புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, முன்னாள் பிரதமர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுடன், பிரதமர் மோடி, தொலைபேசி மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவ நிபுணர்கள், சுகாதார பணியாளர்கள், வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர், தொழில் அதிபர்கள், பத்திரிகையாளர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக, தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மருத்துவ வசதிகள்:
நேற்று, முன்னாள் ஜனாதிபதிகள் பிரதிபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர்கள், மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோரை, தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் தலைவர் சோனியா, சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவருமான நவீன் பட்நாயக் உள்ளிட்டோரிடமும் பேசினார்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அகாலி தளம் தலைவர்பிரகாஷ் சிங் பாதல் ஆகியோருடனும், பிரதமர் ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் ஆகியவை குறித்து, அவர்களிடம் பிரதமர் விளக்கினார். வைரஸ் தடுப்புக்காக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும், அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டறிந்தார் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிகரிப்பு:
நம் அண்டை நாடான சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.அமெரிக்காவிலும் ஆயிரக்கணக்கானோர் இந்த நோய்க்கு பலியாகி உள்ளனர். கடந்த சில நாட்களாக நம் நாட்டிலும், இந்த நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன; தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானம், பஸ், ரயில், கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மாத சம்பளதாரர்கள், தினக் கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஆனாலும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அறிக்கை:
இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை, 77 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை, 3,374 ஆக அதிகரித்துள்ளது. 267 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டிலேயே அதிகமாக, மஹாராஷ்டிராவில், 24 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அடுத்தபடியாக, குஜராத்தில், 10 பேரும், தெலுங்கானாவில் ஏழு பேரும், மத்திய பிரதேசம், டில்லி ஆகிய மாநிலங்களில் தலா, ஆறு பேரும் பலியாகி உள்ளனர். மஹாராஷ்டிராவில், 490 பேருக்கும், தமிழகத்தில், 485 பேருக்கும், டில்லியில், 445 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார பாதிப்பு வேலை இழப்பு சி.ஐ.ஐ., எனப்படும், இந்திய தொழில் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள, பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், கொரோனா தாக்கத்தால், இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து, 'ஆன்லைன்' மூலமாக கருத்துக்கணிப்பு நடத்தினர்.
இதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், பெரும்பாலான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் வருமானம், 10சதவீதத்துக்கும் அதிகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாபமும், 5 சதவீதம் குறையும் என கணிக்கப்படுகிறது. எனவே, பெரும்பாலான நிறுவனங்களில், 52 சதவீதம் அளவுக்கு வேலை இழப்பு ஏற்படும் என தெரிகிறது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.