். அதை, 'தினமலர்' இணையதள முகவரிக்கு அனுப்பினேன். தகுதி இருப்பதாக, ஆசிரியர் குழு கருதியதால், பிரசுரித்தது.வெற்றி வீரன்இந்த முறை, கொரோனா வைரஸ் தாக்கம்
ஊரடங்கு, உன்னதங்கள், உரத்த சிந்தனை

'தினமலர்' நாளிதழின், உரத்த சிந்தனை பகுதியில், ஊருக்குள் புகும் யானைகள் தொடர்பாக நான் எழுதிய கட்டுரை, ஓராண்டுக்கு முன், வெளிவந்தது. அந்த கட்டுரையை, நான் சொல்ல சொல்ல, என் உதவியாளர், தமிழில் தட்டச்சு செய்தார். அதை, 'தினமலர்' இணையதள முகவரிக்கு அனுப்பினேன். தகுதி இருப்பதாக, ஆசிரியர் குழு கருதியதால், பிரசுரித்தது.


வெற்றி வீரன்


இந்த முறை, கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக, ஊரடங்கு உத்தரவு அமலாகி இருந்ததால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இயங்கவில்லை.சாதாரண அலுவலர்கள் பணிக்கு வரவில்லை; பேருந்து, ரயில், விமானம் என, எந்த பொது போக்குவரத்து சாதனங்களும் இயங்கவில்லை. மூன்று வாரங்கள் வீட்டில் தான் முடங்கியிருக்க வேண்டிய நிலை. ஊரடங்கின் முதல் நாள், மனதை கட்டுப்படுத்தி, வீட்டின் உள்ளேயே இருந்து விட்டேன். அன்று வந்த நாளிதழ்கள் அனைத்தையும் வரி விடாமல் படித்து விட்டேன். நன்றாக துாங்கி எழுந்தேன். மாலையில், மிச்சம் மீதி இருந்த நாளிதழ் இணைப்புகளை படித்து முடித்தேன். இரவில் சிறிது நேரம், 'டிவி' பார்த்து, துாங்கி விட்டேன்.இரண்டாம் நாள் காலை எழுந்ததும், 'இன்று என்ன செய்யப் போகிறோம்...' என்ற எண்ணம் மனதுக்குள் எழுந்தது. செய்தித்தாள் வாசிப்பை தவிர்த்து, வேறு ஒன்றும் இல்லை; என்ன செய்யலாம் என, யோசித்தேன்.செய்தித் தாள்களை வேகமாக வாசித்து முடித்தேன். வாளியில் தண்ணீர் எடுத்து, ஷாம்பு, துணி சகிதமாக, என் காரை துடைக்க துவங்கினேன். இது நாள் வரை, அந்த காரில் பயணம் செய்துள்ள நான், துடைத்ததே இல்லை; வேலைக்காரர்கள் பார்த்துக் கொள்வர்.நானே கழுவி, துடைத்து, 'பாலிஷ்' போட்டதில், கார் இன்னும் சுத்தமாக காட்சியளித்தது. வெற்றி வீரனைப் போல, வீட்டின் உள்ளே சென்றேன். 'காரை பார்த்தாயா...' என, மனைவியிடம் கேட்டேன். அவள், 'எப்படிங்க, இவ்வளவு பளீச்சினு இருக்குது...' என்றாள், என்னை ஊக்கப்படுத்தும் விதமாக. 'எல்லாம், ஐயாவின் கைவண்ணம் தான்...' என்றேன்பெருமிதமாக.அந்த பெருமித உணர்வு, கட்டுரை எழுதி, தினமலர் நாளிதழுக்கு அனுப்பலாமே என்ற உணர்வை எனக்கு அளித்தது. என் உதவியாளரை தொடர்பு கொள்ள முடியவில்லை. நானே எழுதி, 'வாட்ஸ் ஆப்' செய்து விடுவது என நினைத்து, வெள்ளை பேப்பரில் எழுத துவங்கினேன்.ஒரு பக்கம் கூட எழுதியிருக்க மாட்டேன்; 'நாமே ஏன், தமிழில், 'டைப்' செய்யக் கூடாது; நேரம் தான் இருக்கிறதே...' என்ற நினைப்பு வந்தது. கம்ப்யூட்டரை, 'ஆன்' செய்து, டைப் செய்யத் துவங்கினேன்.அதற்கு முன், எனக்கு தமிழில் டைப் செய்யத் தெரியாது; உதவியாளர் தான், அந்த கம்ப்யூட்டரில், தமிழில் டைப் செய்வார்.

