சென்னை : தமிழகத்தில், மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 5 ஆக உள்ளது.
சென்னையில் நிருபர்களை சந்தித்த சுகாதார செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது :
வீட்டுக்கண்காணிப்பில் இருப்பவர்கள்: 90,824 பேர்
அரசின் தனிமை முகாம்களில் இருப்பவர்கள்: 127 பேர்
கண்காணிப்பு முடிந்து திரும்பியவர்கள்: 10,814 பேர்
இதுவரை 4,612 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இன்று, 86 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 85 பேர் டில்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். மற்றொருவர் துபாய் சென்று வந்தவர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது. தனி வார்டில் - 1848 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனா பாதிப்பில், தமிழகம் 2வது நிலையில் தான் உள்ளது. நிலைமை மோசமான பின்னர் சிகிச்சைக்கு வருபவர்களே உயிரிழக்கின்றனர். 28 நாட்கள் கண்காணிப்பில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா உறுதியாகலாம். 2 முறைக்கு மேல் சோதனையில் இல்லை என முடிவு வந்த பிறகே, வீட்டிற்கு அனுப்புவோம்.
ஆய்வகங்களை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறோம். இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் அதிகளவு பரிசோதனை மையங்கள் உள்ளன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மஹாராஷ்டிராவில் அதிகளவு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தாலும், தமிழகத்தில் தான் அதிகளவு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
டில்லி சென்று வந்த 1,246 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் தமிழகம் 2வது கட்டத்தில் தான் உள்ளது. எல்லாரும் இணைந்து தமிழகம் 3வது கட்டத்திற்கு செல்லக்கூடாது என அனைவரும்நினைக்க வேண்டும். அதனை தடுக்க வேண்டும். சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் 30 லட்சம் பேர் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட வாரியாக
தமிழகத்தில் மொத்தம் 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 95 பேரும், கோயம்புத்தூரில் 58 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து,
திண்டுக்கல்-45,
திருநெல்வேலி-38,
ஈரோடு-32,
நாமக்கல், ராணிப்பேட்டையில் தலா-25,
தேனி, கரூரில் தலா-23,
செங்கல்பட்டு-22,
மதுரை-19,
திருச்சி-17,
விழுப்புரம்-15,
திருவாரூர், சேலம், திருவள்ளூரில் தலா-12,
விருதுநகர், தூத்துக்குடி, நாகப்பட்டிணமில் தலா-11,
திருப்பத்தூர், கடலூரில் தலா-10,
திருவண்ணாமலை-8,
கன்னியாகுமரி-6,
சிவகங்கை, வேலூர், தஞ்சாவூரில் தலா-5,
காஞ்சிபுரம், நீலகிரியில் தலா-4,
திருப்பூர்-3,
ராமநாதபுரம், கள்ளக்குறிச்சியில் தலா-2,
பெரம்பலூர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
5 பேர் உயிரிழப்பு
இதனிடையே, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று, தேனி மற்றும் விழுப்புரத்தில் தலா ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் ஏப்.,3 ல் அனுமதிக்கப்பட்ட 75 வயது முதியவர் ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா உள்ளது தற்போது கொரோனா இருந்தது உறுதியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த அவர், துபாயில் இருந்து திரும்பியவர். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்த 60 வயது முதியவர், கொரோனா பாதிப்புடன் கடந்த 1ம் தேதி ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று(ஏப்.,5) அதிகாலை 1.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE