புதுடில்லி: 'கொரோனா' வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பின் விமான சேவைகளை மீண்டும் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கொரோனா வைரஸ் நாடு முழுதும் வேகமாக பரவி வருவதால் மத்திய - மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விமான போக்குவரத்துத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
விமான சேவைகளை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ள 'ஏர் டெக்கான்' விமான நிறுவனம் தன் ஊழியர்கள் அனைவரையும் விடுப்பில் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகள் எப்போது தொடங்கப்படும் என்ற தகவலை அந்நிறுவனம் வெளியிடவில்லை.
இதேபோல் 'விஸ்தாரா' நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் மூன்று நாள் கட்டாய விடுப்பு வழங்கியுள்ளது. அதற்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது. இதைத்தவிர 'இண்டிகோ ஸ்பைஸ் ஜெட் கோ ஏர்' ஆகிய நிறுவனங்கள் தன் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து வழங்கி வருகிறது.
இப்படி விமான நிறுவனங்கள் பெரும் சிக்கலை சந்தித்து வரும் நிலையில் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் விமான நிறுவனங்களின் சிக்கல்களை கருத்தில்கொண்டு ஏப்ரல் 14ம் தேதிக்குப் பின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்க மனமின்றி முடிவு செய்துள்ளோம்.
14ம் தேதிக்குப் பின் தொடங்கப்படும் விமான சேவைகளுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். எனினும் அதன்பின் ஊரடங்கு மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்பட்டால் திட்டமிடப்பட்ட விமான சேவைகளை ரத்து செய்துவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை தவிர இதர விமான நிறுவனங்கள் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பின் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்க முடிவு செய்துள்ளன. ஏர் இந்தியா விமான நிறுவனம் ஏப்ரல் 30ம் தேதிக்கு பின் தன் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. ஏப்., 14ம் தேதி 21 நாள் ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ளதால் அதன்பின் ரயில் சேவைகளை தொடங்க ரயில்வே நிர்வாகமும் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு அதற்கான ஒப்புதலை இதுவரை வழங்காத நிலையிலும் ரயில்வே நிர்வாகம் மறுசீரமைப்பு திட்டங்களை வரையறுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில் சேவைகள் தொடங்கப்பட்டதும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும். பயணியர் அனைவரும் முக கவசங்களை அணிந்துதான் ரயிலில் பயணிக்கவேண்டும்.
'ஆரோக்யா' செயலி மூலம் பயணியரின் உடல்நலம் பரிசோதிக்கப்படும். ரயில் நிலைய வாயிலில் பயணியரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ள பயணியர் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர். ரயில் நிலையங்களில் கூட்டம் சேராமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
ஆதித்யநாத் ஆலோசனை:
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநில எம்.பி.க்களுடன் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: ஏப்ரல் 15ம் தேதி ஊரடங்கு உத்தரவு முடிவடையும் பட்சத்தில் மக்கள் மீண்டும் பொது இடங்களில் புழங்க தொடங்குவர். அனைத்து போக்குவரத்து சேவைகளும் தொடங்கப்படும்.
வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் மக்கள் கூட்டம் கூடாமல் இருக்கவேண்டும். மக்கள் மீண்டும் கூடினால் நாம் இதுவரை எடுத்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் பலனில்லாமல் போய்விடும். எம்.பி.க்களான உங்கள் அனைவரின் உதவியும் எனக்கு தேவை. நாம் அனைவரும் சேர்ந்து பணியாற்றவேண்டும். இதுகுறித்து உங்கள் மனதில் தோன்றும் திட்டங்களை என்னிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.