எனக்கு, ஒன்றிரண்டு வார்த்தைகள் தான், 'வாட்ஸ் ஆப்பில்' டைப் செய்யத் தெரியும்.எனினும், இந்த கட்டுரை முழுவதையும், நானே டைப் செய்து, 'மெயில்' செய்து விடுவது என, உறுதிபூண்டேன்; களத்தில் இறங்கினேன். கொரோனா என டைப் செய்ய, மூன்று நிமிடங்கள் பிடித்தன. கீ போர்டை பார்த்து பார்த்து, டைப் செய்தேன். டைப் செய்து முடிப்பதற்குள் வார்த்தைகள் தானாக, கம்ப்யூட்டரில் வந்தன. அதில், சரியான வார்த்தைகளை, 'கிளிக்' செய்ததும், அழகிய வரிகள் உருவாகின.
ராஜகுமாரி


ஆர்வம் அதிகரித்து, தொடர்ந்து டைப் செய்யத் துவங்கி, ஊரடங்கின், மூன்றாவது நாளில் இந்த கட்டுரையை, நானே முழுவதும் டைப் செய்து, நான்காவது நாளில், 'தினமலர்' இணையதள முகவரிக்கு அனுப்பி விட்டேன். அன்று நான் அடைந்த ஆனந்தம், என், 60 வயது வாழ்க்கையில், இதுவரை அடையாதது.'நேரம் கிடைத்தால், முயற்சி இருந்தால், நம்மாலும் எதையும் செய்ய முடியும்' என்ற நம்பிக்கையை இந்த கட்டுரை ஏற்படுத்தியது.தினமும் காலையில் எழுந்து, அவசரமாக உடற்பயிற்சி செய்து, அடித்து, பிடித்து அலுவலகம் சென்ற என் முன், மனைவி வந்து நின்ற போதெல்லாம், அவளின் அழகு என்னை வசீகரிக்கவில்லை. ஆனால், வீட்டில் சும்மா, நானும், அவளும் முடங்கிக் கிடந்த போது, அவள் எனக்கு ராஜகுமாரி போல தெரிந்தாள். அவளுக்கும் என்னை, ராஜகுமாரன் போலத் தெரிந்திருக்க வேண்டும். இருவருக்குள் நீண்ட காலமாக விட்டுப் போயிருந்த அன்னியோன்னியம் ஊரடங்கின் இரண்டாவது நாளிலேயே மலர்ந்திருந்தது.அடுத்தடுத்த மணித் துளிகள், இருவரும், பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதில் போனது. 'வாஷிங் மிஷினை' எப்படி இயக்குவது என்பதை அறியாமல் இருந்த நான், மனைவியிடம் ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்து, 'டப்' நிறைய, துணிகளை துவைத்து முடித்து விட்டேன்.அதுபோல, சமையல் கூடமே சென்றிராத எனக்கு, அது அருமையான இடம் என்பதை உணர்த்தியது. சமையலில் மனைவி ஈடுபட்டிருந்த போது, காய்கறிகளை தண்ணீரில் நனைத்து, துடைத்து கொடுப்பது, அரிந்து கொடுப்பது, கொத்தமல்லி, கறிவேப்பிலையை ஆய்ந்து கொடுப்பது, வெங்காயத்தை உரித்து கொடுப்பது என, சின்னச் சின்ன வேலைகளை சுகமாக செய்யத் துவங்கினேன்; உடலும், மனமும் இன்புற்றன.நாளிதழ்களிலும், 'டிவி' நிகழ்ச்சிகளிலும் தான், 21 நாட்களை கழிக்க வேண்டும் போல என, எண்ணியிருந்த எனக்கு, இரண்டாவது நாளே, இன்பமாக இருந்தது.நிறைய புத்தகங்கள், அலமாரியில் இருந்தன. அவற்றில், இரண்டு புத்தகங்களை எடுத்து, படிக்க உட்கார்ந்தேன். சில மணி நேரத்தில் படித்து முடித்து விட்டேன்; மனம் இன்னும் விசாலமடைந்தது. மாலை நேரத்தில், வீட்டின் வராந்தாவில் அமர்ந்து, நானும், மனைவியும், எங்கள் வீட்டில், உறவினர் வீடுகளில் நடந்த நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்து, இன்பமாக பேசிக் கொண்டிருந்தோம். வாகனங்களே ஓடாததால், சுத்தமாக மாறியிருந்த காற்று, எங்களை தாலாட்டியது. அவ்வப்போது வந்த தொலைபேசி அழைப்புகளை, ஒன்றிரண்டு வினாடிகளில் பேசி முடித்து, அந்த பேச்சு விபரங்களை, மனைவியிடம், மணிக்கணக்காக விவரித்தேன். இதுபோன்ற உரையாடல், இதற்கு முன், எங்களுக்கு வாய்த்ததில்லை. அவ்வளவு அற்புதமாக, நேரம் போனது.இதற்கு முன், அலுவலகத்தின் ஏராளமான விவகாரங்களை தலைக்குள் ஏற்றி, இரவில் தாமதமாக வீடு வந்து சேர்ந்த பிறகும், நினைவில் இருந்து மறையாத அந்த நினைவுகள், பல நாட்கள் துாக்கத்தை பாதித்துள்ளன. ஆனால், ஊரடங்கு அமலில் இருந்த அந்த மூன்றாவது நாள் இரவிலும், நல்ல துாக்கம் வந்தது.எந்த நினைப்பும் இன்றி, 'மைண்ட் பிரஷ்'ஷாக இருந்தது.

போதாக்குறைக்கு, எங்களின் அன்னியோன்னியத்தை, 'வாட்ஸ் ஆப்' வேறு அதிகரித்தது. நானும், மனைவியும் வால்பாறையில்.
கிருமி நாசினி


மகன்கள் இருவரில் ஒருவர் டில்லியில், மற்றொருவர் ஜெர்மனியில். அவர்கள் அங்கிருந்தவாறு, 'வீடியோ கால்' செய்து எங்களுடன் தொடர்பு கொண்டனர்.எங்களுக்குள் இருக்கும், 'வாட்ஸ் ஆப் குரூப்'பில், நான்கு பேரும் பேசி, ஆடியோ பைல்களாக பகிர்ந்து, அவற்றை ஒவ்வொருவரும் கேட்டு, நேரில் இருப்பது போல சுகமாக உணர்ந்தோம். நேரம் இனிதாக கழிந்தது.நேரில் பார்த்த போது மட்டும், ஆண்டுக்கு ஒன்றிரண்டு முறை பேசி, பழகிய துாரத்து சொந்தங்களை, போனில் தொடர்பு கொண்டு, அவர்களின் நல ஷேமங்களை விசாரிக்க துவங்கினேன்.மனம் இன்னும் மென்மையாகி, நானே பஞ்சு போல உணரத் துவங்கினேன். அந்த அளவுக்கு நேரம் நிறைய இருந்தது.நான்காவது நாளும் வந்தது. படுக்கையிலிருந்து எழும் போது, 'இன்னும், 17 நாட்கள் இருக்கின்றன; எப்படி நேரம் போகப் போகிறது என தெரியவில்லையே...' என்ற நினைப்பே வரவில்லை. பந்து போல எழுந்தேன்.இப்படியே, நான் அறிந்த பலருக்கும், பல விதமான இன்பங்களை, கொரோனா கொடுத்திருந்தது. கூடவே, சில சிரமங்களையும் சேர்த்து கொடுத்திருந்தது. எனினும், நாம் யார், எதற்காக பிறந்துள்ளோம், பிறந்ததன் பொருள் என்ன, இயந்திரத்தனமான வாழ்க்கை தேவையா என்பன போன்ற கேள்விகளுக்கு, ஊரடங்கு காலம் பதிலளித்திருந்தது.கொரோனா தொற்று உடையவரின் நெருக்கமான மூச்சுக்காற்று, அவரின் தும்மலில் வெளிவரும் துகள்கள் மற்றும் அத்தகையோரின் நெருக்கமான தொடுதல்கள் போன்றவற்றின் மூலம் தான், கொரோனா வைரஸ் பிறருக்கு பரவும். கை, கால்களை சோப்பு போட்டு நன்கு கழுவி, சுத்தமாக இருந்தால், அந்த நோய் நம்மை அண்டாது என்பது, நாங்கள் அறிந்ததே. எனினும், சுத்தம் சுகம் தரும் என்பதால், வாரத்திற்கு ஒரு முறை தான், 'மாப்' போடப்படும் எங்கள் வீட்டின் தரை, இப்போது தினமும், கிருமி நாசினி கலந்த தண்ணீருடன் துடைத்து எடுக்கப்படுகிறது. ஜன்னல்களும், கதவுகளும் பளிச்சிடுகின்றன. வேலைக்காரர்கள் இல்லாததால், நானே அந்தப் பணிகளை செய்கிறேன்.இதனால், உடற்பயிற்சி செய்தது போல ஆகி விடுவதுடன், வீட்டையும் சுத்தமாக பராமரித்த திருப்தி கிடைக்கிறது.இப்படியே, தினமும், செய்தித் தாள்களை படித்து, வாகனத்தை துடைத்து, வீட்டின் தரையை மெழுகி, சமையலுக்கு உதவி செய்து, மனைவியுடன் இன்பமாக பேசி, வேற்று உலக அன்பான மனிதன் போல, இந்த ஒரு வாரத்திற்குள் நான் மாறி விட்டேன்.அப்போது தான் யோசித்தேன்... நாமே தேவையில்லாமல், ஏதாவது வேலையை அல்லது மன பாரத்தை, நமக்குள் இழுத்து வைத்துக் கொண்டு, அதன் மீது உடல், மனதை வலுக்கட்டாயமாக செலுத்தி, அவ்வப்போது ஆயாசம் அடைந்து, 'என்னடா இது வாழ்க்கை...' என, வாழ்ந்து வந்துள்ளோம். வாழ்க்கை என்பது பரபரப்பில் இல்லை; நிதானமான, ஆரோக்கியமான, அன்பில் தான் உள்ளது என்பதை உணர வைத்து உள்ளது கொரோனா.
காவல் தெய்வம்

அதுபோல, மனிதாபிமானத்தை தழைக்கச் செய்துள்ளது; பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திஉள்ளது.முக்கியமாக, சுகாதார பணியாளர்கள், மருத்துவ ஊழியர்கள் போன்றோர் மீது, சில நாட்களுக்கு முன் வரை, பெரிய அளவில், நல்ல அபிப்பிராயம் கிடையாது. இப்போது அவர்கள், தெய்வங்கள் போல காட்சியளிக்கின்றனர். போலீசார் மீதும், நல்ல எண்ணம் கிடையாது. லஞ்சம் வாங்குபவர்கள், வேலை பார்ப்பது போல நடிப்பவர்கள், பாரபட்சமாக நடந்து கொள்பவர்கள் என்ற எண்ணமே, சில நாட்களுக்கு முன் வரை இருந்தது. அது, இப்போது மறைந்து விட்டது;நடமாடும் காவல் தெய்வங்களாக தெரிகின்றனர்.இத்தகைய மனமாற்றத்தை கொரோனா எனக்கு வழங்கியுள்ளது போல, பிறருக்கும், பிற நல்ல விதங்களில் வழங்கி இருக்கும் என்பது நிச்சயம்!வெ.உத்தமராஜ்

இயற்கை மற்றும் சமூக நலன் விரும்பிதொடர்புக்கு:அலைபேசி: 94434 06641


இ - மெயில்: uthamvlp@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (1)

Kutti Ravi - coimbatore,இந்தியா
16-ஏப்-202011:20:25 IST Report Abuse
Kutti Ravi அருமை. அருமையான கட்டுரை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X